உங்கள் வருகைக்கு நன்றி

இறைவா நீ அழகிய படைப்பாளன்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019


பொதுவாகவே, உமிழ் நீரை பார்த்தால், அனைவருக்கும் அருவருப்பு வரும். ஆனால், ஒரு நாளுக்கு, 0.75 - 1.5 லிட்டர் வரை, வாயில் உமிழ் நீர் சுரக்கிறது. ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் சுரக்கும் உமிழ் நீரை வைத்து, இரண்டு நீச்சல் குளத்தை நிரப்பலாம்.
* உடல் முழுவதும், ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பது, ரத்த சிவப்பணுக்கள். இவை, நரம்பு வழியாக, ஒரு முறை உடல் முழுவதும் சுற்றி வர, ஒரு நிமிஷம் போதும்

* பெரும்பாலும் அனைவருக்கும் கறுப்பு நிறத்தில் தான், கருவிழி இருக்கும். என்ன தான் கறுப்பாக இருந்தாலும், பிறக்கும்போது, நீல நிறத்தில் தான் இருக்கும். வெளிச்சத்தில் இருக்கிற, புற ஊதா ஒளிக்கற்றை தான், குழந்தைகளின் கண்ணுக்கான நிறத்தை கொண்டு வரும்

* நம் கை, கால்களில் நகம் வெட்டின மாதிரி இருக்கும்; கொஞ்ச நாளிலேயே வளர்ந்துவிடும். ஆனால், வேரிலிருந்து முழுமையாக நகம் வளர, கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகும்

* பொதுவாகவே, அனைவருக்கும் அடிக்கடி தோல் உரியும். வாழ்நாள் முழுவதும், உடம்பிலிருந்து மொத்தமாக உரிந்து விழும் தோலின் எடை, கிட்டத்தட்ட, 18 கிலோ

* உடலில் மிக நீளமான உறுப்பு, தோல் தான். நன்றாக வளர்ந்த ஆணின் தோலை முழுதாக நீட்டி அளந்தால், 20 அடிக்கு வரும்

* நம் சிறுநீரகத்தில், 1 மில்லியன், அதாவது,10 லட்சம், 'பில்டர்'கள் உள்ளன. சிறுநீரகத்தால், ஒரு நிமிஷத்துக்கு, 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்

* பெண்களின் கருப்பையில், ஐந்து லட்சம் கருமுட்டைகள் உருவாகும்; ஆனால், 400 முட்டைகளுக்கு தான், குழந்தையாக உருவாக வாய்ப்பு கிடைக்கும்

* நம் மேல் வரும், வியர்வை நாற்றம், ஒவ்வொருவரின் அடையாளம். இரட்டையர்களைத் தவிர, உலகத்தில் அனைவருக்கும், இந்த நாற்றம் மாறுபடுமாம்

* நம் உடலில் ஐந்து லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இந்த வியர்வை சுரப்பிகள் ஒவ்வொன்றும், தினமும், 400 மி.லி., வியர்வையை சுரக்கின்றன 

* சுற்றுப்புறத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும், 90 சதவீத விபரங்கள், பார்வை மூலமாக தான் கிடைக்கிறது

* உங்களுக்கு நீங்களே, 'கிச்சு கிச்சு' மூட்ட முடியாது

* ஒரு பவுண்ட், அதாவது, 454 கிராம், சிமென்ட் கான்கிரீட், அதே எடையிலான மனித எலும்பு என, இரண்டையும் வைத்து சோதனை செய்யபட்டது. அதில், மனித எலும்பு, கான்கிரீட்டை விட, நான்கு மடங்கு வலுவானது என, நிரூபணமாகி உள்ளது

* எதையாவது சுவைக்க வேண்டுமெனில், அந்த பொருள், முதலில், உமிழ் நீரில் கரைய வேண்டும். இல்லையெனில், நம்மால் சுவையை உணர முடியாது 

* சராசரியாக, ஒரு ஆண், ஒரு நாளைக்கு, 10 மில்லியன், அதாவது, 1 கோடி, விந்தணுவை உற்பத்தி செய்ய முடியும் 

* மனிதர்கள், வெப்ப ரத்த உயிரிகள் என்பது, அனைவருக்கும் தெரியும். நம் உடல், 36.5 முதல் 37.5 டிகிரி செல்ஷியஸ், வெப்ப நிலையை தாங்கும். உடல் வெப்பத்தை வைத்து, 3.5 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்க, 30 வினாடி போதும்

* நாம் எவ்வளவு உயரமாக இருந்தாலும், துாங்கும்போது, 1 செ.மீ., உயரம் குறைந்து விடுவோம். காரணம், நம் முதுகெலும்பில் உள்ள குறுத்தெலும்புகள், துாங்கும்போது சுருங்கி விடும்.

Read more...

உடல் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு இணையத்தில் தீர்வு தேடுகுறீர்களா?

சனி, 3 ஆகஸ்ட், 2019


மனநல பிரச்னை குறித்து கூறும், முன்பெல்லாம், உடல்நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு பெரியவர்களிடமோ, மருத்துவர்களிடமோ ஆலோசனை கேட்பர், மக்கள். இன்று கைவைத்தியம் காணாமல் போய், கணினி வைத்தியம் பிரபலமாகி விட்டது. உடல் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு இணையத்தில் தீர்வு தேடுவது, வழக்கமாகி வருகிறது. இது, 'சைபர்காண்டிரியா' எனப்படும், மனநலப் பிரச்னையாக இருக்கலாம். சிலருக்கு தங்கள் ஆரோக்கியம் குறித்த பயம், எப்போதும் இருக்கும். எதையாவது படித்தாலோ அல்லது யாராவது தனக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக சொன்னாலோ, உடனே தனக்கும் அந்த பாதிப்பு இருக்குமோ என்று பயப்படுவர். இது, ஒரு வகையான பதற்றம். அடுத்த கட்டமாக சிலர், மருத்துவரை நாடி, அவரின் அறிவுரையை பின்பற்றுவர். இன்னும் சிலர், மருத்துவரின் அறிவுரையில் திருப்தி அடையாமல், கவலைப்பட ஆரம்பிப்பதுடன், மருத்துவர்களை மாற்றியபடியே இருப்பர். அடிப்படையில் இதற்கு, 'ஹைப்போகாண்டிரியா' என்று பெயர்; அதாவது, நோய்களை பற்றி அடிக்கடி நினைப்பது. இதிலிருந்து வந்த சொல் தான், 'சைபர்காண்டிரியா!'நோய்களை பற்றி அடிக்கடி நினைப்போர், ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை படிப்பர் அல்லது மருத்துவரை அணுகுவர். ஆனால், 'சைபர்காண்டிரியா'வால் பாதிக்கப்பட்டவர்கள், இணையத்தில் தேடுவர். இன்று, மருத்துவரை விட, இணையத்தை மக்கள் அதிகம் நம்புகின்றனர். தனக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாக ஒருவர், இணையத்தில் பதிவு செய்தால் போதும். 'உங்களுக்கு இந்த நோய்கள் இருக்கலாம்' என, தகவல்கள் கொட்டும்.உதாரணமாக ஒருவருக்கு, காலையில் தலைவலி ஏற்பட்டிருக்கலாம். முதல் நாள் இரவு, அவர் சரியாக உறங்காததே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவர், 'தலைவலி' என்று இணையத்தில் தேடும் போது, அது மூளைக்கட்டிக்கான அறிகுறி என்பதை, முதலில் காட்டும். உடனே பயந்து, 'ஸ்கேன்' எடுப்பார்; உடம்பு சரியில்லை என்ற எண்ணத்திலேயே இருப்பார். இந்த பயத்திலிருந்து, அவரால் மீளவே முடியாது.இணையத்தில் கொட்டி கிடக்கும் தகவல் அனைத்தும், உண்மை என நம்பக் கூடாது. இவர்களின் பயத்தை பயன்படுத்தி, பொய்யான தகவல்களை பரப்பி, தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வைத்து, பணம் பறிக்கும் ஏமாற்று வித்தைகளும் நடக்கின்றன. முடிந்தவரை இணையத்தில், பிரச்னைக்கான தீர்வை தேடாமல், மருத்துவரை அணுகுங்கள். அந்த மருத்துவர் சொன்ன தகவல்கள் சரியா, தவறா என, மீண்டும் இணையத்தில் தேடாதீர்கள். அந்த எண்ணத்திலிருந்து மீள முடியாவிட்டால், மனநல ஆலோசகரை அணுகுங்கள்.
மன நல மருத்துவர் ரங்கராஜன்: 

Read more...

குறைவில்லாமல் சம்பாதிக்கலாம்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

விவசாயம் சார்ந்த தொழில் செய்து சம்பாதிக்க, நிலமோ, தென்னந்தோப்போ தேவையில்லை; வீட்டு மாடியில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும், குறைவில்லாமல் சம்பாதிக்கலாம் என, சாதித்து வழிகாட்டுகிறார் இளைஞர்.
ஆனைமலை அடுத்த ஒடையகுளம் சுப்பையா நகரை சேர்ந்தவர் சுரேந்திரன், 34; ஐ.டி.ஐ., படித்து விட்டு வீடு கட்டுமான பணி ஒப்பந்ததாரராக பணியாற்றுகிறார். அவரது வீட்டு மாடியில் கொட்டகை அமைத்து, முயல்கள் வளர்த்து இறைச்சிக்கும், வளர்ப்பு பிராணியாகவும் விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார்.
முயல்கள் வளர்ப்பு குறித்து, சுரேந்திரன் பகிர்ந்து கொண்டதில் இருந்து...விவசாயம் சார்ந்த ஏதேனும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டுமென்பது ஆசை. இதை நிறைவேற்ற முயல்கள் வளர்க்க திட்டமிட்டேன்.கொடைக்கானல் மன்னவனுாரில் உள்ள, மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோமங்கள் ஆராய்ச்சி மையத்தில், முயல்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்றேன். கொட்டகை அமைத்து, நான்கு ஆண்டுகளாக முயல்கள் வளர்க்கிறேன்.
வீட்டு மாடியில், 800 சதுரஅடியில், 80 ஆயிரம் ரூபாய் செலவிட்டு, மழைநீர் புகாத வகையில் கொட்டகை அமைத்து, காற்றோட்டம் இருப்பதற்காக, நான்கு புறமும் பசுமைக்குடில் வலை அமைக்கப்பட்டது. ஒரு யூனிட் முயல்கள் வளர்க்க, ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் தேவைப்படுகிறது. ஒரு யூனிட்டுக்கு தலா, 1.5 அடி நீளம், அகலம் உள்ள பத்து கூண்டுகள் தேவை. குட்டி ஈனும் முயல்களை தனியாக பராமரிக்க, நான்கு அடி நீளம், இரண்டு அடி அகலத்தில், இரண்டு கூண்டுகள் தேவை. முயல்களின் கால்கள் சிக்காமல் இருக்க கூண்டுகள், 1.2 அங்குலம் இடைவெளியுள்ள வலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. பத்து கூண்டுகளுக்கு, 15 ஆயிரம், குட்டி ஈனும் முயல்களுக்கான இரண்டு கூண்டுகளுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் செலவாகிறது.தற்போது, மாடியில், 15 யூனிட்டுகள் அமைத்து உள்ளேன். முயல்கள் விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி வந்து, வளர்க்கிறேன். முயல் வளர்ப்புக்கு தற்போது, கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மானியத்துடன் கடன் வழங்குகிறது.
காலையில் முயல்களுக்கு, அடர் தீவனமும், மாலையில் பசுந்தாள் தீவனமும் வழங்கப்படுகிறது. காலையில், கம்பு, ராகி, அரிசி, மக்காச்சோளம், கோதுமை தலா, ஒரு கிலோ எடுத்து, 50 கிராம் கடலை புண்ணாக்கு சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீரில் கலந்து முயல்களுக்கு கொடுக்கப்படுகிறது. மாலையில், அறுகம்புல், குதிரை மசால், வேலி மசால், கீரை வகைகளும்; மாதம் இரண்டு முறை, கோ - 4 புல்லும் கொடுக்கப்படுகிறது. இது தவிர, வேறு உணவுகள் வழங்கப்படுவது இல்லை.
பாராமரிப்பு முறை
முயல்களின் சிறுநீரில் அம்மோனியம் அதிகமாக இருக்கும். இதனால், சிறுநீரால் நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க, இரண்டு அடி உயரத்தில் கூண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. முயல்களுக்கு நோய் பாதிப்புகள் அதிகமாக ஏற்படாது. இதனால், நோய் மேலாண்மை எளிது.முயல்கள் வளர்ப்புக்கு, காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும். கழிவுகளை அப்புறப்படுத்தி, உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
உற்பத்தி பெருக்கம்
வொயிட் ஜெயின்ட், பிளாக் ஜெயின்ட், கேட் ஜெயின்ட், நியூசிலாந்து வொயிட் உள்பட இந்தியாவில், 42 வகையான முயல்கள் வளர்க்கப்படுகிறது. நான், 11 வகைகள் வளர்க்கிறேன். இறைச்சிக்காகவும், வளர்ப்பு பிராணியாக வளர்க்கவும் முயல்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முயல், 12 ஆண்டுகள் வரையில் வாழும். தொப்பி, 'கிளவுஸ்' உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க முயல்களின் ரோமங்கள் பயன்படுகிறது.ஆண்டு முழுவதும் முயல்கள் இனப்பெருக்கம் செய்யும்; ஒரு முறை இனப்பெருக்கம் செய்தால், ஒரு முயல் எட்டு குட்டிகள் வரை ஈனும். புதியதாக பிறந்த குட்டிகள் ஒரு மாதம் தாயுடன் இருக்கும், ஒரு மாதம் தனியாக வளரும். அதன்பின், குட்டிகள் இனப்பெருக்கம் செய்ய தயாராகும்.
வருமானம்
செல்ல பிராணியாக வளர்க்க பயன்படும், 40 - 70 நாட்கள் வயதுள்ள ஒரு முயல், 250 - 350 ரூபாய்க்கு விற்பனை நிலையத்துக்கு விற்கப்படுகிறது. 70 - 110 நாட்கள் மற்றும், 110 நாட்களுக்கு மேலுள்ள ஒரு முயல் அதன் வகையைப் பொருத்து, இறைச்சி, ரோமத்துக்காக, 800 - 3,000 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. இறைச்சிக்கான முயல்கள், 90 நாட்களில் தயாராகிறது. சமைப்பதற்காக சுத்தம் செய்யப்பட்ட முயல் கறி ஒரு கிலோ, 500 ரூபாய்க்கும்; உயிருடன் ஒரு கிலோ, 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோவை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நட்சத்திர மற்றும் பெரிய ஓட்டல்களுக்கு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது.90 நாட்களுக்கு ஒரு முயலை வளர்த்து விற்பனைக்கு அனுப்ப, 280 ரூபாய் செலவாகிறது, 220 வருமானம் கிடைக்கிறது. 90 நாட்களில் ஒரு யூனிட் மூலம், 24 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டலாம்.
கோழித்தீவனம்
முயல்களின் கழிவுகள் கோழிகளுக்கு சிறந்த தீவனமாக உள்ளது. பத்து முயல்கள் வளர்த்தால் அதன் கழிவுகளை வைத்து, ஐந்து கோழிகளுக்கு தீவனம் கொடுக்கலாம்.ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வோர் முயல்கள் வளர்த்து, கோழிகளையும் வளர்க்கலாம். ஒரு லோடு முயல் கழிவு, ஏழாயிரம் ரூபாய்க்கும், தோல் ஒன்று, 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மாடியில் இடம் இருந்தால், உழைக்க மனமிருந்தால் முயல்கள் வளர்ப்பில் வருமானம் ஈட்டலாம்.இவ்வாறு, அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets