உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகளை நேர்மறையாக அணுகவும் பழக்குங்கள்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

தோல்வியை பழகவும்
கற்று கொடுங்கள்!
தாங்கள் சொல்வதை குழந்தைகள் கேட்பதில்லை என்பது, இன்று பெரும்பாலான பெற்றோரின் புலம்பலும், புகாருமாக இருக்கிறது. 
எனவே, உங்கள் குழந்தைகள் எதை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதற்கான, 'ரோல் மாடலாக' நீங்களே மாற 
வேண்டும்.
பள்ளி செல்லும் வயதில், காலை சீக்கிரமாக எழ, அவர்களை பழக்க வேண்டும். காலையில் எழுவது, உணவு,  உறங்கச் செல்வது அனைத்தும், நேரப்படி நடக்க வேண்டும். எழுந்ததும், 'பெட் காபி'  பழக்கம் வேண்டாம்.
ருசி, பசி தாண்டி, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி கூறி, சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். சமையல் வேலைகளிலும், குழந்தைகளைப் பங்கு பெறச் செய்யுங்கள். உணவை, வீணாக்காமல் சாப்பிடப்  பழக்குங்கள்.
வயதில் பெரியவர் உட்பட யார் கேள்வி கேட்டாலும், அதை முதலில் உள்வாங்கி, உரிய மரியாதையுடன் பதில் சொல்லப் பழக்குங்கள். 
சாப்பிடும் முன் கை கழுவுவதில் துவங்கி, படுக்கைக்குச் செல்லும் போது, பல் துலக்குவது வரை, அனைத்தையும் தாமாகவே செய்ய பழக்க வேண்டும்.
பார்ப்பதை எல்லாம் வாங்கித் தர கேட்டால், குழந்தைக்கு அது தேவையா, உங்கள் பொருளாதாரத்துக்கு அது சரிவருமா என்பதை, முதலில் நீங்கள் சிந்தித்து, அதை சொல்லி புரிய வையுங்கள். இதனால், வளர்ந்த பிறகும் அநாவசியச் செலவு செய்யும்  பழக்கம் வராது.
குர்ஆனை மனப்பாடம் செய்வது என, அந்தந்த வயதுக்கான, 'கோல் செட்' செய்து கொடுங்கள். அதை அடையும் போது குழந்தையை பாராட்டி, அடுத்த, 'கோலை' நோக்கி உத்வேகப் படுத்துங்கள்.
தன்னை எந்தச் சூழலிலும் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை, அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். பாலியல் ரீதியான தொந்தரவு நேர்ந்தால், உங்களிடம் தெரியப்படுத்தும் தெளிவையும், நம்பிக்கையையும் கொடுங்கள்.
எதையும் புரிந்து, படிக்கக் கற்றுக் கொடுங்கள். 'கிரியேட்டிவிட்டி'க்கும் முக்கியத்துவம் கொடுங்கள். விளையாட்டு எந்த துறையில் விருப்பமாக இருக்கின்றனர் என்பதை அறிந்து, அதில் ஊக்கப்படுத்துங்கள்.
வியர்க்க வியர்க்க விளையாடுவது, பசித்த பின் சாப்பிடுவது, இவை இரண்டும் சிறப்பு. குழு விளையாட்டுகள், நட்பு பாலத்தை உருவாக்குவதுடன், தோல்வியை பழகவும் கற்றுக் கொடுக்கும். இடத்துக்கு ஏற்ப கண்ணியமாக உடுத்தும் நாகரிகத்தையும், தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கவும், உதவி பெற்றால், நன்றி சொல்லவும் கற்றுக் கொடுங்கள்.  அனைவரையும் இன்முகத்துடன் எதிர்கொள்ளவும், எல்லா விஷயங்களையும் நேர்மறையாக அணுகவும் பழக்குங்கள்.

Read more...

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது

புதன், 8 நவம்பர், 2017

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது, அந்தக் குழந்தையுடன் நன்கு உரையாடல் நிகழ்த்துவது. பேசப் பேசத்தான் அந்தக் குழந்தையுடன் நெருக்கமான ஸ்நேகம் பெற்றோர்க்குக் கிடைக்கும். அந்த உரையாடல்களே பிள்ளையின் மனதை நன்கு புரிந்துகொள்ள உதவும். மேலும், அதன் தேவை என்னவென்பதையும் உணர்த்தும். சில விஷயங்களைப் பெற்றோரிடம் கூற, குழந்தை தயங்கிக்கொண்டிருக்கலாம். அந்தத் தயக்கத்தை உடைக்க வேண்டியது குழந்தை வளர்ப்பில் அவசியம்.

பெற்றோர், தங்கள் பிள்ளை பள்ளிக்குச் செல்லும்போது பல ஆலோசனைகளைச் சொல்லி அனுப்புவார்கள். ஆனால், பள்ளி விட்டு வந்த குழந்தையிடம், 'ஏதாவது பொருளைத் தொலைத்துவிட்டாயா... மதியம் சாப்பிட்டியா...' போன்ற வழக்கமான சில கேள்விகளைத் தவிர வேறெதும் கேட்பதில்லை. அது சரியானதல்ல. குழந்தை சொல்லத் தயங்கும் அல்லது சொல்ல நினைக்கும் விஷயங்களைப் பெற்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த உரையாடலைத் தொடங்க இந்த 5 கேள்விகள் உதவும்.

சிறுநீரை அடக்கிக்கொண்டிருந்தாயா?: இது முக்கியமான கேள்வி. சிறுநீர் கழிக்க எனப் பள்ளியில் இடைவேளை விடுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் உங்கள் குழந்தைக்குச் சிறுநீரை வெளியேற்றும் உணர்வு வந்திருக்காது. மேலும், அந்த நேரத்தில் ஏதேனும் விளையாடிக்கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. 'பெல்' அடித்ததும் வகுப்பில் உட்கார்ந்த, சில நிமிடங்களில் சிறுநீர் வெளியேற்ற வேண்டிய சூழல் வந்திருக்கலாம். ஆனால் ஆசிரியரிடம் கேட்க பயந்துகொண்டு இரண்டு பாடப் பிரிவுகள் முடியும்வரை காத்திருந்திருக்கலாம். இப்படிச் செய்வது உடல் நலத்துக்குக் கேடு என்பதோடு, அந்த நேரத்தில் நடத்தப்படும் பாடத்தையும் புரிந்துகொள்ள முடியாது. எனவே, இந்தக் கேள்வியைக் கேட்க மறக்காதீர்கள்.
உன் உணர்வுகளை யாராவது அவமதித்தார்களா?: 
குழந்தைகள் மெல்லிய மனம் கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு அவசியம் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் செய்யாத தவறுக்கு ஆசிரியர் திட்டியிருக்கலாம். அவர்களின் நிறம், எடை, உயரம் ஆகியவற்றை வைத்து சக மாணவர்கள் கேலி செய்திருக்கலாம். எனவே இந்தக் கேள்வியை எழுப்பி, அப்படியேதும் நடந்திருப்பின் அதைச் சரி செய்ய முயலுங்கள்.
யார் உணர்வையாவது நீ காயப்படுத்தினாயா?: 
முந்தையக் கேள்வியைப் போலவே இதுவும் அவசியம். அப்படி யாரையேனும் கேலி செய்திருந்தால், தன் உணர்வுகளைப் போலவே அடுத்தவர் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். அட்வைஸாக அல்லாமல் அன்பாகக் கற்றுக்கொடுங்கள்.   
யாருக்காவது நன்றியோ, ஸாரியோ சொன்னியா? 
பள்ளியில் ஆசிரியர் அல்லது சக மாணவர்களிடமிருந்து ஏதேனும் உதவி பெற்றிருந்தால் அதற்கு நன்றி கூறியிருக்க வேண்டும். அதேபோல தன்னால் யாருக்கேனும் சிறு கஷ்டமாயிருந்தாலும் அதற்கு ஸாரி சொல்லிருக்கவும் வேண்டும். இந்தப் பண்பு நல்ல நட்பை உங்கள் குழந்தைக்குப் பெற்றுத்தரும். ஆசிரியர்களிடம் நல்ல மதிப்பையும் பெற்றுத்தரும்.
பள்ளி விதிகளை மீறினாயா? 
பள்ளியின் விதிகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு மாணவரின் கடமை. அதை உங்கள் குழந்தை இன்றைக்குச் செய்தார்களா... தவிர்க்க முடியாத சூழலில் விதிகளை மீறினார்களா... எனக் கேளுங்கள். சில விதிகள் குழந்தைக்குக் கடுமையாக இருக்கலாம். அதை அவர்கள் உங்களிடம் சொன்னால், பள்ளியின் நிர்வாகிகளுடன் அதுகுறித்துப் பேசுங்கள்.  

Read more...

கட்டுக்குள் இல்லாத நீரிழிவு?

பொருளாதார வளர்ச்சி,  நம் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி விட்டது. தினசரி வாழ்க்கையில், நாம் அதிகம் சிரமப்பட தேவை இல்லா வகையில், எல்லா வேலைகளும் எளிதாகி விட்டன; இதனால், உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. துரித உணவு கள், மென் பானங்கள், செயற்கை உணவுகள், அதிக அளவில் அரிசி, சர்க்கரை சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள், என, இவையெல்லாம், 'ஒபிசிட்டி' எனப்படும், உடல் பருமனை ஏற்படுத்தி, முடிவில், நீரிழிவு கோளாறை ஏற்படுத்துகின்றன.
வயதானவர்களுக்கு மட்டுமே வந்த நீரிழிவு பிரச்னை, நடுத்தர வயதினருக்கு வந்தது. தற்போது, இளம் வயதினர்கள் மற்றும் டீன் - ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள் என்று பாதிக்கப்பட்டு, தற்போது, குழந்தைகளையும் அது பாதிக்கிறது. 
நீரிழிவு கோளாறு வந்தால், அது சிக்கலான உடல் பிரச்னையாக மாறுவதற்கு, 20 ஆண்டுகள் ஆகும். இளம் வயதிலேயே இந்தப் பிரச்னை வரும்போது, நடுத்தர வயதை நெருங்கும்போது, நீரிழிவு பல சிக்கலான உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதனால், அவரின் சுய முன்னேற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
உங்கள் வயது, தினமும் உடற்பயிற்சி செய்பவரா, உங்கள் பெற்றோருக்கு நீரிழிவு உள்ளதா, என்ற எளிமையான கேள்விகளுக்கு கிடைக்கும் பதில், நீரிழிவு நோயாளியா, இல்லையா என்பதை சொல்லி விடும். ஆண்களுக்கு, இடுப்பின் சுற்றளவு, 90 செ.மீ,க்கு குறைவாகவும், பெண்களுக்கு, 80 செ.மீ.,க்கு கீழேயும் இருந்தால், நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு, 50 சதவீதத்திற்கும் குறைவு.

அதிக தாகம், களைப்பு, ஆறாத புண், பாதங்கள் மரத்து போதல், எரிச்சல், கால்களில் காயம் மற்றும் கட்டி போன்றவை நீரிழிவு வருவதற் கான அறிகுறிகள்.புகை பிடிப்பதோ, மது அருந்துவதோ கூடாது. முடிந்த அளவு அரிசி உணவைத் தவிர்ப்பது அல்லது குறைவாக சாப்பிடுதல் நல்ல பலனை தரும். ஒரே இடத்தில், அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது தவறான பழக்கம். 

செயற்கை குளிர் பானங்களை தவிர்ப்பது; குறைந்தது, தினமும், 350 கிராம் பழங்கள் சாப்பிடுவது; தினமும் நடைப்பயிற்சி, போதிய துாக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை பின்பற்றினால், நீரிழிவு வருவதை தடுக்கலாம்!

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets