உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைக்கு தாய்பாலின் முக்கிய பங்கு.

புதன், 11 ஜூலை, 2018


பச்சிளம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிப்பது, தாய்ப்பால் தான். பொதுவாக, நிறை மாதத்தில் பிறந்த குழந்தை, ஒரு நாளுக்கு குறைந்தது, 3 - 4 மணி நேரத்துக்கு ஒரு முறை, அம்மாவிடம் பால் அருந்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தை எனில், இந்த இடைவேளை இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை என, சற்று குறையும். குடித்த தாய்ப்பால் ஜீரணித்து, தயிர் போல சிறிதளவு வெளியேறினால் பிரச்னை இல்லை. ஆனால், செரிக்க முடியாமல், தாய்ப்பாலை அப்படியே குழந்தை வாந்தி எடுத்தால், உடனே கவனிக்க வேண்டும். வாந்தி, பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது ஆபத்தின் அறிகுறி.பிறந்த, 10 - 15 நாட்கள் வரை, குழந்தையின் எடை, 10 - 15 சதவீதம் குறையும். அதன்பின், குழந்தை தினமும், 15 - 20 கிராம் வரை எடை கூடும்; இந்த அளவு, குழந்தைக்கு குழந்தை வேறுபடும். பிறந்த குழந்தையின் தலையில், இரண்டு குழிகள் இருக்கும். ஒன்று, உச்சிக்குழி. இரண்டாவது தலையின் பின் பக்கத்தில் இருக்கும். முன் குழி சிறிது சிறிதாக மூட, 18 மாதமும், பின் குழி, 9 - 12 மாதங்களில் மூடிவிடும்.குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், முன் குழியானது ஆழ்ந்து காணப்படும். மூளைக்குள் நீர் அதிகமாக இருந்தால், குழிப்பகுதியில் கை வைத்து பார்த்தால், லேசான வீக்கம் தெரியும். அந்த காலப் பாட்டிகள் சிலர், குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டிய பின், உச்சிக்குழியில் ஈரம் போக, அந்த இடத்தில் விபூதி அல்லது முகத்துக்கு உபயோகிக்கும் பவுடரை வைப்பர். இவற்றையெல்லாம் செய்யக் கூடாது. குழந்தையின் உச்சிப் பகுதியில் இயல்பாகவே உஷ்ணம் அதிகமாக இருக்கும். அதனால் ஈரம் இருந்தாலும், தானாகவே காய்ந்து விடும்.குழந்தையின் வயிற்று வலியை, 'கிரைப் வாட்டர்' நீக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. 1800களில் மலேரியாவை குணப்படுத்த கண்டறியப்பட்ட மருந்து தான், கிரைப் வாட்டர். அது வயிற்று வலியை சரி செய்வதாக யாரோ கூற, அதனுடன் ஆல்கஹாலை கலந்து விற்க ஆரம்பித்து விட்டனர். அதனால் தான், கிரைப் வாட்டர் குடித்த குழந்தைகள், ஆழ்ந்து துாங்குகின்றனர். தாயின் கதகதப்பு தேவைப்பட்டாலும், டயாப்பரில், சிறுநீர், மலம் தங்கினாலும், குழந்தைகள் சிணுங்குவர். இவை தவிர, அதிகமான ஓசை, சொர சொரப்பான டிரஸ், பெர்ப்யூம், பவுடர் வாசனை கூட, குழந்தையை அழ வைக்கலாம்.குழந்தையின் முகத்தில், பவுடர் போடவே கூடாது. உலர்வு தன்மைக்காகவும், மூத்திர வாடையை தவிர்ப்பதற்காகவும் மட்டும், தொடை பகுதிகளில் போடலாம். அதையும் கைகளால் தொட்டு தடவ வேண்டும்; 'பப்' பயன்படுத்த வேண்டாம். இரும்புச் சத்துக்கான சொட்டு மருந்து, வைட்டமின் சொட்டு மருந்துகளை, டாக்டர் கூறினால் மட்டுமே கொடுக்கலாம்.

Read more...

குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே

சனி, 7 ஜூலை, 2018


குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே, விளையாட்டுப் பொருள்களை, விளையாடி முடித்த பின்னர் மீண்டும் எடுத்து வைக்கப் பழக்குங்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கக் கற்றுக்கொடுங்கள். இதனால் பொறுப்பு உணர்வும் நேர மேலாண்மையும் அவர்களுக்குக் கைகூடும்.● குழந்தைகளின் ஆறு, ஏழு மாதங்களில் இருந்தே, தின்பண்டங்கள், பொம்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் பாக்ஸில் எக்ஸ்ட்ரா இரண்டு பிஸ்கட்கள், சாக்லேட்கள் வைத்துவிட்டு, 'உன் பிரெண்டு யாராச்சும் கேட்டா ஷேர் பண்ணு' என்று சொல்லி அனுப்புங்கள். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை தலைமைப்பண்புடன் விளங்க, இந்தச் சிறு தொடக்கம் நிச்சயம் கைகொடுக்கும்.● மூன்று வயதுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக்கொடுங்கள். தினமும் அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுத்து உண்டியலில் சேமிக்கச் சொல்லலாம். அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு, பெற்றோர் அனுமதியுடன் அவர்களுடைய சேமிப்புப் பணத்தை எடுத்தே செலவு செய்ய அனுமதிக்கலாம். பணத்தின் மதிப்பை உணர்வதால், பார்க்கும் பொருள்களையெல்லாம் அடம்பிடித்துக் கேட்டு வாங்கித் தரச் சொல்லும் பழக்கம் அவர்களை அண்டாது.● குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே புத்தகங்களை நண்பர்களாக்குவது அவசியம். அவர்களின் வயதுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, ஒரு குட்டி ஜீனியஸ் உருவாக ஆரம்பிப்பான்/ஆரம்பிப்பாள்.● இரண்டு வயதுக்குள், அவர்களுக்கு டாய்லெட் ட்ரெய்னிங் கொடுத்திருக்க வேண்டும். சாப்பிடும் முன், விளையாடிய பின் கைகளைக் கழுவுவது, இரு வேளை பல் துலக்குவது மற்றும் குளிப்பது என்று ஆரோக்கிய விஷயங்களையும் வளர வளரக் கற்றுக் கொடுங்கள்.● 10 வயதுக் குழந்தைகளுக்கு, 'ஓர் இடத்திலோ அல்லது யாரிடமோ பேசும்போது, நீ மட்டுமே பேசாமல், மற்றவர்கள் சொல்வதையும் உள்வாங்க வேண்டும்' என்று வலியுறுத்துங்கள். அதேபோல, குழந்தைக்கு அதுவரை தெரியாத ஒரு விஷயம் பற்றிய பேச்சு வந்தால், 'அதெல்லாம் எனக்குத் தெரியாது' என்று ஒதுங்காமல், புதிய விஷயங்களைக் கவனித்துக் கேட்க அறிவுறுத்துங்கள்.● உணவு உண்ணும்போது சிந்தாமல், மிச்சம் வைத்து வீணாக்காமல் இருக்கப் பழக்கப்படுத்துங்கள். பொது இடங்களில் சாப்பிடும்போது ஸ்பூன், போர்க், டவல் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய 'டேபிள் நாகரிகம்' பற்றிக் கற்றுக்கொடுங்கள்.
● மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் விதையுங்கள். அழகு, அறிவு, பொருளாதாரம் என எதன் அடிப்படையிலும் அடுத்தவர்களின் மனது புண்படும்படி அவர்களைத் தாழ்த்திப் பேசுவது தவறு என்பதைச் சொல்லிக்கொடுப்பதன் மூலம், உங்கள் குழந்தையை மனித நேயத்துடன் வளர்த்தெடுக்கலாம்.

Read more...

வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி

புதன், 4 ஜூலை, 2018


வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி செய்து வரும், திருநெல்வேலி மாவட்டம், கடகுளம் கிராமத்தை சேர்ந்த டெல்சன்: 5 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் முருங்கை போட்டுள்ளேன். இயற்கை விவசாயம் செய்யும், 30 ஏக்கர் முருங்கைத் தோட்டங்களை, கடந்தாண்டு குத்தகை எடுத்து, கீரை பறித்தோம். இந்தாண்டு, குத்தகையின்றி, அதே தோட்டங்களில் இருந்து, 1 கிலோ கீரை, 15 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன்.

ஒரு ஈர்க்கு முருங்கை இலையை பறித்து, ஒரு மணி நேரம் வைத்து, வேகமாக ஆட்டிப் பார்த்தால், இலை உதிரக்கூடாது. பறித்த இலைகளை தண்ணீர் தெளித்து, பாலித்தீன் கவரில் வைத்து, ஐஸ் பாக்சில், 24 மணி நேரம் வைப்போம். அப்போதும் இலைகள் வாடாமல், உதிராமல் இருக்க வேண்டும்.செடி முருங்கை கீரைகள், ஏற்றுமதிக்கு ஏற்றதல்ல; மர முருங்கை கீரை தான் பறிப்போம். பறித்த கீரைகளை பருத்தி துணியில் கட்டி, 'பேக்கிங்' கூடம் எடுத்து வருவோம். தார்பாலின் ஷீட்டில், தண்ணீர் தெளித்து கீரைகளை, அரை அடி உயரத்துக்கு அடுக்கி, லேசாக தண்ணீர் தெளிப்போம்.

அதன்பின், காய்ந்த மற்றும் பழுப்பு இலை, பூக்களை நீக்கி, 150 கிராம் அளவு, பாலித்தீன் கவருக்குள் வைத்து, ரப்பர் பேண்டு போடுவோம். அடுத்து, 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெர்மாகோல் பெட்டிகளில், மூன்று ஐஸ் கட்டிகளை வைத்து, அதன் மேல் தண்ணீர் உறிஞ்சாத பேப்பரை விரித்து, 25 கீரை பாக்கெட்டுகளை அடுக்குவோம். அதன் மேல் ஐஸ் கட்டி, 25 கீரை கட்டு, மூன்றாவது அடுக்காக, 10 கீரை கட்டு என, மேலேயும் ஐஸ் கட்டி வைத்து, ஒரு பெட்டியில், 60 கட்டு கீரை அடுக்குவோம்.
மாதத்தில், 10 நாட்கள் துபாய், எட்டு நாள் கத்தார், ஐந்து நாள் ஓமன், இரண்டு நாள், லண்டன் என, தினமும், 400 கிலோ முருங்கைக் கீரையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இவ்வாறு, 25 நாட்களில், 10 ஆயிரம் கிலோ முருங்கைக் கீரை ஏற்றுமதி வாயிலாக, நான்கு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கீரை கொள்முதல், பறிப்பு, பேக்கிங் கூலி, வேன் வாடகை, விமான கட்டணம், தெர்மாகோல் பெட்டி, ஐஸ்கட்டி, மின் கட்டணம் அனைத்தும் சேர்த்து, 2.70 லட்சம் ரூபாய் செலவு போக, மாதம், 1.30 லட்சம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, கேரள மாநிலம், கொச்சின் பேக் ஹவுசுக்கு போய், சுங்கத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நேரம், செலவு அதிகமாகிறது. 
தமிழகத்தின் விமான நிலைய பகுதிகளில், பேக் ஹவுசை கொண்டு வந்தால், ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக இருக்கும்; ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் முடியும். அந்த வசதி கிடைத்தால், நானே, 100 பேருக்கு வேலை கொடுக்க முடியும். அந்தளவு முருங்கைக்கீரைக்கு தேவையுள்ளது.

தொடர்புக்கு: 90806 60084.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets