ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
வியாழன், 23 மே, 2013
மனித உயிரினங்கள்
இல்லாமல் உலகம் தனது சுய நிலையில் இயங்கியது. அவ்வப்போது புதுப்பித்தும் கொண்டது.
உலகில் கடைசியாகத் தோன்றிய மனித உயிரினம், மற்ற உயிரினங்கள்
மீது ஆளுமை செலுத்தி வருகிறது. அதனால், இப்போது மனிதன்
இல்லாமல் வெறும் உலகத்துக்கு என்ன வேலை என்றுகூட கேட்கத் தோன்றி விட்டது. அந்த
அளவுக்கு உலகத்துடன் பிரிக்க முடியாத ஒன்றாக மனித இனம் உருமாறிவிட்டது.
ஒவ்வொரு
உயிரினத்திலும் ஏற்படும் பாலினப்பெருக்கம்தான், அந்த உயிரினங்களை
உலகில் பிரவேசிக்கவும், நிலை நிறுத்தவும் செய்கிறது. இது ஓரறிவு
முதல் ஆறறிவு படைத்த அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.
ஆறறிவு படைத்த
மனிதன் மற்ற உயிரினங்களைவிட பாலினப்பெருக்கத்தில் தன்னை மாற்றி தகவமைத்துக்
கொண்டான். அதிலும் ஒரு வரைமுறை வேண்டும் என்று கருதிய நம் மூதாதையர்கள், திருமணம்
என்ற எல்லைக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். அதன் மூலம் ஏற்பட்ட
குடும்பம் என்ற கட்டமைப்பு, இன்றுவரை தன்னுடைய இனத்தைப் பெருக்கிவர
உதவுகிறது.
கல்வியறிவு பரவலாக
எட்டப்படாத காலத்தில் திருமணத்துக்கு எவ்வித வரைமுறையும் வகுக்கப்படவில்லை. அதனால், குழந்தைத்
திருமணம் பல்கிப் பெருகியது. இருப்பினும், கல்வியறிவு ஏற்பட்டபின்
திருமணத்துக்கான வயது நிர்ணயிக்கப்பட்டது. முற்காலத்தில்
மணமகனைப் பார்க்காமலே திருமணம் நடந்தது. இது எத்தகைய முறையாக
இருப்பினும், அதை ஏற்றுக்
கொண்ட பெண்கள் இல்லற வாழ்க்கையை சிறப்புடன் வழி நடத்தினர். அதனால்தான் இன்றுவரை
"மானுட உற்பத்தி', எவ்விதத் தடையுமின்றி வளர்ச்சி அடைந்து
வருகிறது.
ஆனால், இன்றைய நிலை
முற்றிலும் மாறி விட்டது. என்ன தேவை என்பதை அறிந்து தங்களது முடிவுகளை பெண்கள்
துணிந்து எடுக்கின்றனர். அது பொருளாதாரம் சார்ந்த ஒன்றில் வெற்றி அளித்தாலும், மண வாழ்வில்
என்னவோ அவர்களுக்குப் பின்னடைவை அளிக்கிறது. அதற்கு தக்க உதாரணம், குடும்ப
நீதிமன்றங்களில் அதிகரித்துவரும் விவாகரத்து வழக்குகள்.
சமகாலத்தில்
திருமணம் சார்ந்த வாழ்வியலின் அடிப்படை முடிவுகளை எடுப்பதில் பெண்களைவிட, அவர்களது
பெற்றோர்களிடம் பெரும் தடுமாற்றம் காணப்படுகிறது. அந்தத் தடுமாற்றம் நல்ல
வரனுக்காக என்றானாலும் பரவாயில்லை. ஆனால், "விலையுயர்ந்த மணமகன்' (அதிக
சம்பளம்) என்ற நோக்கத்துக்காக இருப்பதில் என்ன நியாயம் அடங்கியுள்ளதோ?
திருமண வாழ்வு
சிறக்க வேண்டும் என்று எண்ணிய நம் முன்னோர்கள், விலையுயர்ந்த மணமகன்
என்ற அந்தஸ்தைத் தவிர்த்து பல்வேறு சடங்குகளில் கவனம் செலுத்தினர்.
மணமகனிடம் அவர்கள்
எதிர்பார்த்தது நல்ல குணத்தையும், உழைக்கும் திறனையும் மட்டும்தான். சந்தையில் அதிக
விலைக்கு யாராவது கேட்டால் பொருள்களை அளிக்கும் வியாபாரியின் மனநிலைக்கு
பெற்றோர்கள் வந்து விட்டனர். இதனால், குறிப்பிட்ட வயதில்
திருமணம் நடைபெறுவதில்லை. இது ஓர் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது.
தங்களுக்கு
வரப்போகும் மருமகன் அல்லது மருமகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு
விதிக்கும் பெற்றோர்கள் பெருகி விட்டனர். இவர்கள், தங்களது திருமணம்
எவ்வாறு, எதனடிப்படையில் நடந்தது என்பதை நினைக்கத் தவறுவது ஏன்? இன்றைய
பெற்றோர்கள் விதிக்கும் கட்டுப்பாடு, அன்றைக்கு
அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு
திருமணம் நடந்திருக்குமா என்று சிந்திப்பது நலம்.
அன்றைக்கு, வரதட்சிணை
என்ற பெயரில் பல பெண்ணின் பெற்றோர்கள் சீரழிக்கப்பட்டனர். ஆனால், இப்போது அது
எதிர்மறையாகி விட்டது. மணமகன் வீட்டார் பெண்ணுக்கு வரதட்சினை அளிக்கும் நிலை
ஏற்பட்டு விட்டது. அன்று பெண்களை ஆண்கள் அடிமைகளாக நடத்தினார்கள். அதிக சம்பளம்
வாங்கும் ஒருவரை ஒரு பெண் தேர்வு செய்வதும் அடிமைத்தனம்தானே!
உலகில் மனித உயிர்கள்
சரியான பால் விகிதத்தில் இருக்க திருமண வாழ்வு முக்கியமானது. இதில் இடைவெளி
ஏற்பட்டால், எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படும்.
பெண் சிசுக்
கொலைகளினால், பால் விகிதத்தில் இன்றளவும் ஏற்றத் தாழ்வு இருந்து வருகிறது. 2012-ம் ஆண்டு
புள்ளி விவரப்படி இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்களே உள்ளனர்.
இக்குறைப்பாட்டை எப்போது ஈடு செய்வது என்று தெரியவில்லை.
பருவத்தே செய்வது
பயிரை மட்டுமல்ல, திருமணத்தையும்தான் என்பதைப் பெற்றோர்கள்
புரிந்துகொள்ள வேண்டும்.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்; அதற்கும் முன்னாலே..