உங்கள் வருகைக்கு நன்றி

மாரடைப்பை எளிதாக விரட்ட!

திங்கள், 3 ஜூன், 2013

ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி, எல்லா தரப்பினரும் பாதிக்கப்படும் நோய்களுள் ஒன்று... மாரடைப்பு. உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முக்கிய காரணமாக இந்நோய் கண்டறியப்பட்டு இருக்கிறது. உணவு விஷயத்திலும், பழக்கவழக்கத்திலும் தனிக்கவனம் செலுத்தினால் மாரடைப்பை எளிதில் விரட்டி விடலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

இதயத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே மாரடைப்பை தடுத்து விடலாம். அதற்கு, இதய நோய்களை வருமுன் காப்பதுதான் நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வு முறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். அதற்கு பதிலாக சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஓட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும். 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது.

ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது. உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். ஒரு நாளைக்கு 2,400 மில்லிகிராம் உப்பு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைத்துக் கொள்ளவும். முக்கியமாக, உடல் எடையை அதிகரிக்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை உடற்பயிற்சி செய்யுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். தகுந்த உணவு பழக்கவழக்கத்தையும் பின்பற்றுங்கள்.

இனி... மாரடைப்பு பற்றிய கவலையே வேண்டாம்!

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets