உங்கள் வருகைக்கு நன்றி

பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும் !

செவ்வாய், 11 ஜூன், 2013

பெற்றோருக்கு வயதாகிவிட்டால், அதிலும் தள்ளாமை வந்து விட்டால், அவர்களுடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. நல்ல வளர்ப்பால் சத்புத்திரனைப் பெற்றிருந்தால், அவர்களை அவன், அன்பும், ஆதரவும் காட்டி சந்தோஷமாக வைத்திருப்பான்.  இன்னும் சில புத்திர ரத்தினங்களும் இருக் கின்றனர்... பெற்றோர் படாதபாடு பட்டு, படிக்க வைத்து ஆளாக்கி, உத்தியோகம் கிடைக்க செய்து, ஒரு கல்யாணத்தையும் முடித்து வைக்கின்றனர்.
பையன் கல்யாணமாகி,  உள்ளம் பூரித்து, அகமகிழ்ந்து அதன் பிறகு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. மனைவியின் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விடுகிறான் பையன். மனைவி சொல்லே மந்திரமாகி, பெற்றோர் இரண்டாம் பட்சமாக போய் விடுகின்றனர். மனைவி நல்ல குணம் உள்ளவளாக இருந்தால், மாமியார், மாமனாருக்கு மரியாதை கிடைக்கும். எதைச் செய்வதானாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்வாள். எது நல்லது, எது வேண்டாதது என்று கேட்டு செய்வாள்.
கொஞ்சம் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணானால் மாமியாரை, மாமனாரை அவ்வளவாக மதிக்க மனமிராது. "அவர்களை என்ன கேட்பது, எனக்குத் தெரியாதா?' என்பர். இவள் சொல்கிறபடி ஆடுகிறவனாக கணவன் இருந்து விட்டால், வயதான பெற்றோர் பாடு பரிதாபகரமாகி விடுகிறது. பெற்ற பிள்ளை கூட, மனைவியின் பக்கம் சேர்ந்து, இவர்களை ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்து, இரவு, பகலாக ஆலோசித்து, இவர்களை ஏதாவது, "முதியோர் இல்லத்தில்' சேர்த்து நாம் நிம்மதியாக இருக்கலாம், இஷ்டம் போல் வரலாம், சந்தோஷமாக இருக்கலாம்...' என்று தீர்மானம் போடுவான்.

"முதியோர் இல்லம்' எங்கே இருக்கிறது என்று சிரத்தையாக விசாரித்து பெற்றோருக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி, அவர்களை அங்கே கொண்டு போய் சேர்த்து, பணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவான். பெற்றோரும் மனம் நொந்து போய் அந்த இல்லத்தில் தங்கி, திரும்பிப் போகும் பிள்ளையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்துவர்.
ஆனால், பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்து, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் சீஎன்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். 

முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)


அதை விட சிறந்த தர்மம் வேறு எதுவுமில்லை. பெற்றோரின் வயோதிக காலத்தில் மனம் குளிரும்படி நடந்து கொண்டாலே கிடைத்து விடும். பிள்ளையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்க என்னவெல்லாம் செய் திருப்பர் என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவன் பிறந்தவுடன் அனாதை இல்லத்திலா கொண்டு போய் சேர்த்தனர். கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து, இரவு, பகல் பாராமல் ஊட்டி வளர்த்தனர். அப்படிப்பட்ட தாய், தந்தையருக்கு கடைசி காலத்தில், "முதியோர் இல்லம்' தானா கதி! தாய், தந்தையருக்கு வயோதிக காலத்தில் பணிவிடை செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets