உங்கள் வருகைக்கு நன்றி

பல தரப்பட்ட பொடி வகைகளை தயாரித்து விற்கலாம்.

திங்கள், 15 அக்டோபர், 2018


பலதரப்பட்ட பொடி வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும், கோவையைச் சேர்ந்த சுகன்யா செல்வராஜ்: என் உறவினரின் பெண் படித்த பள்ளியில் நடந்த, உணவு கடை விழாவில் வைப்பதற்காக, என் மாமியார், வீட்டில் தயாரித்த பொடி வகை களை, பிளாஸ்டிக் கவர்களில் நிரப்பி எடுத்துச் சென்றாள். மாலை வந்தவள், ஒரு சில மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும், சுவை, வாசனை, நிறம் நன்றாக உள்ளதாக அனைவரும் பாராட்டியதாகவும், உற்சாகத்துடன் சொல்ல, அது எனக்கு ஆச்சரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது.எந்தெந்த பொடி வகைகளைத் தயாரிக்கலாம் என்பதை, மாமியாரிடம் ஆலோசித்து முடிவு செய்தேன். பருப்பு, பூண்டு, கடலை, முருங்கை, கறிவேப்பிலை, தேங்காய் மற்றும் எள் என, பல வகைப் பொடிகளையும், சாம்பார் பொடி, ரசப் பொடி, வத்தக்குழம்பு மசாலா, சிக்கன் - மட்டன் மசாலா என சைவ, அசைவ உணவுப் பொடிகளையும் தயாரித்தேன்.என் மகன், 'கிராண்ட்மாஸ் குட்ஸ்' என, பெயர் சூட்டி மெருகேற்றினான். சென்னை மற்றும் கோவையில் உணவுத் திருவிழாக்களில் கடை அமைத்தும், முகநுால் மற்றும் 'வாட்ஸ் ஆப்' மூலமும் விற்பனையை ஆரம்பித்தோம். சுவையைத் தக்கவைப்பது ஒரு பெரிய கலை; ஆரம்பத்தில் அது எனக்குப் பிடிபடவில்லை. மாமியாரிடம் ஆலோசனை கேட்டு, ஒரு சில மாதங்களில் சரியான விகிதத்தில் பொருட்களைச் சேர்க்கும் வித்தையை கற்றேன்.உணவுத் திருவிழாக்களில் கடைகள் அமைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து, புது வகைகளை அறிமுகம் செய்கிறேன். உணவு கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், செயற்கை நிறமூட்டி சேர்க்காததால், மார்க்கெட் போட்டியில், எங்கள் பொடிகளை மக்கள் முந்த வைக்கின்றனர்.எந்த வகை பொடி என்பதை பொறுத்து, குறைந்தபட்சம், நான்கு மாதம் முதல், அதிகபட்சமாக, எட்டு மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும். ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகளையும் விரைவில் தயாரிக்க உள்ளோம்.உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா... வீட்டில் நேரம் இருக்கிறதா... பொடி, நொறுக்குத் தீனி, உணவு வகைகள் என்று ஆர்வமுள்ள களத்தைத் தேர்ந்தெடுங்கள், தைரியமாக முதல் அடியெடுத்து வையுங்கள்.தொடர்புக்கு:99655 20839

Read more...

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா ?

வெள்ளி, 5 அக்டோபர், 2018


ஒவ்வொரு பெண்ணுக்கும், மாதவிடாய் நேர வலிகள் வேறுபட்டவை. அன்றாட வேலைகளை கூடச் செய்ய முடியாத அளவுக்கு இருக்கும்; அந்த நாட்களில் ஓய்வெடுப்பதும், சத்துமிக்க உணவை சாப்பிடுவதும் அவசியம். மூளையிலிருந்து உறுப்புகளுக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் வேதிப்பொருட்களான, 'ஹார்மோன்' மாற்றங்களால், மாதவிடாய் காலத்தில், உடல் பாரமாக இருப்பதாக உணர்வர். இந்த வேதிப் பொருட்களின் சமநிலையற்ற தன்மையால், மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கவலை உணர்வு மேலோங்கி இருக்கும். சிலர் அதிக கோபத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுவர். மார்பகங்கள் வீங்கியிருப்பது போல தோன்றும்; வலியும் ஏற்படும். மேல் வயிறு பெரிதானது போல தோன்றும். அடிவயிறு பகுதியில் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி ஏற்படும். இந்த சிரமங்களால், மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யக் கூடாது என, பெண்கள் நினைக்கின்றனர். ஆனால், அப்போது சில உடற்பயிற்சிகளை செய்வது, நல்ல பலன் களை கொடுக்கும்.சாதாரணமாக, சைக்கிள் ஓட்டுவது நல்ல பயற்சி. அதுவும், 'ஜிம்'மில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி சைக்கிள் ஓட்டுவதால், தொடைப்பகுதி வலிமை அடையும். கைகளுக்கான பயிற்சிகளையும் செய்யலாம். 'கார்டியோ' உடற்பயிற்சிகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கும், 'சைக்கிளிங், ட்ரெட்மில்'லில் ஓடுவது போன்றவற்றை, 20 முதல், 40 நிமிடங்கள் வரை செய்யலாம். நடைபயிற்சியும், மிதமான ஓட்டமும் கூட உதவும். சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம். எனவே, வயிற்றுக்கான பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் உடற்பயிற்சிகள் செய்வதால், மூளையில், ஒருவித அமிலம் சுரந்து, வலியை உணரும் சக்தி குறையும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், மாதவிடாய் கால ரத்தப் போக்கு அதிகரிக்காது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகள் வலிமையடைந்து, மாதவிடாய் காலச் சோர்வு குறைந்து, புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணரலாம்.
சுகப்பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் இருந்தும், சிசேரியன் என்றால், ஒரு வாரம் கழித்தும், உடற்பயிற்சிகள் செய்யலாம். உடல் செயல்பாட்டுகளின் அடிப்படையில், காலை வேளை தான், உடற்பயிற்சிக்கு ஏற்றது. சில பெண்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில், காலை நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள், மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்.

பிசியோதெரபிஸ்ட், ரம்யா செந்தில்குமார்


Read more...

உலர் முருங்கை இலை, விதை விற்பனையில் வருமானம்.

வியாழன், 4 அக்டோபர், 2018


பிளேட்டோசென் சமரசம்: பி.டெக்., - எம்.பி.ஏ., முடித்த நான், பிலிப்பைன்ஸ் நாட்டில், அரசு சாரா அமைப்பின் இயக்குனராக இருந்த போது, விவசாயம், சுற்றுச்சூழல் என, நிறைய, 'புராஜெக்ட்' செய்தோம். அப்போது, வெளிநாடுகளில் முருங்கை இலைக்கு, அதிகத் தேவை இருப்பது தெரிய வந்தது.அதன்பின், இந்தியா திரும்பி, உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அந்த நேரத்தில், ஓய்வு பெற்ற அப்பாவிடம், முருங்கைச் சாகுபடி பற்றி கூறியதும், ஏற்றுக் கொண்டார். நிறைய ஊர்களுக்குப் போய், முருங்கை விவசாயிகளைப் பார்த்துப் பேசியதில், இலை அறுவடைக்கு, செடி முருங்கை ஏற்றது என, தெரிந்தது.இது, மொத்தம், 40 ஏக்கர் நிலம்; நல்ல செம்மண். 10 ஏக்கரில் நெல்லி, 5 ஏக்கரில் நாட்டு ரக எலுமிச்சை, 15 ஏக்கரில் மாமரங்கள், 5 ஏக்கரில் செடி முருங்கை, 2 ஏக்கரில், முருங்கை விதைக்கு என விட்டு உள்ளோம். மீதி, 3 ஏக்கரை, முருங்கைச் சாகுபடிக்காகத் தயார் செய்து வைத்துள்ளோம். காய வைத்த முருங்கை இலையை எங்களிடம் இருந்து வாங்கி, ஜெர்மன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். 45 நாளுக்கு ஒருமுறை, இலை அறுவடை செய்யலாம். மழைக்காலங்களில் அறுவடை செய்ய மாட்டோம். அந்த வகையில், ஆண்டுக்கு, ஐந்து தடவை அறுவடை செய்யலாம். 1 ஏக்கர் செடி முருங்கையில், ஓர் அறுப்புக்கு, 4,000 - 4,500 கிலோ இலை கிடைக்கும்.மேலும், 1,000 கிலோ இலையைக் காய வைத்தால், 100 கிலோ உலர்ந்த இலை கிடைக்கும். ஆண்டுக்கு, 2,000 கிலோ உலர்ந்த இலை கிடைக்கிறது. 1 கிலோ, 130 ரூபாய் என, ஆண்டுக்கு, 1 ஏக்கர் மூலமாக, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். இடுபொருள், பராமரிப்பு, அறுவடை, போக்குவரத்து எல்லாம் சேர்த்து, 85 ஆயிரம் ரூபாய் செலவு போக, 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் வரும்; ஒரு முறை நடவு செய்தால், ஐந்து ஆண்டு வரை வருமானம் பார்க்கலாம்.தொடர்புக்கு: பிளேட்டோசென் சமரசம்: 95661 01102; சமரசம்: 94437 35902.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets