உங்கள் வருகைக்கு நன்றி

பல தரப்பட்ட பொடி வகைகளை தயாரித்து விற்கலாம்.

திங்கள், 15 அக்டோபர், 2018


பலதரப்பட்ட பொடி வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும், கோவையைச் சேர்ந்த சுகன்யா செல்வராஜ்: என் உறவினரின் பெண் படித்த பள்ளியில் நடந்த, உணவு கடை விழாவில் வைப்பதற்காக, என் மாமியார், வீட்டில் தயாரித்த பொடி வகை களை, பிளாஸ்டிக் கவர்களில் நிரப்பி எடுத்துச் சென்றாள். மாலை வந்தவள், ஒரு சில மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும், சுவை, வாசனை, நிறம் நன்றாக உள்ளதாக அனைவரும் பாராட்டியதாகவும், உற்சாகத்துடன் சொல்ல, அது எனக்கு ஆச்சரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது.எந்தெந்த பொடி வகைகளைத் தயாரிக்கலாம் என்பதை, மாமியாரிடம் ஆலோசித்து முடிவு செய்தேன். பருப்பு, பூண்டு, கடலை, முருங்கை, கறிவேப்பிலை, தேங்காய் மற்றும் எள் என, பல வகைப் பொடிகளையும், சாம்பார் பொடி, ரசப் பொடி, வத்தக்குழம்பு மசாலா, சிக்கன் - மட்டன் மசாலா என சைவ, அசைவ உணவுப் பொடிகளையும் தயாரித்தேன்.என் மகன், 'கிராண்ட்மாஸ் குட்ஸ்' என, பெயர் சூட்டி மெருகேற்றினான். சென்னை மற்றும் கோவையில் உணவுத் திருவிழாக்களில் கடை அமைத்தும், முகநுால் மற்றும் 'வாட்ஸ் ஆப்' மூலமும் விற்பனையை ஆரம்பித்தோம். சுவையைத் தக்கவைப்பது ஒரு பெரிய கலை; ஆரம்பத்தில் அது எனக்குப் பிடிபடவில்லை. மாமியாரிடம் ஆலோசனை கேட்டு, ஒரு சில மாதங்களில் சரியான விகிதத்தில் பொருட்களைச் சேர்க்கும் வித்தையை கற்றேன்.உணவுத் திருவிழாக்களில் கடைகள் அமைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து, புது வகைகளை அறிமுகம் செய்கிறேன். உணவு கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், செயற்கை நிறமூட்டி சேர்க்காததால், மார்க்கெட் போட்டியில், எங்கள் பொடிகளை மக்கள் முந்த வைக்கின்றனர்.எந்த வகை பொடி என்பதை பொறுத்து, குறைந்தபட்சம், நான்கு மாதம் முதல், அதிகபட்சமாக, எட்டு மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும். ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகளையும் விரைவில் தயாரிக்க உள்ளோம்.உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா... வீட்டில் நேரம் இருக்கிறதா... பொடி, நொறுக்குத் தீனி, உணவு வகைகள் என்று ஆர்வமுள்ள களத்தைத் தேர்ந்தெடுங்கள், தைரியமாக முதல் அடியெடுத்து வையுங்கள்.தொடர்புக்கு:99655 20839

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets