உங்கள் வருகைக்கு நன்றி

முயல் வளர்த்தல்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012


ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
முயல் குட்டி ஒரு மாசம் வரை தாயுடன் இருக்கணும். 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper 

அதுவரை தாய்ப்பால் குடிக்கணும். முதல்ல... 20 நாளில் குட்டியை பிரிச்சுட்டேன். 40 குட்டிகள் இறந்திடுச்சு. கோவை கால்நடை பல்கலை.யில் முயல் வளர்ப்பு பயிற்சி கத்து கொடுத்தாங்க. அவங்க சொன்னபடி முயல் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு  குட்டியைக் கூட நான் இழக்கல.

முயலையோ, முயல் கறியையோ முதலில் யாரும் வாங்கல. சமைக்கத் தெரியாது; ருசி பழக்கமில்லைனு சொன்னாங்க. நானே அதை சமைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவங்களுக்குக் கொடுத்தேன். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்போ நல்ல கிராக்கி. ஒரு கிலோ ரூ.200க்கு விக்கறேன்.

 முயல் இறைச்சி கடைக்காரர்கள் முயலை எடைபோட்டு உயிரோடு வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் இறைச்சியை கிலோ ரூ.250க்கு மேல் விலை வைத்து விற்கிறார்கள். 


4 முயல் குட்டி மூலம் ஒரு ஆண்டில் 300 குட்டிகள் கிடைத்தது. இதன் மூலம் மாதம் சராசரியாக ரூ.4 ஆயிரம் வரை வருவாய். குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க வருவாயும் அதிகரிக்கும். 

இவ்வாறு செல்வம் கூறினார். 

ரூ.25 ஆயிரம் போதும்

ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும். 

கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும். 
உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.

வகைகள் 

இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும். 

ரோமம் விற்றால் காசு

சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம். 

முயல் இறைச்சியை பிரியாணி, சில்லிரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம்.  சந்தை வாய்ப்பு  ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள்விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.

கறியில் மருத்துவ குணம் 

முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.

தினமும் 2 மணி நேரம் போதும்

முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம். 

கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம். 

முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும். 

கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம். 
பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும். 

வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?

முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும். 

முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம். 

பல்கலை.யில் பயிற்சி

கோவை சரவணம்பட்டி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார் கூறியதாவது: 
குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது. கிராமத்தில் குறைந்தபட்சம் 10 பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி தேவைப்பட்டால் நேரிலேயே வந்து பயிற்சி அளிக்கிறோம். தகவல் அறிய விரும்புபவர்கள் அருகிலுள்ள கால்நடை பல்கலை பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
முயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும். 

முயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets