உங்கள் வருகைக்கு நன்றி

மஹர் கொடுத்து அந்தப் பெண்ணை நிக்கா பண்ணிக்குவேன்''

வியாழன், 12 ஏப்ரல், 2012

தனக்கு ஐந்து ஆண் பிள்ளைகள்' என்ற நினைப்புத்தான் மாம்சா மரைக்காயரின் ஒரே சந்தோசம். மகா சந்தோசம். தனது ஆண் வாரிசுகளின் எண்ணிக்கை பற்றிய மகிழ்ச்சியானது, சில சமயம் மமதை கலந்த மயக்கமாகக் கூட இருந்திருக்கிறது, மரைக்காயருக்கு.
பொன் அம்பாரி பூட்டி, வைர முகபடாம் தரித்த யானைகளை ஓட்டிச் செல்கிற கம்பீரத்துடன் தான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துக் கொண்டு போவார், மாம்சா.
காலண்டர்கள் பல கரைந்து போனதில் பையன்கள் எல்லாரும் இளைஞர்கள் ஆகிவிட்டார்கள்.
தனது மளிகைக் கடைக்கு சாமான் வாங்க வருகின்ற தனது பால்ய சிநேகிதர் எவரேனும், ""கால் கிலோ புளி கொடுங்க'' என்று சொல்லிவிட்டு, "" பையனுங்களெல்லாம் என்ன பண்றாங்க?'' என்ற வார்த்தையைக் கோர்த்துவிட்டால் போதும். மகிழ்ச்சி மண்டை கொண்டு விடும் மரைக்காயருக்கு.
மூத்த பையன் பாலி டெக்னிக் முடிச்சிட்டு அபுதாபில இருக்கான். ஆயில் கம்பெனி. அமெரிக்கன் கம்பெனி... ரெண்டாவது பையன் யூனானி டாக்டருக்குப் படிக்கிறான்.. இது ஆறாவது வருசம். ரெண்டு பையனுங்க எம்.டெக்.., கடைசிப் பையன் பி.இ. கடைசி வருசம்'' என்று வாக்கியத்தை முடிக்கப் போகையில் ஏற்படும் மகிழ்ச்சி உந்துதலில், எடைக்கு மேல் இருபது கிராம் அளவுக்குக் கூடுதலாகப் போகும் புளிப் பத்தையைக் கூட பிய்த்தெடுக்க மறந்து போகும் மரைக்காயருக்கு. அப்படி ஓர் ஆனந்தம்.
ஐப்பசி  மாத அடை மழையில் வெள்ளம். ஆறு குளமெல்லாம் நிரப்பிக் கொண்டு பாய்வது போல், தனக்கு ஆண்மக்கள் ஐவர் என்ற நினைப்பு வரும்போதெல்லாம் மனது தனது கொள்ளளவைத் தாண்டி மகிழ்ச்சிக் கூத்தாடும் அவருக்கு.
காரணம் அவருடைய அனுபவக் கஷ்டம்தான்-
மாம்சா மரைக்காயருடன் கூடப் பிறந்த  ஐவரும் பெண்கள். மாம்சாதான் மூத்தவர். போதுமான வசதி என்ற நிலை மாறி ஓரளவு கஷ்டம் என்ற நிலைக்கு வந்துவிட்டது குடும்பம். ஐந்தாவதும் கடைசியுமான தங்கச்சியைக் கட்டிக் கொடுக்க வேண்டிய நிலையில்  அத்தனை வாசலும் அடைபட்டுப் போய்விட்டன. கொடுக்கல் வாங்கல் சாத்தியமற்றுப் போனது.
கடையை வித்துடலாமாடா தம்பி'' என்று பெற்றவர் கேட்டதும், கண நேரமும் தயங்காமல், ""ஆமா வாப்பா. வித்துட்டு வேலையை முடிங்க'' என்று வார்த்தைகள் வெளிப்பட்டன, மாம்சாவிடமிருந்து அந்த சமயம்.
யா அல்லாஹ்! என் பையனுக்கு அத்தனையும் ஆணாய்ப் பொறக்கணும்'' என்று மனமுருகிப் பிரார்த்தித்தார் ஆதம்ஷா,மாம்சாவின் வாப்பா, தன்னுடைய துன்பம் தன் பிள்ளைக்குத் தொடரக் கூடாதென்று.
அவருடைய பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாக மாம்சாவுக்கு அடுத்தடுத்து பிறந்த ஐந்தும் ஆண் மக்கள்.
 ""என் தங்கச்சி அஞ்சு பேரையும் கரையேத்தறதுக்கு எங்க வாப்பா பட்ட கஷ்டத்துக்கு நிவாரணம்தான் நமக்குக் கிடைச்சிருக்கிற அஞ்சும் ஆணடி'' என்று மனைவியிடம் தன் மனநிலையைப் பதிவு செய்து வைத்திருந்தார் மாம்சா.
ஆனால் இந்த மனமகிழ்ச்சிக்கு தற்போது பங்கம் வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது மரைக்காயருக்கு.
காரணம் -
நம்ம ஊர்ல ஒளிமுகம்மது ரொம்ப நல்ல புள்ள. அவனுக்குப் பொறந்திருக்கிற அஞ்சும் பொண்ணு. அதுல ஒண்ணை நீ உன்னோட முதல் பையனுக்குக் கட்டணும்'' என்று மரணத் தருவாயில் "வசியத்' செய்து விட்டு மரித்துப் போயிருந்தார் மாம்சாவின் வாப்பா.
உண்மைதான். அந்த நடுத்தரமான கடற்கரைப்பட்டினத்தில் ஒளிமுகம்மது போல் இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம். அத்தனை நியாயமானவர். மாம்சாவின் பள்ளித் தோழர். பழைய பாட்டில், பிளாஸ்டிக், பேப்பர் கடை வைத்திருப்பவர். முதல் பெண்ணுக்கு மட்டும்தான் நிக்காஹ் முடிந்திருந்தது. அவரிடம் இன்னும் நான்கு பெண்கள் பாக்கி.,
வாப்பாவின் கட்டளைப்படியே தனது மூத்த பையனுக்கு ஒளி முகம்மதுவின் இரண்டாவது பெண்ணைத் திருமணம் செய்ய ஆயத்தமானார் மாம்சா. சென்ற முறை பையன் அபுதாபியிலிருந்து வந்தபோதே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்த பயணம் ஊருக்கு வந்ததும் நிக்காஹ் என்பதாக உடன்பாடு.
இந்த இடத்தில்தான் மாம்சா மரைக்காயரைத் தாக்க முற்பட்டது அதிர்ச்சி அலை...
 ஆம்!
நிச்சயதார்த்தம் முடிந்து அபுதாபிக்கு விமானம் ஏறப் போகிற தருணத்தில், ""பொண்ணு வீட்டிலிருந்து பணம், நகை எதுவும் வாங்கக் கூடாது. சுருக்கமாச் சொல்றேன். அவுங்க வீட்லேர்ந்து ஒரு குண்டூசி கூட நமக்கு வேணாம். இன்ஷா அல்லாஹ் நான் திரும்பி வரும்போது பத்து பவுன் கொண்டாந்து மஹர் கொடுத்து அந்தப் பெண்ணை நிக்கா பண்ணிக்குவேன்'' என்று பையன் சொன்னதும் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டது போலிருந்தது மரைக்காயருக்கு.
தனது தங்கைமார்களுக்கு சீர், செனத்தி என்று கொடுக்க எதையெல்லாம் வாங்கியதையும், விற்கக் கூடாதவற்றை எல்லாம் விற்றதையும் எண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி அது.
அதைக் கொடு இதைக் கொடுன்னு நம்ம கேட்கப் போறதில்லே. ஆனா அவுங்களா தம் பெண்ணுக்கு கொடுக்கிறதை வாணாம்னு சொல்ல இவன் யாரு?''
வீட்டுக்குத் திரும்பியதும் தனது மனதிலிருந்த ஆதங்கத்தை மனைவியிடம் கொட்டினார் மாம்சா.
நபீசா, மாம்சா மரைக்காயருக்கு கிடைத்த மனைவி என்பதை விட "மதி மந்திரி' என்பதே சரி. நகைச்சுவை உணர்வும் அதிகம். "நச்'சென்று கேட்கும் துணிச்சலும் மிகுதி நபீசாவுக்கு. "பட்'டென்று கேட்டாள்:
பையனைப் பெத்த உங்களுக்குப் பொண்ணு வீட்டிலேர்ந்து எதுவும் எதிர்பார்ப்பு இருக்கா?''
 ""இல்லே... அதுக்கில்லே...''
""பின்னே எதுக்கு?''

மனைவிக்குப் பதில் சொல்ல மரைக்காயரிடம் வார்த்தை இல்லை. ஆனால், மனசுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது ஓர் அரிப்பு. அதாவது, "மத்த நாலு பயவளும் இப்படித்தான் செய்வானுகளோ?' என்று.
இந்த இம்சை போதாதென்று இன்றைய நிகழ்வு ஒன்று மாம்சாவின் மனதில் ரணத்தை ஏற்படுத்திவிட்டது.
வேறொன்றுமில்லை. மாம்சா மரைக்காயருக்கு கடைக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறது சம்பந்தியாகப் போகிற ஒளி முகம்மதுவின் பழைய பாட்டில் கடை.  தெருவடிக்குப்போய் பழைய பொருட்களை திரட்டிக் கொண்டு விற்கிற சைக்கிள்காரர்கள் பொழுதடையத்தான் வருவார்கள். அதுவரை ஒளிமுகம்மது கடையில் சும்மாதான் உட்கார்ந்திருப்பார்.
மரைக்காயருக்கு அவசரமாக கூத்தாநல்லூர் போய் வர வேண்டிய வேலை. கடையைச் சாத்திவிட்டுப் போக விரும்பாத மாம்சா, சம்பந்தியிடம் போய், ""கடையில் பையன் இருக்கான். சித்தே கடையை வந்து பார்த்துக்குங்க... மதியத்துக்குள்ள வந்துடுவேன்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
 ""அடடே... இன்னிக்கு சரக்கு ஏத்த லாரி வருதே'' என்றார் ஒளிமுகம்மது, பளிச்சென்று.
சற்றும் எதிர்பாராத பதில். சம்பந்தியிடம் தனது முதல் கோரிக்கையே மறுதலிக்கப்பட்டதில் மரைக்காயருக்கு பலத்த ஏமாற்றம். பொழுது எப்போது போகும் என்றாகிவிட்டது.
இரவு பத்துமணிக்கெல்லாம் கடையைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மரைக்காயர் செய்த முதல் வேலை, சம்பந்தி ஒளி முகம்மது தன்னுடைய வேண்டுகோளை நிராகரித்தது பற்றி நீட்டி முழக்கி மனைவியிடம் புகார் செய்ததுதான்.
 ""ஒரு குண்டூசியைக் கூட எதிர்பார்க்காம அவுங்க வீட்டு பொண்ணை ஏத்துக்கிற நமக்கு ஒரு ரெண்டு மணி நேரப் பொழுதுக்கு கடையைப் பார்த்துக்கக் கூட மனசு இல்லாத சம்பந்தி என்ன சம்பந்தி'' என்று தன் ஆதங்கத்தைச் சொல்லி முடித்தார் மாம்சா.
கணவர் சொன்னதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நபீசாவுக்கு அவரது "உண்மையான மனக்குறை' என்னவென்று புரிந்துவிட்டிருந்தது. மெüனம் காத்தாள்.
""என்ன குட்டெ! நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டிருக்கேன். நீ பேசாம இருக்கே'' என்றார் மனைவியின் பதிலை எதிர்பார்த்த மாம்சா.
சரி என்று  பட்டால் அதை சொல்லத் தயங்காத நபீசா பளீரென்று சொன்னாள்: ""உங்க பிரச்னை சம்பந்தி வந்து கடையைப் பார்த்துக்கலையே என்பதல்ல''
""பின்னே?'' - திகைப்புடன் கேட்டார்.
""நீங்களே சொன்ன மாதிரி ஒரு குண்டூசி  கூட வாங்காம பொண்ணு எடுக்கிறோமேங்கறதுதான்''
 ""என்ன குட்டெ''
""ஆமாங்க. நான் கவனிச்சிக்கிட்டுதான் வர்ரேன். உங்க மனசுக்குள்ள மறுவிக்கிட்டிருக்கிறது அதுதான். காலையில எந்திரிச்சு குளிச்சிட்டு தலையைத் தொவட்டியும் தொவட்டாமையுமா கடைக்கு ஓடறதும், ஊர் மொத்தமும் அடங்கினப்புறம் கடையைப் பூட்டிட்டு வர்ரதுமாக இருக்கியளே தவிர நாட்டு  நடப்பு தெரியல உங்களுக்கு'' என்று கணவரை நேருக்கு நேராய்ப் பார்த்தாள் நபீசா!
""என்ன தெரியலேங்கிறே எனக்கு?'' குற்றத்தை ஒப்புக் கொள்ள தயாராகிவிட்ட ஒரு குற்றவாளியின் குரலைப் போல் ஒலித்தன மாம்சாவின் வார்த்தைகள்.
""பேப்பர் வாங்கறீங்களே... அதை என்னைக்காவது எடுத்து படிக்கிறீங்களா?''
""நான் எங்கே படிக்கிறேன். நீ தான் படிக்கிறே''
""இப்ப நானே படிக்கிறேன். கேட்டுக்குங்க'' என்ற நபீசா தன் வீட்டுக்கு வரும் தினசரியின் வெள்ளிக் கிழமைக்கான இணைப்பை எடுத்து வாசிக்கலானாள்.
"எனது மகனுக்குத் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?'
"என் மகனுக்கு முப்பது வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்?'
"எனக்கு எப்போது திருமணம் நடக்கும். எப்படிப்பட்ட பெண் மனைவியாக அமைவார்?'
"எனது திருமணத்துக்காக ஐந்து வருடமாக முயற்சி செய்கிறேன். எப்போது எனக்கு மனைவி அமைவார்?'
"எனது சகோதரருக்கு ஆறு ஆண்டுகளாகத் திருமண முயற்சி செய்கிறோம். எப்போது அவருக்குத் திருமணம் நடக்கும்?'
வாசிப்பதை நிறுத்திக் கொண்ட நபீசா, கணவரின் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த தினசரி இணைப்பை சற்றே தணித்து,
""இது மட்டும் இல்லீங்க. இந்தப் பேப்பர் முழுக்கவும் மகனுக்கு எப்போ பொண்ணு கிடைக்கும்ங்கறதுதான் முக்கிய கேள்வி. ஒரே கவலை''
""என்ன குட்டெ தலை கீழாய்ச் சொல்றே''
""தலை கீழாய்த்தாங்க ஆயிடுச்சு... பொண்ணுக்கு நல்ல பையனைத் தேடி அலைஞ்ச காலம் போயி பையனுக்கு நல்ல பொண்ணு கிடைக்குமான்னு தவிக்கவுட்டுட்டான். புள்ளையை பெத்தவங்க அடிச்ச லூட்டியையும் பொண்ணைப் பெத்தவங்க பட்ட கஷ்டத்தையும் பார்த்துட்டு அல்லா அப்படியே தலை கீழா மாத்திட்டான்ல...''
""இப்போ பணம் காசு பெரிசு கெடயாது.. அதான் தெருவுக்குத் தெரு பணப் பெட்டியை வச்சு அட்டையைச் சொருகி அள்ளிக்கிட்டுப் போங்கன்னு வச்சுட்டானே... பொண்ணு கெடைக்குறதுதான் கஷ்டம்'' நபீசா சொல்லிக் கொண்டே போக-
தானும் ஒருமுறை அந்த தினசரியின் இணைப்பை எடுத்து வாசித்துப் பார்த்த மாம்சா மரைக்காயர் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். இப்படியொரு மாற்றம் நிகழ்ந்திருப்பது மெய்யாலுமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
""ஒண்ணு சொல்லவா குட்டெ'' என்றார் மனைவியைப் பார்க்காமல் மோட்டு வளையைப் பார்த்தபடி.
""சொல்லுங்க'' என்றாள் நபீசா.
""எப்படிப் பார்த்தாலும் என்னை விட ஒளிமுகம்மது நல்ல ஆள்தான். நாம ஒண்ணும் யாருக்கும் கெடுதி நினைக்கிற ஆள் கிடையாது. இருந்தாலும் வெறுப்பு, கசப்பு பாராட்டுவோம். ஆனா ஒளி முகம்மதுக்கு எந்தக் குறையும் கிடையாது''
""சொல்ல நெனச்சதைச் சொல்லுங்க'' என்று ஊக்குவித்தாள் நபீசா.
""அப்பேர்ப்பட்ட நல்ல மனுசனுக்கு அஞ்சு பொண்ணு பொறந்திருக்கு.. நமக்கு அஞ்சும் ஆணா கிடைச்சிருக்கேன்னு ரொம்ப நாளா குழப்பம். அது இப்பதான் தெளிவா ஆகி இருக்கு'' என்ற மாம்சா மரைக்காயர் நெடுநேரம் சிந்தனை வயப்பட்டவராக வானத்தை வெறித்தபடி மெüனித்திருந்தார்.
அவருடைய மெüனம் உடைபடும் வரை தானும் பொறுமையாகக் காத்திருந்தாள் நபீசா.
""மாற்றம்தான்.. நமக்கு ஒண்ணும் ஏமாற்றம் கிடையாது'' என்றார் மாம்சா, மனைவியின் முகம் பார்த்து.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets