மதி'யை மயக்கி மனிதனின் செயல்பாடுகளை முடக்கும் எந்த ஒரு பொருளுமே "போதை'தான்
திங்கள், 18 மார்ச், 2013
மதி'யை மயக்கி மனிதனின் செயல்பாடுகளை
முடக்கும் எந்த ஒரு பொருளுமே "போதை'தான். அந்த வகையில் ஆண்டுக்கு 2 மாதங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரையும் ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்தும் ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்)
கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் 2-இல் தொடங்க இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) எனும் தனியார்
விளையாட்டு அமைப்பின் கிளை நிறுவனமான ஐ.பி.எல்., நாட்டின் பெரும் தொழில் அதிபர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் கூட்டுசேர்த்துக் கொண்டு, இந்திய மக்களின் "அதிதீவிர' கிரிக்கெட் ரசனையைப் பயன்படுத்தி கோடி கோடியாக பணத்தைத் தங்கள்
பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொள்வதற்குத்தான் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்.
இப்போது வெற்றிகரமாக 6-ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட இப்போது விளம்பரங்கள் மூலம் மட்டும் 27 சதவீதம் அதிக வருமானம் ஈட்ட முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டையும், நாட்டு மக்களையும் இந்த ஐ.பி.எல். எந்த
அளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதைக் கடந்த 5 ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டிகளுக்கு டிக்கெட் வாங்க ஸ்டேடிய வாசலில் ரசிகர்கள்
காத்துக்கிடப்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஐ.பி.எல். போட்டியின்
தொடக்கத்தில் இருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் அரங்கில் நடுநாயகமாக
"சிக்கன உடையில்' நடனமாடும் "சியர்
லீடர்ஸ்'. இவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன
தொடர்பு? இப்பெண்கள் யாருக்கு, எந்த வகையான உற்சாகத்தை அளிக்கிறார்கள் என்பதைப் போட்டி ஏற்பாட்டாளர்கள்
விளக்கினால்தான் புரியும்.