வீட்டுத் தோட்டம்
புதன், 19 ஜூலை, 2017
வீட்டுத் தோட்டம் அமைப்பதன் ஆரோக்கியம் மற்றும் லாபம் குறித்து விளக்கும், தமிழ்நாடு வேளாண் பல்லைக்கழகத்தின் மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியர் விசாலாட்சி: நாம் முதலில், நமக்கு இருக்கும் இடவசதியை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பின் அதற்கேற்ப, பயிர்களைத் தேர்வு செய்யலாம்.மண்ணை உழுது கிளறி, அதில் மக்கிய உரங்களை இட்டு பண்படுத்த வேண்டும். அதில், குழி அல்லது பாத்திகள் அமைத்து, பின் விதை மற்றும் செடிகளை நடவு செய்ய வேண்டும். அவ்வப்போது, செடிகளுக்குத் தேவையான தண்ணீர் விடவேண்டும். ஆடு, மாடு மற்றும் காய்கறிகளின் கழிவுகளை, உரக்குழியில் சேகரித்து, அவ்வப்போது செடிகளில் இடவேண்டும். பூச்சித்தாக்குதல் இன்றி, பயிர்களை காக்க வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ் போன்றவற்றை, மாதம் ஒருமுறை இடலாம்.ஐந்து பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு, 200 சதுர மீட்டர் இடம் இருந்தால் போதும். அதிலிருந்து ஆண்டு முழுவதும், காய்கறிகளை விளைவித்துக் கொள்ளலாம்.வீட்டின் முகப்பில் அழகுச் செடிகள், மலர்ச்செடிகள் மற்றும் பழமரங்களை நடவு செய்யலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கும் போது, அதன் வேலிகளில் பாகல், புடலை, துாதுவளை, பிரண்டை போன்ற கொடிப்பயிர்களை விதைக்கலாம்.அதற்கு அடுத்ததாக பப்பாளி, வாழை, நெல்லி, முருங்கை போன்ற மரங்களை நடலாம். அப்போதுதான், அதன் நிழல் பெரிய அளவில் செடிகளைப் பாதிக்காது.வீட்டுத் தோட்டத்தின் நடுப்பகுதியில் பாத்திகளாகப் பிரித்து, அதில் ஒவ்வொரு பாத்தியிலும், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் போன்ற காய்கறிச் செடிகளை நடலாம். பாத்திகளின் ஓரங்களில் மரவள்ளி, சேனை, முள்ளங்கி, கருணை,
கீரைகள் போன்ற செடிகளை நடலாம். தோட்டத்தில் பள்ளமான இடத்தைத் தேர்வு செய்து, அங்கு எருக்குழி அமைக்கலாம்.ஊட்டச்சத்து மிகுந்த தரமான காய்கறிகளை, இயற்கையான முறையில் தங்கள் வீடுகளிலேயே விளைவிப்பதன் மூலம், ஒரு குடும்பம் முழுமையான ஊட்டச்சத்தைப் பெறமுடியும். இதனால், ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம் கிடைக்கும்.அதுமட்டுமின்றி, துளசி, துாதுவளை, கற்றாழை போன்ற மருத்துவ பயிர்களையும் வீட்டிலேயே வளர்க்கலாம்; இதனால், மருத்துவச் செலவு குறையும்.இதுபோன்ற தோட்டம் அமைப்பதால், உடல் உழைப்பு இருக்கும். வளர்ப்பவர்களுக்கு நல்ல மனநிறைவும், உபயோகமான பொழுதுபோக்கும் கிடைக்கும். செடிகள் வளர்வதைக் காணும் போது, செடி வளர்ப்பவர்களுக்கு உள்ள மன உளைச்சல், மன அழுத்தம் குறையும். மேலும், குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும்.தொடர்புக்கு: 04362-267680