முருங்கை விவசாயம்
புதன், 19 ஜூலை, 2017
வறட்சி, மழை என, எந்த காலமாக இருந்தாலும், முருங்கையை லாபகரமாக பயிரிட்டு வரும், விவசாயி மணிசேகரன்: நான், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்கு அருகில் உள்ள, மீனாட்சி வலசு கிராமத்தை சேர்ந்தவன். என்னிடமுள்ள, 60 ஏக்கரில், 20 ஏக்கர், முருங்கை மட்டுமே பயிரிட்டுள்ளேன். இப்பகுதி, மழை அதிகம் பெய்யாத, கடும் வறட்சியானது. இதனால், 'போர்வெல்' அமைத்து, 'சொட்டு நீர் பாசனம்' மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறேன்.வானம் பார்த்த பூமியில் கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியவை மட்டும் தான், விவசாயம் செய்ய வேண்டும் என்பதில்லை. அதே வானம் பார்த்த பூமியில், முருங்கையை நட்டுப் பாருங்கள். உங்களுக்கு, வாரத்துக்கு வாரம் பணம் கிடைக்கும். வறட்சி, மழை என, எந்த காலமாக இருந்தாலும், விவசாயியை ஏமாற்றாமல் பணம் கொடுப்பது, முருங்கை விவசாயம் மட்டும் தான். நாட்டு முருங்கை, செடி முருங்கை, கரும் முருங்கை என, பல வித முருங்கை இருக்கிறது. மரமுருங்கையை நடுவதாக இருந்தால், நன்றாக வளர்ந்து காய் கொடுத்து கொண்டிருக்கும் மரத்தின் குச்சியை எடுத்து, 'பதியன்' போட வேண்டும். வைகாசி மாதம் நட்டு வைத்தால், மரம் செழிப்பாக வளரும். ஒரு மரத்திற்கும், இன்னொரு மரத்திற்கும், 10 அடி இடைவெளி விட்டு நட வேண்டும். பக்கவாட்டில், 25 அடி இடைவெளி விட வேண்டும்.பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினால் போதும், உரம் பெரிதாக தேவையில்லை. முதல், 15 நாட்களுக்கு மாட்டுச்சாணம் வைத்தால் போதும். இலைகளில் பூச்சி இருந்தால், பூச்சிமருந்து அடிக்கலாம். மாட்டின் சிறுநீரை தெளித்தாலும் பூச்சி பிடிக்காது.செடி முருங்கைக்கு, 5 அடி இடைவெளி விட்டு நட வேண்டும். இதற்கான தண்ணீரை, வாரம் தவறாமல் பாய்ச்ச வேண்டும். இது ஒரு ஆண்டு மட்டுமே வளரும். பிறகு, வேறு செடி வைக்க வேண்டும். செம்மண், சிறிதளவு களிமண் கலந்த வறட்சி பகுதியில் தான், வியாபார நோக்கில் இதை பயிரிட முடியும். எவ்வளவு வறட்சி இருந்தாலும், ஆண்டிற்கு இரண்டு போகம் காய் விளையும். முருங்கை மரத்தின் கீழ், எப்போதும் தண்ணீர் நிற்க கூடாது. இதனால், குறைந்தளவு தண்ணீரே தேவைப்படும். முருங்கை மரத்திற்கான பராமரிப்பும் மிக மிக குறைவு. முருங்கையை, எவ்வளவு குறைவாக விற்றாலும், 1 ஏக்கரில் ஒரு சீசனுக்கு, செலவு போக, 50 ஆயிரத்திலிருந்து, 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஆண்டுக்கு மூன்று சீசனும் நன்றாக இருந்தால், நிச்சயம் ஒரு ஏக்கருக்கு, 1.5 லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம்.