உங்கள் வருகைக்கு நன்றி

மின்னல் கோபமும் புயல் கோபமும்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

சில நாள்களுக்கு முன் ஓர் ஆட்டோவில் பயணிக்க நேர்ந்தது. ஓட்டுநர் நடுத்தர வயதினர். நிதானமாகவே வண்டியைச் செலுத்தினார். அப்போது ஒரு பக்கத்துத் தெருவிலிருந்து திடீரென்று குறுக்கே பாய்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ஆட்டோவின் மீது லேசாக மோதியது. அதில் வந்த இரு இளைஞர்கள் தமது தவறை மறைப்பதற்காக ஆட்டோ ஓட்டுநரைக் கேவலமாக ஏசியதுடன் முஷ்டியை உயர்த்தித் தாக்கவும் முயன்றார்கள்.
 ஓட்டுநர் பதறாமல் ""சரி தம்பிகளா, தெரியாமல் நடந்து போச்சு! போங்க!'' என்று சொல்லியவாறு வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனார்.
 எனக்கு வியப்பு மேலிட்டது. ""தப்பு செய்தது அவர்கள், ஏச்சு வாங்கியது நீங்கள். சூடாகப் பதில் கொடுத்திருக்கலாம்'' என்றேன்.
 ""அய்யா, நான் இந்தப் பேட்டைக்காரன்தான். இங்கு என் உறவுகள் அதிகம். நான் வண்டியை விட்டு இறங்கி ஒரு குரல் கொடுத்தால் போதும். பெரிய கூட்டமே வந்து அந்தப் பையன்களைத் துவட்டி எடுத்து விடுவார்கள். அப்புறம் என்ன ஆகும்? அந்தப் பையன்கள் தம் பேட்டையிலிருந்து தமது ஆள்களை அழைத்து வந்து தகராறு செய்வார்கள். அடிதடி நடக்கும். அது பெரிய மதக்கலவரமாக வளர்ந்துவிடும். போலீஸ் வரும். தடியடி, துப்பாக்கிச் சூடு, நாலைந்து பேர் சாவு, 144 தடை உத்தரவு என்று தொடர்கதையாக நீளும். இதையெல்லாம் யோசித்துப் பார்த்துத்தான் நான் அடங்கிப் போனேன். இப்போது யாருக்கும் நஷ்டமில்லை, சேதமுமில்லை.''
 ""உங்களுக்குக் கொஞ்சம்கூடக் கோபம் வரவில்லையா?''
 ""வந்தது, பெருங்கோபம் வந்தது. அது மின்னல் கோபம். வந்த வேகத்தில் மறைந்தும் போயிற்று''.
 ""அது என்ன மின்னல் கோபம்?'' என்று கேட்டேன்.
 ""நம் உடம்பில் சாதுவான ஈயோ, கருப்பு எறும்போ ஏறினால் நாம் கோபப்படாமல் அதை ஊதித் தள்ளுவோம். ஆனால், கொசுவோ சிவப்பு எறும்போ ஏறினால் சும்மாயிராமல் சுரீர் என்று கடிக்கும். நாம் முன்பின் யோசியாமல் அல்லது நம்மையும் அறியாமல் அதைப் பட்டென்று அடித்துக் கொல்வோம். அதற்குக் காரணம் சட்டென ஏற்படும் மின்னல் கோபம்! அது உடனடியாக மறந்து போகும்.
 ""அப்போ புயல் கோபம் என்றும் ஒன்று உண்டோ?''
 ""உண்டு. முதலில் சிறிய காற்றழுத்த மண்டலம் என்று ஆரம்பிப்பது படிப்படியாக வலுவடைந்து பெரிய சூறாவளியாக மாறும். அதேபோல மக்களுக்குச் சிறு சிறு குறைகளும் கோபதாபங்களும் அதிருப்திகளும் ஏற்பட்டு அவை வளருமானால், ஒருநாள் அவர்கள் பொங்கி எழுந்து புரட்சி செய்து அரசாங்கத்தைக் கவிழ்த்து விடுவார்கள். அரேபியாவில் இப்போது அதுதான் நடக்கிறது. இதிலே வேடிக்கை என்னவெனில் அந்தப் புரட்சிப் புயலுக்கு அரேபிய வசந்தம் என்று பெயரிட்டிருப்பதுதான்!'' என்று சொல்லிச் சிரித்தார்.
 எனக்கு கூடால் என்ற பெண் ஆய்வரின் பதிவுகள் நினைவுக்கு வந்தன. அவர் ஆப்பிரிக்கக் காடுகளில் வசிக்கும் சிம்பன்சி குரங்குகளின் வாழ்வியலை ஆராய்ந்தவர். பல ஆண்டுகள் அவற்றின் கூடவே தங்கித் தம்மில் ஒருவராக அவற்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஒருமுறை இரண்டு சிம்பன்சி கூட்டங்களுக்கிடையில் நிகழ்ந்த எல்லைத் தகராறை அவர் விவரித்திருக்கிறார். ஒரு கூட்டம் தமது எல்லைக்குள் வந்துவிட்டதைக் கண்ட மற்ற கூட்டம் ஒன்றாகக் கூடிக் காடே அதிரும்படி கூச்சலிட்டுக் கிளைகளில் தாவியும் பாய்ந்தும் ஆரவாரம் செய்தது. எல்லை தாண்டி வந்த கூட்டமும் பதிலுக்கு ஆர்ப்பரித்தது. சில நிமிஷங்களுக்கு இருதரப்பும் மாறி மாறி லாவணி பாடியபின் முதல் கூட்டம் பின்வாங்கியது. காட்டில் அமைதி திரும்பியது. எதிரிகளைத் துரத்திக்கொண்டு போய்த் தாக்கும் வன்மப் போக்கு சிம்பன்சிக்களிடம் தென்படுவதில்லை. எல்லாம் கத்தியின்றி ரத்தமின்றிக் கத்தி போடும் யுத்தம்தான்.
 முன்கோபிகள் என்று பெயர் பெற்ற மலைக்கொரில்லாக்கள் கூட வன்முறைக் கைகலப்புகளில் ஈடுபடுவதில்லை. தலைவர் கொரில்லா எழுந்து நின்று மார்பைத் தட்டிக் கூச்சல்போட்டே எதிரிகளை விரட்டி விடும். மனிதர்கள் மட்டும்தான் பழைய தீங்கிழைப்புகளை மறக்காமல் மனதில் தேக்கி வைத்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்கிறபோது பழிவாங்கும் குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.
 தமது செயல்களுக்குப் பின்விளைவுகளும் எதிர்விளைவுகளும் தொடர்கதையாக நீளலாம் என்பதை ஒரு கணம் நின்று நிதானித்துச் செயல்பட்டால் பல சேதங்களும் மரணங்களும் தவிர்க்கப்படும். மதம், நாடு ஆகியவற்றின் பெயரில் கொன்றும் கொல்லப்பட்டும் தியாகிப் பட்டம் பெறவே பலர் விரும்புகிறார்கள்.
 மின்னல் தாக்கிக் காடே அழிந்து போகிறது. மின்னல் கோபமும் ஒரு பொறியாகிப் பெரும் சேதமேற்படுத்த முடியும். 2010, டிசம்பர் 17-ம் நாள் டுனீசியாவில் முகமது பாவாசிசி என்ற பழ வண்டி வியாபாரியை ஒரு பெண் போலீஸ் காவலர் கன்னத்தில் அறைந்துவிட்டாள். அவமானத்தால் பாவாசிசி மனமுடைந்து நடுத்தெருவில் தீக்குளித்து விட்டான். அந்தச் சம்பவம் அக்கினிக் குஞ்சாக அமைந்து டுனீசியாவின் சர்வாதிகாரியை விரட்டியது. அத்துடன் நில்லாமல் எகிப்து, லிபியா, சிரியா என மற்ற அரேபிய அரசாங்கங்களையும் கவிழ்த்தது.
 1914-ம் ஆண்டில் செர்பிய தேசியவாதிகள் ஆஸ்திரிய இளவரசரான பிரான்ஸ் பெர்டினாண்டைச் சுட்டுக் கொன்றதன் பின்விளைவாக முதல் உலகப் போர் மூண்டு பல லட்சம் மக்களைப் பலி வாங்கியது. இரண்டாவது, உலகப் போரின்போது ஜப்பானியத் தளபதிகள் முன்யோசனையின்றி பேர்ல் ஹார்பரைத் தாக்கியழித்ததால் அதுவரை போரில் தலையிடாமல் ஒதுங்கியிருந்த அமெரிக்கா வெகுண்டெழுந்து அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களைச் சுட்டுப் பொசுக்கியது.
  

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets