தூக்கம் கண்களைத் தழுவட்டுமே!
சனி, 5 ஜனவரி, 2013
பகலில் தூங்கினால் ஆகாது. பகல் தூக்கத்தால் வெயிட் போட்டுவிடும்.
இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கொளுத்தும் கோடை வெயிலின் அனலையும்
பொருட்படுத்தாமல்... மெய் மறந்ந்....து தூங்குபவர்கள் நம் ஊரில் அதிகம்.
இப்படிப் பகலில் தூங்குபவர்களை வைத்து பென்சில்வேனியாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஆராய்ச்சி
செய்தார்கள். என்ன கண்டுபிடித்தார்களாம்?
பகலில் ஒரு மணிநேரம் தூங்கினால் இதயத்திற்கு நல்லதாம்.
இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் வேலை நேரம் அதிகரித்திருக்கிறது. இண்டர்நெட், தொலைக்காட்சி என்று நேரம் போவது தெரியாமல் வேலை பார்த்து,இரவில் தாமதமாகத் தூங்கச் செல்வதும் அதிகரிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது தாத்தாக்கள்
தூங்கியதைவிட இப்போது இரண்டு மணி நேரம் குறைவாகத் தூங்குகிறோமாம்.
விளைவு?
எப்போதும் அசதியான உடம்பும், தூங்கி வழிகிற கண்களும். இதனால் மன அழுத்தமும், இரத்த அழுத்தமும் அதிகரித்துவிடுகின்றதாம். பல
நீண்டகால நோய்களை வரவேற்க உடல் தயாராகிவிடுகிறதாம்.
பகலில் ஒரு மணி நேரம் சிலரைத் தூங்க வைத்துச் செய்த இந்த ஆராய்ச்சியின்
முடிவில் தூங்கியவர்களின் இரத்த அழுத்தம் குறைந்தும், மன அழுத்தம் குறைந்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு விஷயம்.
அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அவ்வப்போது பகலில் கோழித் தூக்கம் போடுவது இந்தக் கணக்கில்
வராது.