உங்கள் வருகைக்கு நன்றி

மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே முதல் பணி

செவ்வாய், 22 அக்டோபர், 2013

பாத்திமா தாகிரா... சென்னை மதுரவாயல் பகுதியில் வசிக்கிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக ஆன்மிகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பலரது புருவங்களை உயர்த்தும் வகையில், இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். அதன்மூலம் 'இஸ்லாம், பெண்களுக்கு எந்தச் சுதந்திரத்தையும் வழங்கவில்லை' எனும் தவறான கற்பிதங்களைக் கட்டுடைக்கிறார்.
"மனிதநேயத்துடன் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும்என்ற நபிகளின் மொழிதான் நான் இந்தப் பணியைச் செய்ய உந்துதலாக இருந்ததுஎன்று நிதானமாகத் தன் பார்வையை முன்வைக்கிறார் ஃபாத்திமா.

படங்கள்: ந. வினோத் குமார்

"சிறு வயதிலேயே அரபு மொழி கற்றுக்கொண்டேன். அதனால் இஸ்லாத்தின் வேத நூல்களை மூல மொழியிலேயே படிக்க முடிந்தது. அவற்றை ஆழ்ந்து கற்கும்போது மதத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவும் கிடைத்தது.மரணித்த எந்த உயிரும் எவ்வகையிலும் (பேயாகவோ, ஆவியாகவோ) இந்த உலக வாழ்வைத் திரும்பப் பெற இயலாதுஎன்று குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பலர் அதைப் புரிந்துகொள்ளாமல் பேய் என்றும் ஆவி என்றும் சொல்லி, உறவினர்கள் இறந்துவிட்டால்கூட அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைத் தாங்களே முன்வந்து நடத்தாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி சடங்குகளைச் செய்கிறார்கள். இது தவறு.
இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கவே, பெண்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினோம். முதலில் நான் கற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்தேன். கடந்த ஐந்து வருடங்களாக 'ஜனாசா' எனும் இறுதிச் சடங்கு செய்யும் முறையை பல பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கத் துவங்கினேன்.
தாய் இறந்துவிட்டால் மகள்கூட இறுதிச் சடங்கு செய்ய முன்வரமாட்டார். அப்படி இருந்த பலர் இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பழகி இருக்கிறார்கள். இதுவரை சுமார் 5,000 பெண்களுக்கு மேல் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு, தங்கள் பகுதிகளில் இஸ்லாமியப் பெண்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்கள் முன்நின்று இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள்.
எங்களது இந்தப் பணியை எங்கள் சமூகத்தினரே சிலர் எதிர்க்கிறார்கள். காரணம், இறுதிச் சடங்கில் நடைபெறும் ஒவ்வொரு சடங்குமே இவர்களுக்கு வருமானம்தான். நாங்கள் இலவசமாக இறுதிச் சடங்கு நடத்துவதால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் தடைபடுகிறது. அதனால் எதிர்ப்புகள். ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு.
பெண்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களிடையே உள்ள பல தவறான கற்பிதங்களை, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதைத்தான் எங்களின் முதல் பணியாகக் கொண்டுள்ளோம். என்னுடைய இந்தப் பணிக்கு என் கணவர் ஆதரவாக இருக்கிறார்.
இறுதிச் சடங்கு செய்வதால் எந்தப் பிரதிபலனையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதில் கிடைக்கும் பூரண மன நிறைவு போதுமே என்று புன்னகைக்கிறார் ஃபாத்திமா.
நன்றி - தி ஹிண்டு

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets