உண்மையை சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லையா? மனம் இல்லையா?
புதன், 30 அக்டோபர், 2013
இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு
மேற்பட்ட முதியவர்களில் 20 விழுக்காட்டினர் மனநோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை
தெரிவித்துள்ளது.
இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 1947ஆம் ஆண்டு 32 வயதாக
இருந்தது. அது 2011ஆம் ஆண்டு 63.4 ஆக உயர்ந்தது. இதில் 60 வயதிற்கு
மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 7.1 விழுக்காடாக உள்ளது.
இதேபோல் வரும் 2050ஆம்
ஆண்டுக்குள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 326 விழுக்காடாகவும், 80 வயதிற்கு
மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 700 விழுக்காடாகவும் உயரும் வாய்ப்புள்ளது
என்றும் அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
தற்போது 1.71 கோடி பேர்
மனநோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையில் ஏற்படும்
மாற்றத்திற்கு ஏற்றவாறு மருத்துவமனை வசதிகளும், பணியாளர்களின்
தேவைகளும் அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முதியவர்கள்
மனநலம் பாதிக்கப்படுவதற்குக் காரணம் குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாததே! பெற்று
வளர்த்த பிள்ளைகளே தங்களைப் புறக்கணிக்கும்போது பெற்றவர்களின் மனநிலை எப்படி
இருக்கும்? அந்த வேதனையின் உச்சமே மன இறுக்கமாகி மன நோயாக மாறுகிறது என்று
மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"அன்னையையும் பிதாவையும்வும் பாரமாகக் கருதுகிற
இளைய தலைமுறையை என்னென்பது? பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் வயிற்றில்
இருந்தபோது அவள் பாரமாகக் கருதியிருந்தால் இன்று நாம் பூமியில் பிறந்திருக்க
முடியுமா? இதை எண்ணிப் பார்க்க இளைய தலைமுறைக்கு நேரமில்லை.
விலங்குகளின்
குட்டிகள் நடக்கத் தொடங்கியதும் தாயை விட்டுப் பிரிந்து விடுகின்றன; பறவைக்
குஞ்சுகள் சிறகு முளைத்ததும் தாயை விட்டு பறந்து விடுகின்றன. மனிதர்களும்
அப்படியிருந்தால் பகுத்தறிவு பெற்று என்ன பயன்? நமக்கும், விலங்குகளுக்கும்
வேறுபாடு என்ன?
"முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்' என்பார்கள். பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை
மட்டை சிரித்ததாம். எவ்வளவு காலத்துக்கு இளமை இப்படியே இருக்கப் போகிறது? எல்லாருமே
முதுமையை நோக்கியே பயணம் செய்கிறோம். இதுதான் உண்மை. இந்த உண்மையை சிந்தித்துப்
பார்க்க நேரம் இல்லையா? மனம் இல்லையா?
"ஒரு தாய் 10 குழந்தைகளைப்
பேணி வளர்க்கலாம்; 10 குழந்தைகள் ஒரு தாயைப் பேணுவது அரிது' என்பது
சீனப் பழமொழி. "அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார்
ஒளவைப் பிராட்டி. அருமையான காரியங்களைச் செயல்படுத்துவதே அறிவுடைய மனிதர்களின்
அடையாளம். அந்த அடையாளங்களை இழந்து விட்டு வாழ்வதால் பயன் என்ன?
பிள்ளைகளைப் பெற்று
வளர்த்து படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பல பெற்றோர்கள் தனிமையில்
தனி வீட்டில் தவிக்கின்றனர். பணம் இருந்தும் உதவிக்கு ஆளில்லை; உறவுக்கும்
யாருமில்லை; உபசரிப்புக்கும் யாருமில்லை. இதனைத் தெரிந்து கொண்ட திருடர்கள்
அவர்களது பணத்துக்காகப படுகொலை செய்யும் பரிதாபப் போக்கு தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது. எங்கே இருக்கிறது மனிதநேயம்?
திருவள்ளுவர்
கூறியது போல உறுப்புகளால் மட்டும் ஒருவர் மனிதராக மாட்டார். கூர்மையான அறிவு
பெற்றிருந்த போதும் மனிதப் பண்பு இல்லாதவர்கள் மரங்களைப் போன்றே மதிக்கப்படுவர்.
அரம்போலும் கூர்மைய
ரேணும் மரம்போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர் என்று குறள்
கூறுகிறது.
காயை விடக் கனி
சுவையானது. இளைஞர்களைவிட முதியவர்கள் அறிவோடு அனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள்.
இந்த மூத்தவர்களின் அறிவையும், அனுபவத்தையும் இளைய தலைமுறை பயன்படுத்திக்
கொள்வது அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும். வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும்
பயன்படும்.
இளைஞர்களின் ஆற்றலும், முதியவர்களின்
அனுபவமும் இணைந்து செயல்படும்போதுதான் ஒரு நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறும்.
ஆனால், இங்கே ஆட்சியிலும், அரசியல்
கட்சிகளிலும் மூத்தவர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது.
இளைஞர்களும், மாணவர்களும்
அவர்களுக்கு எடுபிடிகளாகவும், ஏணியாகவுமே பயன்படுத்தப்படுகின்றனர். இந்த
கெடுபிடிகளால் ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் வெறுப்படைந்து ஒதுங்கி விடுகின்றனர்.
இங்கு நடப்பது
"மக்களாட்சி' என்று கூறப்பட்டாலும் வாரிசு அரசியலே
தலைதூக்கி நிற்கிறது. தலைவர்கள் தங்கள் வாரிசுகளையே கட்சியிலும், ஆட்சியிலும்
புகுத்திடும் போக்கே எங்கும் காணப்படுகிறது. மக்களாட்சி என்ற பெயரில் மன்னர்
ஆட்சியே. இங்கே இளைஞர்களுக்கும். மூத்தவர்களுக்கும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி.
"எல்லாரும் இந்நாட்டு
மன்னர்' என்பதும், "மக்கள் குரலே மகேசன் குரல்' என்பதும்
இங்கே பேச்சளவில்தான்.
சமுதாயத்தில் இளைஞர்கள்
மூத்தவர்களை மதிப்பதில்லை. அரசியலில் முதியவர்கள் இளைஞர்களை மதிப்பதில்லை. இந்தப்
போக்கு நல்லதில்லை.
மூத்த குடிமக்களைப்
போற்றிக் காக்கும் பொறுப்பு அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும்
இருக்கிறது. உழைத்து ஓய்வு பெற்றவர்களை இறுதிவரை காக்கும் கடமையிலிருந்து அரசுகள்
பின்வாங்கக் கூடாது.
நாம் நம் முன்னோரை
நேசிக்கவே தயங்குகிறோம்; மூத்தோரை ஆதரிக்கவே யோசிக்கிறோம். இன்று நம்
சமுதாயம் இருக்கும் நிலையில் ஒரு மனிதனுக்கு முதுமை என்பது வரமா அல்லது சாபமா?