மழை இல்லா காலத்திலும், பண்ணைக் குட்டைகள்
வியாழன், 14 பிப்ரவரி, 2013
மழை
இல்லா காலத்திலும், பண்ணைக்
குட்டைகள் மூலம், முழுமையாக
விவசாயம் செய்யும், மைக்கேல்:
ராமநாதபுரம், கடலாடியிலுள்ள
சவேரியார்பட்டினம் தான், சொந்த
ஊர். கிராமம் முழுவதும் விவசாயத்தையும், மழையையும்
நம்பியே, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பருவ மழை
சரியாக பெய்யாமல், பயிர்கள்
கருகி, எங்களின் வாழ்க்கை பலமுறை கேள்விக்குறியாக
மாறியுள்ளது. கடந்த, 2000ம்
ஆண்டு, "தானம்' என்ற தன்னார்வ அறக்கட்டளை அமைப்பு, பருவமழை பொய்த்து, எங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகாமல்
இருக்க, "பண்ணைக் குட்டைகள்' பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, நபார்டு வங்கி மூலம் பண உதவி செய்து, பண்ணைக் குட்டைகள் அமைக்க வழிகாட்டினர்.
பண்ணைக் குட்டைகள் என்பது, இரண்டாம்
தர நீர்த்தேக்கம். மழைக் காலங்களில், மழை
நீரை வயல்வெளியில் அதிகம் சேமிக்க முடியாது. ஆனால், நம்
தேவைக்கேற்ப, குட்டை போன்ற
அமைப்பை ஏற்படுத்தி, மழை
நீர் வயல்களில் தேங்கி, பயிரை
நாசப்படுத்தாமல், தானாகவே
குட்டைகளில் வழிந்து, நீர்
வீணாகாமல் சேமிக்கப்படும். தற்போது, நீர்
தேங்கும் கால்வாய் மற்றும் கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், இத்திட்டம் நல்ல பயனளிக்கும். இரண்டரை
ஏக்கர் நிலத்தில், 1,000 முதல், 1,500 க.மீ., நீர் தேங்க, 30
மீ., நீளம், 30 மீ., அகலம், 1.5 மீ., ஆழம்
கொண்டதாக, மிக தாழ்வான பகுதியில் அமைத்தேன்.
தேவைக்கேற்ப, ஆழத்தை
அதிகரிக்கலாம். இதை அமைக்க, ஒரு கன
மீட்டருக்கு, 35 ரூபாய்
முதல், 38 ரூபாய் வரை செலவாகும்.
பண்ணைக் குட்டைகள் வந்த பிறகு, நீரை காசு கொடுத்து வாங்குவதில்லை.
பயிர்கள் கருகும் நிலையில்லை. ஏக்கருக்கு, 30 ஆயிரம்
ரூபாய் வரை நிகர வருமானம் கிடைக்கிறது. மழை நன்றாகப் பெய்யும் காலங்களில், பயிர்களுக்கு நீர் தேவைப்படாது. எனவே, அக்காலங்களில், பண்ணைக் குட்டையில் மீன்களை வளர்த்தும்
லாபம் ஈட்டலாம். தற்போது எங்கள் கிராமத்திலேயே, 360 பண்ணைக்
குட்டைகள் உள்ளன. தொடர்புக்கு: 0452-2601673.