மனம் எனும் மாபெரும் சக்தி
செவ்வாய், 5 பிப்ரவரி, 2013
மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம், நம்மிடம் குறைவாக உள்ளது; விஷயங்களை வாங்கிக் கொள்ளும் மனோபாவத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
மனிதர்களிடம் எதிர்மறை சிந்தனைகளே அதிகளவில் உள்ளன. பேனா மை, கறை, அழுக்கு, சட்டையில் பட்டுவிட்டால்
சோகப்படும் மனிதன், இருதயத்தில் உள்ள
அழுக்குகள் பற்றி கவலைப்படுவது இல்லை.
பொறாமை, கோபம், சோம்பல், வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மை இல்லாமை, புலம்பல், கோள் மூட்டுதல், பிறர் பற்றி தவறாக
பேசுதல், பழிவாங்கும் குணம், முரட்டுத்தனம், கஞ்சத்தனம், இரக்கமின்மை, பிறருக்கு உதவாமை, நேர்மையின்மை, பிறரை துன்புறுத்தி
மகிழ்தல், திமிர், ஆணவம், அகந்தை, தற்புகழ்ச்சி, பேராசை, பிறரை அவமானப்படுத்துதல், கேலி செய்தல், பிறரை குத்திக்காட்டுதல், பிறரை மதியாத போக்கு என 22 வகையான அழுக்குகளை மனிதன்
வைத்துள்ளான். இந்த அழுக்கை நீக்கிவிட்டால், மனிதன் மனிதனாக வாழலாம்.
கவலை என்ற நிலையை மனிதன், தன்னிடம் இருந்து அகற்ற வேண்டும். கவலைப்படுவதால், எவ்வித பலனும், நன்மையும் இல்லை. கவலையால் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரித்து, இதய நோய்க்கு வழிவகுக்கிறது. சமூகம், மனிதர்களுக்கு கவலைப்பட கற்றுத்தருகிறது. சிக்கல், கவலை, தீர்வு மகிழ்ச்சி என்பதில், சிக்கலை அடுத்து தீர்வுக்கு வந்துவிட்டால், கவலை இருக்காது. நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மனம் என்பது ஆற்றல் வாய்ந்தது; கவலையை அக்கறையாக
மாற்றுங்கள்; அக்கறை காட்டுவதற்கும், கவலைப்படுவதற்கும்
வித்தியாசம் உள்ளது. நம்பிக்கையை வளர்க்க ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை; உள்மனதையும், வெளிமனதையும் இணைத்தால், ஆக்கப்பூர்வமான சிந்தனை
உருவாகும். சூழ்நிலையை குறை சொல்வதை விட்டுவிட்டு, வாழ்க்கையின் பார்வையை மாற்றிக்கொண்டு, பிரச்னையை எதிர்கொண்டால், வாழ்க்கை சிறப்பாகும்.
அவமானங்களை வெகுமானங்களாக
மாற்றிக்கொள்ளும் திறமை வேண்டும்; நெஞ்சில், சாதிக்க வேண்டும் என்ற
நெருப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது, பாதகமான விஷயங்கள் கூட, மனிதர்களை பாதிப்பதில்லை; அப்படிப்பட்ட இயல்பான
மனநிலையில், எப்போதும் மனிதர்கள்
இருக்க வேண்டும்.