எப்படி சாத்தியமானது இந்த அசாத்திய வெற்றி?
ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஏழை
விவசாயியின் நான்கு பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தவர் ஜோதி ரெட்டி. இவரின் தந்தை
எமர்ஜன்சி சமயத்தில் தன் வேலையை இழந்ததினால், விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். குடும்பத்தில்
ஏற்பட்ட வறுமையின் காரணமாக மூத்த மகளான இவரை அரசாங்கம் நடத்திவரும் அனாதை
ஆசிரமத்தில் சேர்த்தனர். ஜோதிக்கு பெற்றோர் யாரும் இல்லை என்று கூறி அந்த
ஆசிரமத்தில் இடம் பிடித்தார். தனது 10-ம் வகுப்பு வரை அவர் அந்த ஆசிரமத்திலேயே
தங்கிப் படித்தார். இடையில் தன் வீட்டுக்குச் செல்லவுமில்லை. அவரது பெற்றோரும்
ஜோதியை வந்து பார்க்கவுமில்லை. 10-ம் வகுப்புத் தேர்வை வெற்றிகரமாக முடித்தார். அதிக
மதிப்பெண்ணும் பெற்றிருந்தார். ஆனால் அவரால் தொடர்ந்து படிக்கத்தான் முடியவில்லை.
பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் அவரது பெற்றோர்
அவருக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். 16-ம் வயதிலேயே சங்கிரெட்டி என்பவருக்கு
மனைவியானார் ஜோதி ரெட்டி. குடும்ப பாரத்தை சுமக்கக் கூடத் தெரியாத 18 வயதிலேயே இரண்டு பெண்
குழந்தைகளுக்கு தாயும் ஆனார்.
திருமணம் ஆனாலும் அவரின் வறுமை மட்டும் அவரை விட்டு
அகலவேயில்லை. தனது இரண்டு குழந்தைகளையும் வளர்க்க அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.
அங்குள்ள வேளாண்மைத் தொழில்களுக்கு தினக்கூலியாக ரூ.5-க்கு வேலை செய்தார். சுமார்
மூன்று ஆண்டுகள் தினக்கூலியாக வேலை செய்தார்.
1989-ம் ஆண்டு இந்திய அரசின் அமைப்பான நேரு யுவ கேந்திரா அவரது
பகுதியில் ஓர் இரவு பள்ளியைத் தொடங்கியது. பெரியவர்கள், முதியோர்களுக்கு அடிப்படைக்
கல்வியை அளிக்கும் நோக்கில் இந்த பள்ளி உருவாக்கப்பட்டது. அந்தக் கிராமத்தில் ஜோதி
ரெட்டி ஒருவர்தான் படித்தப் பெண் என்பதால் அவரே அந்தப் பள்ளிக்கு தன்னார்வத்
தொண்டராக நியமிக்கப்பட்டார். பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஜோதி இரவு நேரப் பள்ளியில்
வகுப்பெடுக்கத் தொடங்கினார்.
ரூ.5-க்கு தினக்கூலியாக வேலை பார்த்தவரின் மாத சம்பளம் ரூ.150-ஆக மாறியது. ஜோதியின் கடின
உழைப்பும்,
அர்ப்பணிப்பும்
அவரைப் பதவி உயர்வு பெறச் செய்தது. வாரங்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இரவு நேரப்
பள்ளிகளையும் ஆய்வு செய்யும் அதிகாரியாக உயர்வு பெற்றார். அப்போதுதான் கல்வியின்
அவசியத்தையும்,
தேவையையும்
உணர்ந்தார்.
விட்டுப்போன தனது கல்வியை மீண்டும் தொலைநிலைக் கல்வி மூலம்
தொடங்கினார். இளநிலை, முதுநிலை படிப்புகளை அம்பேத்கார் திறந்தவெளி
பல்கலைக்கழகத்தில் முடித்தார். தொலைநிலைக் கல்வி பயின்றபோதும் கல்விக்கான அவரின்
ஆர்வத்தைப் ஆசிரியர்கள் கண்டு வியந்தனர். தொடர்ந்து பி.எட் பட்டமும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநில அரசுப் பள்ளியில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.
நேரு யுவ கேந்திரா அமைப்பில் பணியாற்றும்போது அமெரிக்காவில்
வசித்த ஜோதியின் உறவினர் அங்கு வந்தார். அவர் கிராமத்தில் தங்கியிருந்த நாட்களில்
ஜோதி அவருக்கு உதவியாக இருந்தார். தனது உறவினர் அமெரிக்காவிற்குச் சென்றதால்
அவரிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டு வியப்புற்றார்.
தனது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவாவது அமெரிக்கா
செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கான பணத்தைச் சேமிக்கத் தொடங்கினார்.
அநேக முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்காவிற்குச் செல்ல "விசிட்டிங் விசா' கிடைத்தது. கையில் இருந்த
சொற்ப பணத்தில் அமெரிக்கா பயணித்தார் ஜோதி.
நியு ஜெர்சியில் உள்ள விடியோ கடை ஒன்றில் விற்பனையாளராக
பணியில் சேர்ந்தார் ஜோதி. அங்கே வசித்து வந்த குஜராத்தி குடும்பத்தினரிடம்
வாடகைக்கு ("பேயிங் கெஸ்ட்'டாக) குடியிருந்தார்.
விடியோ கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஆந்திர
மாநிலம் வாராங்கல்லைச் சேர்ந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அந்த நபரின் சகோதரர்
நிறுவனத்தில் ஜோதிக்கு மனித வள மேம்பாட்டு அதிகாரியாக வேலை கொடுக்கப்பட்டது.
நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்காக ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் ஜோதியின்
வேலை. பின்பு அங்கிருந்து வேறு ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைக்குச்
சேர்ந்தார். ஆனாலும் இவருக்கு விசா கிடைப்பதில் சிக்கல்கள் நீடித்துக்கொண்டே
வந்தன.
எனவே தனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் தனது சொந்த
கிராமத்திற்கு வந்தார். அங்கு மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 என்ற கூலிக்கு வேலைக்குச்
செல்லத் தொடங்கினார். அவருக்கு விசா கிடைக்கும் வரை கூலி வேலையைத் தொடர்ந்து
செய்தார். ஜோதி எந்த ஒரு சூழ்நிலையிலும் சோர்வடையவுமில்லை; வேலையின்றி சும்மா
இருக்கவும் இல்லை.
மீண்டும் மீண்டும் விசாவுக்காக முயற்சித்துக்
கொண்டேயிருந்தார். பல்வேறு சிக்கல்களை சந்தித்து இறுதியில் விசா கிடைத்து.
அமெரிக்கா சென்று சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் உதித்தது. அதாவது
மக்களுக்கு எளிதில் விசா கிடைக்க ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும்
என்று. அப்படி உருவாக்கப்பட்டதுதான் கீஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனம்.
அதிலிருந்து படிப்படியாக முன்னேறி மென்பொருள் மேம்பாடு, வேலை தேடித்தரும் நிறுவனம்
என தனது எல்லையைப் பெரிதாக்கிக் கொண்டே சென்றார் ஜோதி.
தனது உறவினர் ஒருவரை
வர்த்தகத்தில் பார்ட்னராக இணைத்துக் கொண்டார். மேலும் மேலும் தனது நிறுவனத்தை
வளர்த்துக் கொண்டேயிருக்கிறார். அவர் விரும்பியதுபோல் தனது இரண்டு மகள்களுக்கு
அமெரிக்காவிலேயே உயர்கல்வி அளித்தார். நல்ல இடத்தில் திருமணமும் செய்து
வைத்துள்ளார். இப்போதும் தனது கிராமத்து மக்கள், உறவினர்களுக்காக பல்வேறு உதவிகளைச் செய்து
வருகிறார். தனது கிராமத்தில், உறவினர்களில் யாராவது அமெரிக்கா சென்று வேலை பார்க்க ஆசைப்பட்டால்
அவர்களுக்குத் தேவையான ஆலோசனை, தங்குமிடம் ஆகியவற்றை ஜோதியே அளிக்கிறார். தானும் வளர்ந்து
மற்றவர்களும் வளர வேண்டும் என்று ஆசை கொள்கிறார் ஜோதிரெட்டி.