எந்தச் சூழலிலும் பிறரைக் காப்பாற்றத் துணியுங்கள்.
புதன், 13 பிப்ரவரி, 2013
அந்த நடுத்தர
வயது மனிதர் அன்று அதிக வெளிச்சமில்லாத புதிய பாதையில் போய்க் கொண்டிருந்தார்.
சாலையின் இரண்டு பக்கங்களிலும் புதர்கள் மண்டிக்கிடந்தன. தெரியாத்தனமாக இந்தப்
பாதையில் வந்து விட்டோமே, இருட்டாக இருக்கிறதே என்று பயந்தார். திரும்பிப் போகவும்
முடியவில்லை. தொடர்ந்து நடக்கவும் பயமாக இருந்தது.
திடீரென்று ஒரு புதர் அருகே யாரோ யாரையோ மிரட்டுவது போல
சப்தம் கேட்டது.
ஏன் தான் இந்தப் பாதையில் வந்தோமோ? என்று நொந்து
கொண்டார். வேகமாக ஓடிப்போய் போலீசுக்கு ஃபோன் செய்யலாம் என்று நினைத்தார். அதே
நேரம் பாதிக்கப்பட்ட நபரைக் காப்பாற்றப் போய் தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்றும்
பயப்பட்டார்.
ஆனால் கேட்டது ஒரு பெண்ணின் கூக்குரல். எவனோ ஒருவன்
பலாத்காரம் செய்கிறான் என்பது நொடிப் பொழுதில் புரிந்துவிட்டது. அந்த மனிதர்
மேற்கொண்டு எதுவும் யோசிக்கவில்லை. தனக்கு என்ன நேர்ந்தாலும் சரி, அந்தப் பெண்ணைக்
காப்பாற்றுவோம் என்று துணிந்து புதர்வெளிக்குள் பாய்ந்து அந்த மனிதனைப் புரட்டிப்
புரட்டி எடுத்தார். அவருக்கு எங்கிருந்து அப்படி பலம் வந்தது என்று தெரியவில்லை.
அவனும் அந்தப் பாதையில் யாரையும் எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியில் அவன்
அடிதாங்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.
பிறகு புதர் அருகே மூச்சுவாங்க நின்ற அந்த மனிதர், ""பெண்ணே, வெளியே வா. இனி
உனக்கு ஆபத்து இல்லை. முரடன் ஓடிப்போய் விட்டான்'' என்று அழைத்தார். சில நொடிகளில்
ஒரு பெண்ணின் குரல் கேட்டது: ""அப்பா நீங்களா?''
எந்தச் சூழலிலும் பிறரைக் காப்பாற்றத் துணியுங்கள்.
பாதிக்கப்பட்டவர் உங்கள் உறவினராகவும் இருக்கலாம். அது உங்களுக்கு அப்போது
தெரியாமல் இருந்திருக்கலாம்.