உங்கள் வருகைக்கு நன்றி

மொத்தமாகச் சேர்ந்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்,,,

புதன், 13 பிப்ரவரி, 2013


""முப்பது வருடங்களுக்கு முன்பு இப்போது உள்ளதைப் போல அதிகமான குளிர்பானங்கள் இல்லை. சமீப ஆண்டுகளாகப் பல வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்கள் வந்துவிட்டன. அதற்காக நிறைய விளம்பரங்களையும் செய்கிறார்கள். அதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள் உணவகங்களில் சாப்பிடும்போது தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானங்களை அருந்துகிறார்கள்.

இது மிகவும் தீங்கானது. 
தாகம் எடுக்கும்போது தண்ணீர் அருந்துவதுதான் சரியானது. உடல் நலனுக்கு உகந்தது.
குளிர்பானங்களை உணவுடன் சேர்த்து அருந்துவதால், நம் உடலில் சேரும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிகப்படியான கொழுப்பு உடலில் தங்கும். சுறுசுறுப்பு குறையும்.
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும். குளிர்பானங்களில் கலருக்காக தார்ப்பொருள்களைச் சேர்க்கிறார்கள். குளிர்பானங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க வினிகர் போன்ற பொருட்களையும்அமிலங்களையும் சேர்க்கிறார்கள். இனிப்புக்காக சாக்கரினைக் கலக்கிறார்கள்.
இவை குறைந்த அளவு உடலில் சேர்ந்தால் கூட, பல உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும். நாள்தோறும் குளிர்பானங்களை அருந்தினால், சிறிது சிறிதாக உடலுக்குள் சென்று, மொத்தமாகச் சேர்ந்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இதனால் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்கப்படும். குளிர்பானங்களில் உள்ள ரசாயனப் பொருட்களால் ஒவ்வாமை வரலாம். தலைவலி வரலாம். தும்மல் வரும். உடல் பருமனாகும். ஊட்டச் சத்துப் பற்றாக்குறை, உயிர்ச்சத்து பற்றாக்குறை போன்றவை ஏற்படும். புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.
இவ்வளவு கேடு செய்யும் செயற்கையான குளிர்பானங்களை எதற்காக அருந்த வேண்டும்? நாம் நிறையத் தண்ணீர் குடித்தால் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் இளக வழி ஏற்படும். மலச்சிக்கல் வராது. உடலில் நீர் வற்றிய நிலை ஏற்படாது. தண்ணீர் குடிப்பதால் எந்தத் தீங்கும், பக்கவிளைவுகளும் இல்லை.
முன்பெல்லாம் சர்பத் குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. வீட்டில் கூட சர்பத் அருந்துவார்கள். இப்போது அந்தப் பழக்கம் குறைந்துவிட்டது.
கோடைக்காலங்களில் நாம் குளிர்பானங்களுக்குப் பதிலாக, நீர்ச்சத்துள்ள தர்ப்பூசணி, ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், பப்பாளி, வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம். சாறு பிழிந்து குடிக்கலாம். வீட்டில் பழச்சாறு செய்து அருந்தும்போது செயற்கையான கலர்களைச் சேர்க்கக் கூடாது. வாசனைக்கான பொருட்களையும் சேர்க்கக் கூடாது.
கரும்புச்சாறு குடிக்கலாம். இளநீர் குடிக்கலாம். இவற்றால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை. உடலுக்கு மிகவும் நல்லது.
தற்போது இந்தியாவில் ஓர் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டுக் கொய்யாப் பழத்தை தினமும் 50 கிராம் சாப்பிட்டால், சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நாட்டுக் கொய்யாவைச் சாப்பிட்டால், நமது உணவில் இருந்து இரும்புச் சத்து அதிகமாக உடலுக்குள் ஈர்க்கப்படுகிறது. இதனால் ரத்த சோகை ஏற்படாது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இயற்கையான இவ்வளவு நல்ல பொருட்கள் இருக்க, எதற்குச் செயற்கையான குளிர்பானங்கள்? குளிர்பானங்களை அருந்துவது ஒரு நாகரிகமாகக் கருதப்படலாம். அந்த நாகரிகத்துக்கு நாம் கொடுக்கும் விலை, மோசமான பல உடல் நலக் குறைபாடுகள்தாம்'' என்றார்  
                                                                            டாக்டர் இளங்கோ. (தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை மற்றும் தடுப்பு மருந்துத்துறையின் இயக்குநராக)
 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets