உங்கள் வருகைக்கு நன்றி

தேனிக்களின் அதிசய வாழ்க்கை ! 1

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012


தேனீ அதன் மூக்காலோ,​​ வாயாலோதான் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.​ அது உண்மையில்லை.​ தேனீயிடமிருந்து வரும் ரீங்கார ஓசை, அதன் இறகுகளின் மிக விரைவான துடிப்பால்தான் ஏற்படுகிறது.​ அப்படி இறகுகள் துடிப்பதன் மூலம்தான் தேனீ பறக்கிறது.​ அதன் இறகுகள் நொடிக்கு நானூறு முறை துடிக்கின்றன.​ அதிவிரைவான இந்த அசைவு காற்றில் உண்டாக்குகிற அதிர்வு நம் காதை அடையும் போது நாம் அதை ரீங்காரமாக உணர்கிறோம்.
சமூக வாழ்க்கை நடத்தும் தேனீக்களின் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீதான் இருக்கும்.​ அந்தக் கூட்டில் அதுதான் சர்வாதிகாரி.​ கூட்டில் இன்னும் இரண்டு வகை தேனீக்களும் இருக்கும்.​ கூட்டை நிலைக்கச் செய்வதற்காகப் பாடுபடும் பெண் தேனீக்கள் ஒரு வகை.​ இவை இனப்பெருக்க திறனற்றவை.​ இன்னொரு வகை தேனீக்கள்,​​ சோம்பேறியான ஆண் தேனீக்கள்.
ராணித் தேனீ,​​ மற்ற தேனீக்களைவிட உருவத்தில் பெரியதாக இருக்கும்.​ வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான் தேனும்,​​ மகரந்தப் பொடியும் சேகரிக்கும்.​ மெழுகால் கூடு கட்டுவது,​​ கூட்டைச் சுத்தப்படுத்துவது,​​ குஞ்சுத் தேனீக்களுக்கும்,​​ ராணித் தேனீக்கும் உணவு கொடுப்பது முதலான பல வேலைகளையும் பெண் தேனீக்கள்தான் செய்கின்றன.​ ​
வேலைக்காரத் தேனீக்கள் சேகரித்து வைத்த தேனைக் குடிக்கின்ற வேலையைத்தான் சோம்பேறிகளான ஆண் தேனீக்கள் செய்யும்.​ ஆண் தேனீக்களின் உடல் அமைப்பும், தேனோ மகரந்தமோ சேகரிப்பதற்கு ஏற்ற விதத்தில் இருக்காது.​ இவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.​ இவை குறிப்பிட்ட காலங்களில் ராணித் தேனீயுடன் இணை சேர்கின்றன.​ தேனீக்களின் சமூக வாழ்க்கை நிலைப்பதற்கு ஆண் தேனீக்கள் மிகவும் அவசியம்.​ ராணித் தேனீக்கள் கூட்டின் அதிபதிகள் என்பதில் சந்தேகம் இல்லை.​ ஆனால் இவை அத்தனை வேலைக்காரத் தேனீக்களையும் சார்ந்து வாழ்கின்ற "முட்டையிடும் இயந்திரங்கள்" மட்டுமே.
ராணித் தேனீக்களின் மூளை, வேலைக்காரத் தேனீக்களின் மூளையைவிட சிறியதாக இருக்கும்.​ ஆனால்,​​ ராணித் தேனீ மட்டும்தான் முட்டையிடும் திறன் பெற்றிருக்கிறது.​ கூட்டில் ஒன்றிற்கும் அதிகமான ராணிகள் இருப்பதற்கு,​​ ஏற்கனவே கூட்டில் இருக்கும் ராணி அனுமதிப்பதில்லை.​ ராணித்தேனீ முட்டையிடும்.​ முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ராணியாக வேண்டுமா அல்லது வேலைக்காரர்கள் ஆகவேண்டுமா என்று முடிவு செய்வது வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான்.
வேலைக்காரத் தேனீக்கள் குறிப்பிட்ட காலங்களில் சில முட்டைகளை கூட்டின் கீழ் முனையில் அமைத்திருக்கிற "ராணியறை'களுக்கு மாற்றுகின்றன.​ ஒவ்வொரு தேன் கூட்டிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் ராணியறைகள் இருக்கும்.​ ஆனால் அவை மற்ற அறைகளைவிட மிகப் பெரிதாக இருக்கும்.​ ராணியறைகளில் பிறக்கின்ற குஞ்சுகளுக்கு வேலைக்காரத் தேனீக்கள் பிரத்தியேகமான உணவை ஊட்டுகின்றன.​ இங்கே வளர்ந்து வருகிற பெண் தேனீக்கள்தான் எதிர்காலத்தில் ராணித் தேனீக்களாக இருக்கும்.​ ராணித் தேனீக்களின் பிரத்தியேகத் தன்மைகளுக்கு முக்கியக் காரணம்,​​ அவற்றின் உணவு முறையில் உள்ள மாற்றம்தான்.
புதிய ராணி வெளியே வரும்போது,​​ ஏற்கனவே இருக்கும் ராணி கூட்டமான வேலைக்காரத் தேனீக்களுடன் இடத்தை விட்டுச் சென்றிருக்கும்.​ அவை வேறொரு இடத்தில் புதிய கூடமைத்து வாழத் தொடங்குகின்றன.​ சில சமயம் அறைகளின் மேல் படலத்தைத் திறந்து வெளிவரும் புதிய ராணிகள் இதுபோன்று வேலைக்காரத் தேனீக்களுடன் இடம் விட்டுச் செல்கின்றன.​ ஒன்றிற்கு மேற்பட்ட ராணிகள் ஒரே நேரத்தில் வெளியே வரும்போது,​​ அவர்களுக்கிடையே மிகக் கடுமையான சண்டை நடக்கும்.​ ஒரு ராணி மட்டுமே மிஞ்சும்வரை இந்தப் பலப்பரீட்சை தொடரும்.​ புதிதாக வெளியே வந்த ராணிக்கும்,​​ கூட்டில் ஏற்கனவே இருந்துகொண்டிருந்த ராணிக்கும் இடையே யாராவது ஒருவர் வெற்றி பெறுவதுவரை போட்டி நடக்கிறது.​ அதனால் ஒரு தேன் கூட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட ராணிகள் இருக்கும் நிலை ஏற்படுவதில்லை.



கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets