உங்கள் வருகைக்கு நன்றி

எத்தனை பேருக்கு தெரியும்?

புதன், 1 ஆகஸ்ட், 2012


அதிக சத்தம் உடலுக்கு கேடு என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறோம். உயிருக்கே ஆபத்து என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர். மாரடைப்பு வரலாம் என்கிறார்கள். சாதாரண சத்தம், இரைச்சலை காட்டிலும் 10 டெசிபல் அதிகமானால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகரிக்குமாம். சாதாரண சத்தம் என்பது 80 டெசிபல் வரை. பரபரப்பாக இயங்கும் ஒரு தெருவின் இரைச்சலைவிட இது குறைவு. 
ஒலியால் வரும் பிரச்னைகளை மதிப்பிட இரண்டு அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. என்ன மாதிரியான சத்தம் என்பது ஒன்று.
  எவ்வளவு நேரமாக காதில் விழுகிறது என்பது அடுத்தது. குழந்தையின் அழுகை, பொம்மைகள் எழுப்பும் ஒலி இதெல்லாம் நம்மால் சகித்துக் கொள்ளக்கூடிய அளவைவிட இரு மடங்கு அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்

காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டு கேட்கும் ஸ்டீரியோ ஒலி 112 டெசிபல் வரை போகலாம். மிக்சி, வாஷிங் மெஷின், ஹேர் டிரையர் போன்ற வீட்டு சாதனங்கள் 90 டெசிபல் வரை ஒலி எழுப்பக் கூடியவை. தெருவில் செல்லும் வாகனங்கள் எழுப்பும் மொத்த சத்தம் எல்லா அளவுகளையும் கடந்தது. இவற்றை எவ்வளவு நேரம் கேட்க நேரிடுகிறது என்பதை பொருத்து உடலுக்கு வரும் ஆபத்தை அளவிடலாம். காது செவிடாவது முதன்மையானது. 

கட்டுப்பாடுகள், கண்காணிப்பு நிறைந்த அமெரிக்காவில் எந்த நேரமும் 3 கோடி பேர் ஆபத்தான ஒலியால் பாதிக்கப்படுகின்றனர். அளவில்லாத சுதந்திரம் இருக்கும் நமது நாட்டில் இரைச்சலையும் அதிக சத்தத்தையும் வெறும் சுற்றுச்சூழல் மாசு என்கிறோம். காற்று, நீர் மாசு படுவதை நாம் பார்க்கிறோம் அல்லது தொடுகிறோம். ஒலியை பார்ப்பதில்லை, குடிப்பதில்லை. அதனால் ஆபத்தை அறிவதில்லை. 


டென்மார்க்கில் 50 முதல் 64 வயது வரையான 55,000 பேரை பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆய்வு செய்ததில் இதயத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்துள்ளது. பிடிக்காத ஒலி, எதிர்பாராத ஓசை, தொடர் இரைச்சல் எல்லாமே இதயத்தை தாக்குகிறது. போக்குவரத்து இரைச்சல்தான் முக்கிய வில்லன். வீட்டிலும் வெளியிலும் ஒலி குறைந்தால் ஆரோக்கியத்துக்கு வழி கிடைக்கும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets