உங்கள் வருகைக்கு நன்றி

அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012


எவ்வளவு சம்பளம், என்ன நிறுவனம் என்ற அம்சங்களுக்கும் மேலாக, செய்யும் பணியானது ஒருவருக்கும் திருப்தியாக உள்ளதா? என்பதே பிரதான அம்சம்.
பணிமாற்றம் என்பது படிப்புச் சூழலைவிட, பணி சூழலோடு அதிகம் தொடர்புடையது.
சில இளைஞர்கள், தங்களின் ஆர்வம் மற்றும் சுபாவம் ஆகியவற்றுக்கு சற்றும் பொருந்தாத வகையில், தங்களின் பணி இருப்பதை அடையாளம் கண்ட பின்னர், தொழில்மாற்ற முடிவினை மேற்கொள்கின்றனர். தங்களது ஆரம்பகால அல்லது முன்முயற்சிகளில் விரும்பிய பணி கிடைக்காத நிலையிலேயே, பல இளைஞர்கள், கிடைக்கும் வேலைகளுக்கு செல்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, தொழில் மாற்றம் என்பது அதிகமாக இல்லை மற்றும் சரியான மாற்று வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதில்லை. தற்போதுவரை, சில குறிப்பிட்ட காலங்களில் பணி மாறுதல் சூழல்கள் இந்தியாவில் ஏற்படுகின்றன. ஆனால், பல நாடுகளில் தொழில்முறை மாற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. முக்கியமாக, வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில், பணி மற்றும் அதுசார்ந்த வாழ்வியல் சூழல்கள் பலருக்கும் திருப்திகரமாய் இருப்பதில்லை. ஒருவருக்கு தேடும்போது, விருப்பமான பணி கிடைக்காதது மற்றும் அவர் தனக்கு பொருத்தமான பணியை தேர்வு செய்யாதது போன்றவை காரணங்களாக இருக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால், பிடிக்காமல் விட்ட பழைய வேலையை ஒத்த இன்னொரு வேலையிலும் அவர்கள் சேர வேண்டியுள்ளது.
சிறிய நிலையிலான பணி மாறுதல் ஒருவரது வாழ்க்கையில் அடிக்கடி நடக்கலாம். அதேசமயம், பெரியளவிலான பணி மாறுதல் என்பது வாழ்க்கையின் கஷ்டமான தருணமாகவே பலருக்கும் உள்ளது. ஆனால், சற்று ஆய்வை மேற்கொண்டு, சில வழிமுறைகளைப் பின்பற்றினால், மேற்கூறிய கடினமான தருணமானது, சிறந்த தருணமாக மாறும். பணி மாறுதல் என்பது, தொழில்முறை ஆலோசனை செயல்பாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது மற்றும் தொழில்முறை ஆலோசகர், இதுதொடர்பான சிறந்த ஆலோசனைகளை ஒருவருக்கு வழங்குவார்.
இந்த விஷயத்தில், சரியான தொழில்முறை ஆலோசகர் கிடைக்காதபட்சத்தில், ஒருவர் தனது நலம் விரும்பியை நாடலாம். சிறந்த தொழில்முறை ஆலோசகர்கள், உங்களுக்குள் நீண்டகாலம் பொதிந்திருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றும் பொருட்டு, நல்ல ஆலோசனைகளை வழங்குவார். அதேசமயம், உங்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து, யாராக(Designation) பணிபுரிய வேண்டும் என முடிவுசெய்வது உங்களது கைகளில்தான் இருக்கிறது.
பன்முக பணிநிலை
பணிமாறுதல் என்ற நிலைக்கும், ஒரேநேரத்தில் பல பணிகளை மேற்கொண்டிருக்கும் நிலைக்கும் வித்தியாசம் உண்டு. மேல்நிலையிலிருக்கும் ஒருவர், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சில நிறுவனங்களின் பெரிய பொறுப்புகளை வகிப்பார். ஆனால், ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதும், இதுவும் ஒன்றல்ல.
பணி திருப்தியின்மை
நீங்கள் பார்க்கும் பணியில் திருப்தியின்மையோ, குழப்பமோ அல்லது தொய்வோ ஏற்பட்டால், அதற்கான காரணங்களை விரிவான முறையில் ஆராய வேண்டும்.இன்றைய நிலையில், இந்தியாவில், பல லட்சக்கணக்கான நபர்கள், பணி திருப்தியின்மையால் அவதிப்படுகிறார்கள். ஆனால், அதற்கான காரணங்களைத் தெளிவாக ஆராயாமலேயே, பணி மாற்றத்திற்கு திட்டமிடுகின்றனர்.
பணியில் இருக்கும் அதிருப்தியானது, உங்களின் உடல் மற்றும் உணர்வு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், விரைவான மரணத்தையும் ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பணி திருப்தியின்மையானது, தெளிவாக புலப்படாத காரணத்தினாலும் ஏற்படலாம். இதன்மூலம், உங்களது பணியில் உங்களால் எதையும் சாதிக்க முடியாமலும் போகலாம், இதனால் கெட்டப் பெயரையும் சம்பாதிக்க நேரிடும். தவறான பணி, தவறான நிறுவனம் மற்றும் போதுமான ஊதியமின்மை போன்றவை அதிருப்திகளுக்கு முக்கிய காரணம்.
அதேசமயம், இன்னொரு முக்கிய அம்சத்தையும் யோசிக்க வேண்டியுள்ளது. பணி அதிருப்தியின்மை என்பது உண்மையிலேயே பணியால் ஏற்படுகிறதா? அல்லது உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்படுகிறதா? என்பதுதான் அது. இந்த சிக்கலை இருபக்க சிக்கலாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது, "உங்களின் தனிப்பட்ட பிரச்சினை தொழிலை பாதிக்கிறது, தொழில்ரீதியிலான பிரச்சினை தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கிறது" என்பதே அது.
எனவே, தொழில்முறை ஆலோசகர்கள், பணி திருப்தி தொடர்பான ஏராளமான கேள்விகளை கேட்கிறார்கள். இவற்றுக்கு அவர்கள் பெறும் பதில்களின் மூலமாக, உங்களின் நிலைக் குறித்து அவர்களால் ஒரு முடிவிற்கு வர முடிகிறது. அதேசமயம், பணி திருப்தியின்மையால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடிபலன் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், சில தீர்வுகள் கிடைக்கலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets