விரிவான ஆலோசனைகள்:
* விருப்பமான தொழில்துறையை தேர்ந்தெடுப்பது, தனிப்பட்ட ஒரு மாணவரின் சொந்த முடிவாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இலக்கை அடைவதற்கான பயணத்தின் விளைவுகளை முழுமையாக எதிர்கொள்பவர்
அவர்தான். பெற்றோர், உறவினர் அல்லது ஆசிரியர் போன்ற தரப்புகளிலிருந்து
வருங்கால லட்சியத்தை தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக வரும் வற்புறுத்தல்கள் மற்றும்
நெருக்கடிகள், மாணவரை மனோரீதியிலான துன்பத்திலும், குழப்பத்திலும், வெறுப்பிலும் ஆழ்த்திவிடும்.
* ஒரு சரியான லட்சிய தேர்வு என்பது, மாணவரின் விருப்பங்கள், திறன்கள், ஆற்றல்கள் ஆகியவற்றோடு முறையாக இணைந்ததாகவும், அந்த எதிர்கால வேலையானது சூழல் ரீதியாகவும், வருவாய் ரீதியாகவும் திருப்தி தரக்கூடியதாய்
இருப்பதாகவும் இருக்க வேண்டும்.
* எதிர்கால லட்சியத்தை தேர்ந்தெடுப்பது முதலில்
கனவிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. எதிர்காலத்தில் யாராக இருக்க விரும்புகிறோம்
என்ற கனவு அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். விஞ்ஞானியாக, மருத்துவராக, பேராசிரியராக, சினிமா இயக்குனராக, தொழிலதிபராக, பெரிய அரசு அதிகாரியாக, தொல்பொருள் நிபுணராக, தத்துவ ஞானியாக, இசை கலைஞராக, அரசியல்வாதியாக என்று பல நிலைகளில் மாணவர்களுக்கு கனவுகள்
உண்டு. கனவுகள் இல்லாதவரிடத்தில் பெரிதாக எதுவும் இருக்காது என்று ஒரு சீன
பழமொழி கூறுகிறது.
* கனவுகள் லட்சியத்தை வகுக்க உதவுகிறது. வாழ்க்கையில்
வெற்றி பெற்றவர்களின் வரலாறுகளை படித்து, அந்த வெற்றிக்கான காரணியை ஆராய்ந்தால் அதற்கான
அடிப்படையாக இருந்தது லட்சியம் என்பது தெரியவரும். எனவே கனவு லட்சியமாகி, அந்த லட்சியம் உங்களின் செயல்களை தீர்மானிக்கும்.
* உங்களின் கனவை நனவாக்க வேண்டுமெனில், எதிர்கால தொழில்துறையை முடிந்தளவு விரைவாக முடிவுசெய்ய
வேண்டும். இந்த விஷயத்தில் தாமதிப்பதானது, லட்சியத்தை அடைவதில் தேவையற்ற பெரும் கால விரயத்தை
ஏற்படுத்திவிடும்.
* உங்களின் தொழில்துறையை முடிவுசெய்யும் செயல்பாட்டின்போது, உங்களின் கனவில் இடம்பெறாத பலவித விருப்ப வாய்ப்புகளை
பற்றியும் கேள்விப்படுவீர்கள். இதுபோன்ற விருப்ப வாய்ப்புகளைப் பற்றி
அறிந்துகொள்ள அதுசம்பந்தமான செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இணையதளம் ஆகியவற்றை பயன்படுத்துவதுடன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில் ஆலோசகர்கள், தொழில்துறை பற்றி பரவலான அறிவுடைய நபர்கள் ஆகியோருடன்
இதுசம்பந்தமாக கலந்துரையாடவும் வேண்டும்.
* எதிர்கால தொழில்துறையை முடிவுசெய்வதற்கு முன்னர்
இருக்கும் முக்கிய பணி, உங்களை நீங்கள் கண்டுகொள்வதாகும். உங்களின் இயல்பான
ஆர்வம், திறமை ஆகியவைப் பற்றி தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.
நமது ஆர்வம் மற்றும் விருப்பங்கள்தான், லட்சியத்தை அடைவதற்கான கடினமான பயணத்தில் நமக்கு துணை
நின்று பேருதவி புரியும். உங்களின் திறமை, ஆற்றல், குணாதிசயம், ஆர்வம் ஆகியவற்றை கண்டுணரும் செயல்பாட்டில் நீங்கள்
மிதமிஞ்சிய கற்பனையின்றி மிக சரியாக செயல்பட்டால்தான் தெளிவான முடிவு
கிடைக்கும்.
* உங்களின் சொந்த திறமை மற்றும் ஆற்றல்களை அறிந்துகொள்வது
எவ்வளவு முக்கியமோ,அதேபோல உங்களின் எதிர்கால தொழில்துறைக்கு தேவையான புதிய
திறன்களை வளர்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.
* உங்களின் எதிர்கால லட்சியத்தை முடிவுசெய்த பின்னர், அதைப்பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் மறுஆய்வு செய்ய
வேண்டும். ஏனெனில் நாளுக்குநாள் மாறிவரும் இந்த உலகில் எந்த விஷயமும் நிலையாக
இருப்பதில்லை. எனவே மாறும் சூழலுக்கு ஏற்ப உங்களின் லட்சியத்தை பொருத்திப்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
* லட்சியத்தை முடிவுசெய்து விட்டால் மட்டும் எல்லாம்
முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கை என்ற அளவில் பொதுவாகவும், லட்சியம் என்ற அளவில் குறிப்பாகவும் உங்களின் ஆளுமையை
மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். லட்சியத்தை அடைவதில் இந்த தன்மை முக்கிய பங்கு
வகிக்கும்.
* விரும்பிய தொழில்துறையை அடைவதில் நமது கல்வித்தகுதி
பெரியளவில் பங்கு வகித்தாலும், ஒருவரின் பொது புரிந்துணர்வு திறன், பரவலான அறிவு மற்றும் சிறப்பு பயிற்சி போன்றவையும்
முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே ஒருவர் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த
வேண்டியது அவசியமாகிறது.
|