உங்கள் வருகைக்கு நன்றி

தேனிக்களின் அதிசய வாழ்க்கை ! 3

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012


தேனீக்கள் நிறைய தேன் உள்ள பூக்களுடைய ஒரு இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, திரும்பி வந்து அந்தச் செய்தியை மற்ற தேனீக்களிடம் தெரிவிக்கின்றன.​ இத்தகைய கருத்துப் பரிமாற்றத்திற்காக,​​ அவை குறிப்பிட்ட விதமான நடன முறையைக் கையாள்கின்றன.​ ஒன்று,​​ வட்டத்திற்குள் வட்டமாகப் பறப்பது.​ இந்த நடன முறைக்கு,​​ தேனுள்ள இடம் கூட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ளது என்று அர்த்தம்.​ இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் நடனத்தை ஆடிக்கொண்டே அந்தத் தேனீக்கள்,​​ தான் சேகரித்த உணவை கூட்டினுள்ளே இருக்கும் மற்ற தேனீக்களுக்குக் கொடுக்கும்.​ இதன்மூலம்,​​ நூறு மீட்டர் தொலைவில் அது கண்டுபிடித்த உணவின் சுவையையும்,​​ மணத்தையும் மற்ற தேனீக்கள் புரிந்துகொள்ளும்.​ உடனே அனைத்துத் தேனீக்களும் நாற்புறமும் பறந்து அந்த பூக்களைத் தேடிப் போகும்.​ இந்த "வட்ட நடன'த்திலிருந்து,​​ நூறு மீட்டர் தொலைவில் பூக்கள் இருக்கின்றன என்று அறிந்துகொள்ளலாமே தவிர,​​ பூக்கள் இருக்கும் சரியான இடத்தை ​ புரிந்துகொள்ள முடியாது.​ அதனால்தான் அவை குறிப்பிட்ட இலக்கு நோக்கிச் செல்லாமல் நாற்புறமும் பறந்து தேடப் போகின்றன.
தேனுடைய பூக்கள் இருக்கும் இடத்தைச் சரியாகத் தெரிவிக்கும் நடனமுறை ஒன்றும் தேனீக்களிடம் உண்டு.​ இந்த முறைக்கு "வேகல்' (waggle)​​ நடனம் என்று பெயர்.​ முதலில் தேனீ நேர்க் கோடாக பலமாக நடுங்கிச் செல்லும்.​ சற்று மேலாகச் சென்ற பிறகு ஒரு புறமாகத் திரும்பி கீழே வந்து மீண்டும் முதலாவது நேர்க்கோடு வழியே மேலே செல்கிறது.​ பிறகு முதலில் திரும்பியதற்கு எதிர்த்திசையில் திரும்பி ​ கீழே வந்து மீண்டும் நேர்க்கோட்டில் திரும்பி மேலே செல்கிறது .​ நடனமாடும் தேனீ,​​ இந்த நடனத்தின் மூலமாக மற்ற தேனீக்களுக்கு இரண்டு விஷயங்களைத் துல்லியமாக அறிவிக்கிறது.​ ஒன்று,​​ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவு கிடைக்கும் இடம்,​​ கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்ற விஷயம்.​ இரண்டு,​​ சூரியனையும்,​​ கூட்டையும் தொடர்புபடுத்துகிற நேர்க்கோட்டிலிருந்து எத்திசையில் எவ்வளவு சரிவான கோணத்தில் அந்த இடம் அமைந்திருக்கிறது என்பது.
நடனத்தின் வேகத்திலிருந்தும்,​​ அதே நடனத்தை திரும்பத்திரும்பச் செய்வதிலிருந்தும் உணவு இருக்கும் இடம் எத்தனை தொலைவில் இருக்கிறது என்று மற்ற தேனீக்களுக்குத் தெரிந்துவிடும்.​ அது மட்டுமல்ல,​​ போகவேண்டிய இடம் கூட்டிலிருந்து சூரியனுக்கு நேராக இருக்கிறதா? அல்லது எதிர்திசையில் இருக்கிறதா? பக்கவாட்டில் இருக்கிறதா என்பதுபோன்ற விவரங்களும் சரியாகப் புரிந்துவிடும்.​ நடனம் அதிக நேரம் நீடித்தால் உணவு மிக நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கால்வோன்ப்ரிஷ் எனும் உயிரியல் விஞ்ஞானிதான் ஆய்வு செய்து,​​ தேனீக்களின் இந்த செய்திப் பரிமாற்றத்தைக் கண்டுபிடித்தார்.​ ​ ​ ​
தேனீக்களின்,​​ அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவருகிற லார்வாக்களின் முக்கிய உணவு தேன்தான்.​ பூவிலுள்ள தேனும்,​​ தேன் கூட்டிலுள்ள தேனும் வித்தியாசமானவை.​ தேனீ,​​ பூவிலிருந்து தேனெடுத்த பிறகு அந்தத் தேன் நேராக,தேனீயின் வயிற்றிலுள்ள இரண்டு அறைகளில் முதலாம் அறைக்குச் செல்லும்.​ ஒரு சிறிய "வால்வி 'ன் செயல்பாட்டினால் இந்தத் தேன் இரண்டாவது அறைக்குக் கடப்பதில்லை.​ பூவிலிருந்து சேகரித்த தேனுடன் கூட்டை அடைகிற தேனீ,​​ இந்தத் தேனை கூட்டில் உள்ள சில பிரத்தியேக தேனீக்களுக்குக் கொடுக்கிறது.​ அவை ஒன்றுக் கொன்று இந்தத் தேனை "கை'மாற்றிக் கொள்கின்றன.​ இந்த செயல்களுக்கிடையில் அதில் சில நொதிகள் (enzyme) சேரும்.
அதன்பிறகு இந்தத் தேன்,​​ கூட்டின் பிரத்தியேக அறைகளில் பாதுகாக்கப்படுகிறது.​ சில பிரத்தியேக தேனீக்கள்,​​ அவற்றின் சிறகுகளை விசிறியாகப் பயன்படுத்தி தேனில் உள்ள நீர்மையின் அளவைக் குறைக்கின்றன.​ இப்போது தேன் கூட்டில் தேன் தயாராகிறது.​ ஒரு சாதாரண தேன் கூட்டில் 45 கிலோகிராம் வரை தேன் சேகரிக்கலாம்.​ ஒரு கிலோகிராம் தேனுண்டாக்க ஒரு தேனீ ஒரு கோடி பூக்களிலிருந்து தேன் சேகரிக்கவேண்டும்.​ ஒரு பயணத்தில் ஒரு தேனீ 600 பூக்களைச் சந்திக்கும்.​ பூக்களிலிருந்து மட்டுமல்ல,​​ தேன் உண்கிற சில உயிரினங்களின் எச்சங்களிலிருந்தும் தேனீ தேன் சேகரிப்பதுண்டு.​ தேனீக்களுக்கு தேன்தான் முக்கியமான உணவு.​ எனவேதான் அவை தேன் சேகரித்து கூட்டில் பாதுகாக்கின்றன. 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets