முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை
சனி, 7 ஜனவரி, 2012
சரியான நடத்தை நெறிமுறைகளை கடைபிடிப்பவர், பிறரிடத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நன்மதிப்பையும் பெற முடியும்.
சிறப்பான மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமைக்கு, சரியான நடத்தை நெறிமுறைகள் அவசியம். உற்சாகம், நாகரீகம், அன்புடைமை, தூய்மை மற்றும் அழகியல் நயம் முதலிய பண்புகள் சிறப்பான ஆளுமையைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை. எனவே இத்தகையப் பண்புகளை நாம் உதாசீனப்படுத்த இயலாது. சிலர், இத்தகையப் பண்புகளை தமது பள்ளிப் பருவத்திலேயே பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பலருக்கு இந்தப் பண்புகள் வாழ்வின் பெரும்பகுதி வரை கைகூடுவதில்லை.
நல்ல ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறந்த நடத்தை நெறிமுறைகளை ஒருவர் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள வயது ஒரு தடையே இல்லை. ஆளுமைப் பண்புகள், பொதுவாக, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதேசமயம், நமது ஆளுமை கட்டமைப்பு வரவேற்பை பெறுவதும், எதிர்ப்பை பெறுவதும், நாம் வாழும் சமூக சூழ்நிலையைப் பொறுத்ததே.
ஏனெனில், நமது சொந்த சமூகத்தில் நமது பெரியவர்கள் பின்பற்றும் முறைகளை சரியென்று நினைத்து அதையேப் பின்பற்றுவோம். அது நமது சமூகத்திற்கு ஒத்துப்போய்விடும். ஆனால், அதேப் பழக்கவழக்கத்தை வேறொரு சமூகத்தில் கடைபிடிக்கையில் சிக்கல் உண்டாகும். உதாரணமாக, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் இருக்கும் பழக்கவழக்கத்தை, பெய்ஜிங்,பாரிஸ் போன்ற இடங்களில் கடைபிடிக்க முடியாது.
இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே சில பொதுவான விரும்பத்தகாத பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. அவை,
* பொது இடங்களிலோ அல்லது சாதாரணமாகவோ நகத்தைக் கடிக்கும் பழக்கம்
* பலரின் முன்னிலையில் பல் குத்துதல்
* சாப்பிடும்போதோ அல்லது தண்ணீர் அருந்தும்போதோ, அருவருப்பான சத்தத்தை ஏற்படுத்தல்
* பொது இடத்தில் மூக்கு நோண்டுதல்
* பொது இடத்தில் சிறுநீர் கழித்தல்
* பொது இடத்தில் எச்சில் துப்புதல்
* மொபைல் அல்லது தொலைபேசியில் பேசும்போது, பிறருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் மிகவும் சத்தமாக பேசுவது.
* சாலையை நினைத்த இடத்தில் கடப்பது.
* ஒருவர் அமர்ந்திருக்கையில், அவருக்கு முதுகு காட்டி அமர்தல்
* அலுவலக டேபிளில் அமர்வது
* பெண்கள் முன்பாக ஆபாசமான விஷயங்கள் மற்றும் ஜோக்குகளைப் பகிர்வது
* ஒருவரின் உடல் ஊனம் அல்லது அறியாமையைப் பார்த்து கிண்டலடிப்பது
* பூங்கா போன்ற இடங்களில் புல் மீது நடப்பது
* ஒரு தெருவில் அல்லது பலர் வரும் வழியில் நண்பர்களுடன் நடந்து செல்கையில், பிறரை பற்றி கவலைப்படாமல், பாதையை ஆக்ரமித்துக் கொண்டு செல்வது.
* வரிசை இருக்கும் இடத்தில் அதை மதிக்காமல் நடந்துகொள்வது.
* ஒரு கலந்துரையாடலில், பிறரை பேசவிடாமல், தானே முந்தி முந்தி பேசுவது
* ஒரு பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்கையில், வயதானவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் வந்தால் அவர்களுக்கு எழுந்து இடம்விடாமல் அமர்ந்திருப்பது.
* தடை செய்யப்பட்ட இடத்தில் மற்றும் பிறருக்குத் தொந்தரவான பொது இடத்தில் புகைப் பிடிப்பது.
* பிறரின் அறை அல்லது இல்லத்தினுள் அனுமதியின்றி நுழைவது
* வதந்தியை பரப்புதல்
போன்ற பல விஷயங்களை சொல்லலாம். இவற்றை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் விட்டொழிக்க வேண்டும்.
சமூகம் உங்களை மதிக்க வேண்டும் என்று விரும்பும் அதே நேரத்தில், சமூகத்திலுள்ளவர்களையும் நீங்கள் மதிக்க வேண்டும்.
மனிதனிடம் இருக்கும் ஒரு உன்னத ஆற்றல் என்னவெனில், தன்னை மாற்றிக் கொள்ளுதல். ஒரு தமிழன் அமெரிக்காவிலோ அல்லது பிரிட்டனிலோ அல்லது கனடாவிலோ சில ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தால், அந்நாட்டு மக்களில் பலரை விட தெளிவாக ஆங்கிலம் பேசுவார் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை கிரகித்துக் கொள்வார். இதுதான் ஒரு மனிதனுக்கு இருக்கும் மாண்பு.
எனவே, நம்முடைய நடத்தை நெறிமுறைகளை சிறப்பான வகையில் மாற்றிக் கொள்வது நமக்கு முழு சாத்தியமே. "ஒரு சிறந்த பண்புநலன் என்பது, ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ மட்டுமல்லாது, உலகம் முழுவதும் அனைவரும் போற்றக்கூடியதாக இருக்க வேண்டும்".
நாம் முன்பே சொன்னதுபோல், ஒரு மனிதனின் முதல் பள்ளிக்கூடம் அவனது இல்லம்தான் மற்றும் முதல் ஆசிரியர்கள் அவனது பெற்றோர்தான். தன் தந்தை செய்யும் ஒரு தவறான செயலை அவரது மகன் பயமின்றி செய்கிறான். ஒரு தாயின் தவறான நடவடிக்கையை ஒரு மகள் பிற்காலத்தில் தயக்கமின்றி பின்பற்றுகிறாள். நன்கு படித்தவர்கள் என்று அறியப்படும் பல குடும்பங்கள்கூட, பொது இடங்களில் நாகரீகமாக நடந்துகொள்வதில்லை. இது எதைக் காட்டுகிறதென்றால், பாடத்திட்ட குறைபாட்டை அல்லது வீட்டின் பண்பாட்டு குறைபாட்டை.
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு நடத்தை நெறிமுறை கோட்பாடு உண்டு. அதை கடைபிடிப்பதும், மீறுவதும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதேசமயம், ஒரே பழக்கம் ஒரு சமூகத்தில் வரவேற்கப்படும் மற்றும் இன்னொரு சமூகத்தில் விரும்பப்படாது. உதாரணமாக, இந்தியாவில், ஒரு பரிசுப்பொருளை ஒருவர் மற்றவருக்கு அளிக்கையில், அதை உடனே பிரித்து பார்ப்பது விரும்பத்தக்கதல்ல மற்றும் நாகரீகமானதல்ல. ஆனால், அமெரிக்காவில், ஒரு பரிசுப்பொருள் அளிக்கப்பட்டால், அதை உடனே பிரித்துப் பார்த்து, தனது சந்தோஷம் அல்லது கருத்தை தெரிவித்துவிட வேண்டும்.
இதுபோன்ற பழக்கங்கள் பெரிய விஷயமல்ல. ஆனால், மானுடரீதியான பண்புகளே அனைத்து இடங்களுக்கும் தேவை. சிறந்த நடத்தை நெறிமுறைகள் என்றால் அது வெறும் வரட்டு தத்துவம் என்பதாக இருக்கக்கூடாது. எந்த சூழ்நிலை என்றாலும், ஒரு சம்பிரதாயத்தை கட்டாயம் கடைபிடிப்பது என்பதல்ல சிறந்த நெறிமுறை. பிறருக்கு நன்மை தரக்கூடியதாகவும், பிறரை தொந்தரவு செய்யாததாகவும், பிறரை சந்தோஷப்படுத்துவதாகவும் இருப்பதே சிறந்த நடத்தை நெறிமுறை.
ஒரு குறையைக் கண்டால், அதற்கான பழிறை பிறரின் மீது போடாமல், உங்களால் முடிந்ததை செய்து அந்தக் குறையை நீக்க முற்பட வேண்டும். தமிழ்நாட்டிலே ஒரு நல்ல பொன்மொழி உண்டு, "இருட்டு, இருட்டு என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, உன்னால் முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை" என்பதே அது.
பொது இடத்தையோ அல்லது பொது சொத்தையோ சேதப்படுத்தாமல், சுத்தமாகவும்,பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பங்கு உண்டு. சமூக அளவில் சீரிய நடத்தை நெறிமுறையே இதை அடைவதற்கான வழியாகும். படித்தவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவோ, பணக்காரர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவோ ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பகுத்துப் பார்த்தே நாம் செயலாற்ற வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும், குடும்ப பொறுப்பு என்பதைத் தாண்டி, சமூகப் பொறுப்பும் உண்டு. யார் எக்கேடு கெட்டால், எனக்கென்ன என்று இருக்கக்கூடாது, ஏனெனில், மற்றவரும் அப்படியே நினைத்தால், உங்கள் நிலைமையும் கஷ்டமாகிவிடும்.
ஒவ்வொரு இடத்திலுமே எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற கலாச்சாரம் கடந்த வரைமுறை உண்டு. அவற்றை எவரொருவர் கர்ம சிரத்தையோடு பின்பற்றுகிறாரோ, அவரே சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் நபராகவும், அனைவராலும் விரும்பப்படும் நபராகவும் இருப்பார்.