உங்கள் வருகைக்கு நன்றி

மின்சாரம் இல்லையா, கவலைப்படாதீர்கள்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சாரம் இன்று கொஞ்ச நேரம் இல்லையென்றாலும் நாம் படுகிற துயரங்கள் சொல்லத் தேவையில்லை. ஆனால், மின்சாரம் இல்லையா, கவலைப்படாதீர்கள். இருக்கவே, இருக்கிறது சூரியசக்தி. அதன் மூலம் தேவைப்படும் மின்சாரத்தை தேக்கி நம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என ஊர், ஊராக   விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது "டெடா' எனப்படும் தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி எனும் அரசு நிறுவனம்.



சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்யப்படுகையில் எரிபொருள் மிச்சமாகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மின்கட்டணம் கட்டத் தேவையில்லை. பராமரிப்புச் செலவும் மிகவும் குறைவு. ஒரு முறை முதலீடு செய்தால் போதும், ஆயுட்காலம் வரை வேறு பணச்செலவு இல்லை.
  
அவர்களின் வாகனத்தில் சோலார் குக்கர், சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் தெருவிளக்கு, வீடுகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை சேமிப்பதற்கான சோலார் மேற்கூரை, சாண எரிவாயு அடுப்பு என வகை வகையான சோலார் தொடர்பான மின் உபகரணங்கள் இருந்தன.
 டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரையிலான மின்சார சேமிப்பு வாரத்தை முன்னிட்டு சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் சேமிக்கும் வழிமுறைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்த "டெடா' அமைப்பின் விரிவாக்க மேலாளர் எஸ்..வெங்கட்ராமன்.  

நடமாடும் கண்காட்சி வாகனம் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10 மாவட்டங்களில் சூரியசக்தியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பேரணிகள் மூலமாகவும் கருத்தரங்குகள் மூலமாகவும் விளக்குகிறோம். இதற்கு மாணவ, மாணவியர் பயன்படுகிறார்கள். அதிக செலவில்லாமல் சூரிய சக்தியைச் சேமித்து அதை நம் தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும். மின் பற்றாக்குறை உள்ள எந்த நேரத்திலும் கூட சூரியசக்தியைப் பயன்படுத்தி நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம். இதற்கென்று பல சோலார் உபகரணங்கள் இன்று விற்பனைக்கு வந்து விட்டன.

சூரிய அடுப்பு (சோலார் குக்கர்)
 ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர் மட்டும் சமைத்து சாப்பிடக்கூடிய ஒரு சோலார் அடுப்பின் விலை ரூ.3000. சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் இல்லாமல் சோலார் குக்கரில் பொருட்களை வைத்து சமைத்துக் கொள்ளலாம். சுவையில் எந்த மாற்றமும் இருக்காது. மின்சாரமும் மிச்சமாகும்.

சோலார் வாட்டர் ஹீட்டர்
மின்சாரத்தின் உபயோகமின்றி தண்ணீரை சுட வைத்துக் கொள்ளலாம். மழைக்காலங்களில் இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் முக்கியமாக பொறியியல் கல்லூரிகளின் விடுதிகளிலும் அதிக அளவில் பயன்பட்டு வருகிறது.

சோலார் தெருவிளக்கு
சூரியன் இருக்கும் போது பேட்டரி சார்ஜ் ஆகிக் கொண்டு இரவு முழுவதும் எரியும் தன்மையுடையது. பள்ளி, கல்லூரிகளிலும் இதை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். கிராமங்களில் இப்போதுதான் இதுகுறித்து விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கிறது. ஊராட்சி மன்ற தலைவர்கள் இதை கிராமங்களில் அமல்படுத்தினால் இருளே இல்லாத கிராமமாக இருக்கும். செலவும் குறைவு.

சோலார் மேற்கூரை
தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், மின் மோட்டார்கள் உட்பட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் இதன் மூலம் எரிய வைக்கலாம். கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதில் உள்ள பேட்டரி சூரிய சக்தி மூலமாக சார்ஜ் ஆகி இன்வெர்ட்டர் மூலமாக டி.சி. சப்ளையை .சி. சப்ளையாக மாற்றித் தரும் சாதனம். மின் பற்றாக்குறை காரணமாக, இதைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் பலரும் அவர்களது வீடுகளில் நிறுவியுள்ளனர். திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இதனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

சோலார் லாந்தர் விளக்கு
இதை டார்ச் லைட் மாதிரி உபயோகித்துக் கொள்ளலாம். சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து இதனை சார்ஜ் செய்து கொண்டும் பயன்படுத்த முடியும். தற்போது இந்த உபகரணமும் அதிகமாக விற்பனையாகத் தொடங்கியிருக்கிறது.

சாண எரிவாயு அடுப்பு
பழக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், வீணான உணவுக் கழிவுகள், மாட்டுச்சாணம் மற்றும் மனிதக் கழிவுகள் இவற்றை பூமிக்கடியில் உள்ள கழிவுத்தொட்டி ஒன்றில் கொட்டி 15 நாட்கள் ஆன பிறகு அதிலிருந்து உருவாகும் மீத்தேன் என்ற வாயுவை பைப் மூலமாக சமையல் செய்யப் பயன்படுத்துவதே சாண எரிவாயு அடுப்பாகும். குறைந்தது 4 மாடுகள் இருந்தால் கூட அதன் சாணத்தின் மூலம் எரிவாயுவை உற்பத்தி செய்து அதன் மூலமும் மின்சாரம் எடுக்க முடியும்.

பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள விடுதிகளில் சாண எரிவாயு அடுப்பைத்தான் பயன்படுத்துகின்றனர். பல லட்சங்கள் மின் கட்டணம் இவர்களுக்கு மிச்சமாகிறது.
ஒவ்வொருவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கத் தொடங்கிவிட்டால் அரசுக்குப் பல கோடி தானாகவே மிச்சமாகிவிடும். தனியாரிடம் மின்சாரத்திற்காக கையேந்த வேண்டிய அவசியமும் இருக்காது.
சோலார் தொடர்பான எந்தப் பொருளும் இன்று பல கடைகளில் விற்பனையாகும் வகையில் உற்பத்தியாளர்களும் பெருகிவிட்டனர். நம் வசதிக்குத் தக்கவாறு தேவையான பொருளை வாங்கிக் கொள்ளலாம். இவற்றைப் பயன்படுத்திட பழகிக் கொண்டால் மின்சாரம் மிச்சமாகும். மின் தடை பற்றியோ, மின் கட்டணம் அதிகமாகி விட்டது என்றோ கவலைப்படத் தேவையில்லை. பணத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால், குடும்பத்திற்கு எவ்வளவு நல்லதோ அதைப்போல மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால் நாட்டுக்கு நல்லது. சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம். இயற்கை நமக்கு வாரி வழங்கிய பரிசு தான் சூரியசக்தி; அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம்..''என்றார்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets