உங்கள் வருகைக்கு நன்றி

கன்டாவின் சேவைக்கு விருதுகளும் பாராட்டுகளும் குவிகின்றன.

திங்கள், 9 ஜனவரி, 2012

நடைபாதை குழந்தைகளின் உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்றவற்றுக்காக மக்களிடம், உதவிகள் பெற்று, ஒரு ஆசிரியை அவர்களை பராமரித்து வருகிறார்.

ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியை கன்டா சக்ரவர்த்தி (44). கோல்கட்டாவில் உள்ள டம்டம் ரயில்வே ஜங்ஷன் வழியாக தனது பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தார். அந்த ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கியிருந்த சில சிறுமிகள் அவரிடம் பிச்சை கேட்பார்கள். சில நாட்கள் காசு கொடுத்த கன்டா சக்ரவர்த்திக்கு, அவர்கள் பள்ளிக்கூடம் போகாமல் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் என்று கேள்வி எழ, நாமே அவர்களுக்கு ஏன் பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது, என நினைத்தார்.கடந்த 2007ம் ஆண்டு, அந்த பிள்ளைகளுக்கு நடைபாதையிலேயே அமர்ந்து கன்டா, பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார். அப்போது அவரிடம் நான்கைந்து சிறுமிகள் வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு அதனை மறுவாழ்வு மையமாக கன்டா பதிவு செய்தார். எனினும், அந்த மறுவாழ்வு மையத்திற்கு கூரை கிடையாது. ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் தான் அவர்களின் உறைவிடம். தற்போது, கன்டாவின் பாதுகாப்பில் மூன்று முதல் 10 வயது வரையுள்ள 20 சிறுமிகள் உள்ளனர். அவர்களை அங்குள்ள அரசு பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிறார்.

கன்டா, காலை 5.30 மணிக்கு எழுந்து, தயாராகி, 7.30 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார். பிள்ளைகளை எழுப்பி, குளிக்க வைத்து,  உணவு செய்து கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைப்பார்.

அவரும் பள்ளிக்கூடத்திற்கு சென்று விடுவார். மாலையில் பள்ளி முடிந்ததும், மீண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, பள்ளியிலிருந்து வந்த பிள்ளைகளுக்கு இரவு வரை, பாடம் சொல்லிக் கொடுப்பார். பின்னர், உணவு அளித்துவிட்டு, தனது வீட்டிற்கு புறப்பட்டுச் செல்வார். பிள்ளைகள் அங்கேயே தங்கிக் கொள்வர். கன்டாவின் சேவையைப் பார்த்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் உதவ முன்வந்துள்ளனர். அந்த சிறுமிகளில் ஒருத்தியின் தந்தை, எல்லா சிறுமிகளையும் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்று விட்டு, மாலையில் அழைத்து வருவது வரை பாதுகாப்பாக இருக்கிறார்.

இரவில், ரயில்வே ஸ்டேஷனில் தங்கிக்கொள்ளும் பிள்ளைகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். மேலும், உணவு, உடை, பள்ளி பாடபுத்தகங்கள் உள்ளிட்ட உதவிகளையும் பல்வேறு தரப்பிலும் அளித்து வருகின்றனர். கன்டாவின் சேவையைப் பாராட்டி அவருக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் குவிகின்றன. கன்டாவின் கணவர் அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இதுகுறித்து, கன்டா கூறியதாவது: தினமும் நான் அந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக பள்ளிக்கூடம் சென்று வருவேன். பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் அந்த பிள்ளைகள் என்னிடம், பிச்சை கேட்பார்கள். ஒரு தடவை அவர்களிடம், "நீங்கள் பள்ளிக்கூடம் போகவில்லையா?' என்று கேட்டேன். "எங்களை யார் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள்' என்று கேட்டனர். அந்த வார்த்தைகள் தான், எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தின. என் முயற்சியைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்த பிள்ளைகளுக்காக பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டும். பிள்ளைகள் தங்குவதற்கு கூரை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என் லட்சியம். இவ்வாறு கன்டா கூறினார்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets