காளான் வளர்ப்பும் - தொழில் வாய்ப்புகளும்
வெள்ளி, 13 ஜனவரி, 2012
காளான் வளர்ப்பு
தற்போது காளான் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன் காளான்கள் குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறார். அவ்வப்போது விருப்பம் உள்ளவர்களுக்கு காளான் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சியும் அளித்து வருகிறார். இங்கு அவர் காளான் பற்றிய தகவல்களை நம்மிடம் அக்ரி இன்போமீடியா விற்காக பகிர்ந்து கொண்டார்.
காளானில் லெண்டிக்காளான், சிப்பிக்காளான், முட்டைக்காளான். மார்செல்லா என்ற மண்ணுக்கடியில் விளையும் கருப்புக்காளான்கள் ஆகியவை உணவுக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவுக்காளான்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். விஷக்காளான்கள் பல்வேறு நிறங்களில் இருக்கும். பால் வடியும் காளான்களும் உணவுக்கு ஏற்றவை அல்ல.
காளான்களில் பலவகைகள் இருந்தாலும், குறைந்த முதலீட்டில், சிறிய இடத்தில் ஆண்டு முழுவதும் வளர்க்க கூடிய ரகமாக இருப்பது சிப்பிக்காளான் மட்டுமே. இந்த வகை காளான்களை சிறிய கொட்டகையில் எளிதாக வளர்க்க முடியும்.சிப்பிக்காளானில் பி.எப்.இ, கோ.13,ஏபிகே1, எம்டியு1 என்ற ரகங்கள் உள்ளன. இதில் பி.எப்.இ ரகம் பல்வேறு நாடுகளில உள்ள விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகிறது.
காளான் வளர்க்க விரும்புபவர்கள், வளர்க்க திட்டமிட்டுள்ள அளவிற்கு தக்க கொட்டகை ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 10 கிலோ அளவிற்கு காளான்களை அறுவடை செய்ய வேண்டுமென்றால், 200 முதல் 250 சதுர அடியில் கீற்றுக் கொட்டகை அமைக்கலாம்.கான்கீரிட், ஓடு வீடாக கூட இருக்கலாம். வடக்கு, தெற்கு வசம் பார்த்த நிலையில் இருப்பது நல்லது.
இதற்கடுத்து, இந்த இடத்தில் வெப்பதடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும. காளான் வளர்ப்பு இடத்தில் அதிக வெப்பம் இருக்க கூடாது. வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில், முதலில் வீட்டின் தரையில் ஆற்றுமணலை 1 அடி உயரம் வரை இருக்கும்படி நிரப்ப வேண்டும். பின்னர் வீட்டின் சுற்றுச்சுவர்களில் சாக்கு படுதாக்களை கட்டி தொங்க விட வேண்டும். காளான் படுக்கைகளை வைப்பதற்கு தகுந்தபடி மரஅடுக்குகளை செய்து கொள்ள வேண்டும்.
நாளொன்றுக்கு 10 கிலோ காளான் வளர்க்க வேண்டுமென்றால், 20 காளான் படுக்கைகள், 10 பாட்டில் காளான் விதைகள், 10 கிலோ வைக்கோல் தேவைப்படும். காளான் வளர்ப்பிற்கு ஊடகமாக, காய்ந்த நெல், கரும்பு சக்கை ஆகியவற்றை கூட பயன்படுத்தலாம். இருந்தாலும் வைக்கோலில் தான் விளை திறன் அதிகம்.
விளைவிக்கும் முறை
காளான் விளைவிக்க, காளான் படுக்கைகளை முதலில் தயார் செய்ய வேண்டும். அதற்கு ஊடகமாக பயன்படுத்த போகும் வைக்கோலை 5 முதல் 10 செ.மீ அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெட்டப்பட்ட வைக்கோல் துண்டுகளை நீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய வைக்கோலை அண்டாவில் இட்டு வேக வைக்க வேண்டும்.பின்பு தண்ணீரை வடித்து விட்டு, கிருமி நாசினி கொண்டு துடைக்கப்பட்டதரையில் 50 சதவிகிதம் ஈரப்பதம் நீங்கும் வரை உலர்த்த வேண்டும்.
காளான் இடுதல்
இதற்கடுத்து காளான் விதைகளை முளைப்பதற்கு தயார் செய்ய, பாலீதின் பைகளில் வைக்கோலை நிரப்ப வேண்டும். சிறிது வைக்கோல் நிரப்பி பின்னர் அதன் மீது காளான் விதைகளை தூவ வேண்டும். பின்னர் இதன் மேல் சிறிது வைக்கோல் நிரப்பி, அதற்கு மேல் காளான் விதைகளை தூவி வரவேண்டும். இவ்வாறாக பாலீத்தின் பை நிரம்பும் அளவு செய்ய வேண்டும். இறுதியில் பையின் வாய்ப்பகுதியை தைத்து விடவேண்டும்.
இப்படி விதை நிரப்பப்பட்ட பாலீதீன் பைகளை காளான் வீட்டிற்குள் இருக்கும் மரப்படுக்கைகளில் வைத்து விடலாம். காளான் அறையின் வெப்பநிலை சுமார் 24 முதல் 28 டிகிரி வரையும், ஈரப்பதம் 70 முதல் 80 சதவீதம் வரையும் இருக்க வேண்டும். இந்த நிலையில் காளான் விதைகள் முளைத்து மைசீலியங்கள் என்ற மொட்டுக்களை பை முழுவதும் பரப்ப தொடங்கும். இதற்கு பூசணம் பரவும் நிலை என்று பெயர்.
காளான் வீட்டின் வெப்பநிலையை சீராக வைக்க உள்ளே தொங்கவிடப்பட்ட சாக்கு பைகளின் மீதும், ஆற்று மணலின் மீதும் நாளொன்றுக்கு இரண்டு முறை தண்ணீரை தெளித்து வர வேண்டும். இப்படி பராமரிக்கும் போது 5,6 நாட்களில் வளர்ச்சி பெற்ற காளான்கள் வரத்தொடங்கும். இவற்றை அறுவடை செய்யலாம்.
விளை திறனை அதிகப்படுத்தும் முறைகள்
வைக்கோலை ஊடகமாக பயன்படுத்தும் போது காளானின் விளை திறன் 80 சதவீதம் அளவு இருக்கும். ஆனால் வைக்கோலுடன் கானபயிறு பொடி, துவரைப்பொடி, தேங்காய் தண்ணீர், சாணஎரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட கரைசல் போன்றவற்றை சேர்த்து முளைக்க வைக்கும் போது 20 முதல் 40 சதம் வரை காளானின் விளை திறன் உயரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
காளான் அறுவடை
காளான்களை அதிகாலையில் அறுவடை செய்ய வேண்டும். பறித்த காளான்களில் வேர்ப்பகுதியை வெட்டி எடுத்து விடவேண்டும். பறிக்கும் போது பாலீதின் பையில் இருக்கும் மற்ற காளான் மொட்டுக்களுக்கு பாதிப்பு வராமல் எடுக்க வேண்டும். காளான்கள் பறித்த உடன் அழுக தொடங்கும். எனவே பறித்த உடனேயே அவற்றை பாலிதீன் பைகளில் போட்டு அடைத்து விட வேண்டும். காற்றோட்டத்திற்காக இந்தபையின் மேற்பரப்பில் பென்சில் முனை மூலம் சில துளைகளை இடலாம். இந்த பைகளை ஈரத்துணியில் சுற்றி குளிர்நத நிலையில் வைப்பதன் மூலம் 24 மணி நேரங்களுக்கு கெடாமல் பாதுகாக்கலாம். 5முதல் 10 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைத்தால் 3 நாட்கள் வரை பாதுகாக்கலாம்.
காளான் பைகளை வேறிடங்களுக்கு எடுத்துச் செல்ல ஐஸ்கட்டி நிரப்பிய பெட்டியில் எடுத்து செல்லலாம்.நீண்ட நாளைக்கு கெடாமல் இருக்க காளான்களை வேருடன் வெட்டி எடுத்து, மண்,தூசிகளை நீக்கி நீளவாக்கில் இரண்டாக நறுக்கி, நறுக்கிய துண்டுகளை வெள்ளைத்துணியி்ல் கட்டி கொதிநீரில் முக்கி எடுக்க வேண்டும். பின்னர் வெயியே எடுத்து நீரை வடித்து விட்டு டப்பாக்களில் அடைக்கலாம். பின்னர் மூடியை சீல் செய்து டப்பாக்களை குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து விற்பனைக்கு அனுப்பலாம் - நன்றி -ராஜதுரை