முருங்கை டீ! குடிங்கோ !
வெள்ளி, 27 ஜனவரி, 2012
முருங்கைக் கீரையை எப்படி சமைக்கணும் தெரியுமா?’ என்று சின்னக் கேள்வியுடனேயே ஆரம்பித்தார் காயத்ரி. பின், அவராகவே தொடர்ந்து, மரத்திலிருந்து பறித்தவுடனே காலையிலேயே ஃப்ரெஷ்ஷாக சமைத்து விடணும். இல்லையெனில், அது ஒருவித விஷமாக மாறி, ஜீரணத்தை பாதித்துவிடும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்?’
முருங்கைக் கீரையை வாங்கி, இலையை ஆய்ந்து, ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த, மறுநாள் சமைக்கிறோம். அப்போது கீரையின் சத்துக்களில் முக்கியமான பல, மாயமாகி விட்டிருக்கும். பல பெண்களுக்கு, முருங்கைக் கீரையை சமைக்கவே போர்! பாடுபடணுமே என்று வாங்குவதே இல்லை. முருங்கைக் கீரையில் முழு நலமும் கிடைக்கணும்; அதே சமயம் சிரமப்படவும் கூடாது என்றால் அதற்கு என்னதான் செய்வது என்று யோசித்த போது, தோன்றியதுதான் இந்த முருங்கை டீ’ என்கிறார் காயத்ரி.
எத்தனையோ அரிய மூலிகைகள் இருக்க, முருங்கை இலையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
நம் நாட்டில் வளரும் கீரைகளிலேயே எல்லாச் சத்துக்களும் நிறைந்த அற்புதமான கீரை என்றால், முருங்கைக் கீரைதான்.
அபரிதமான இரும்புச் சத்து உள்ளதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. முருங்கைக்கீரையில் உள்ள கால்ஷியம், எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலம் தருவதோடு, ஆஸ்டியோ போரோஸிஸ் எனப்படும் எலும்புத் தேய்மான நோய் வராமல் காக்கிறது. ஆன்ட்டி- ஆக்ஸிடென்ட்ஸ் நிறைய இருப்பதால், ஃப்ரீ ராடிக்கல்ஸ்களால் தோற்றுவிக்கப்படும் உடலணுக்களின் அழிவைப் பெருமளவில் தடுக்கிறது. முருங்கைக் கீரையில் பேலன்ஸ்ட் சுகர் லெவல்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. முருங்கைக் கீரை நல்லதொரு ஆன்டிபயாடிக் - அதாவது குடல் புண்களை ஆற்றவல்லது.
அதுமட்டுமா? பொட்டாசியம், வைட்டமின்-ஏ, தவிர நிறைய புரதமும் உள்ள கீரை öன்பதால், முருங்கையை ராஜகீரை என்கிறார்கள். இப்படிப்பட்ட அருமை பெருமைவாய்ந்த கீரை என்பதால் தான் அதிலே டீ தயாரிக்க முயற்சி செய்தேன் வெற்றியும் பெற்றேன்!’ என்கிறார் காயத்ரி.
உங்களுடைய முயற்சிக்கு உதவிகள் கிடைத்தது எப்படி?
என்னுடைய கல்லூரியின் மருந்தாக்கியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய ஜெயஜோதியிடம் என்னுடைய ஐடியாவைப் பகிர்ந்துகொண்டேன். அவரும் இதன் சாத்தியங்களைப் பெரிதும் பாராட்டி ஊக்குவித்தார். தமது கணவர் நடத்தி வரும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முருங்கையிலை டீயை உருவாக்கி, சந்தைப்படுத்தவும் தன் கணவரிடம் சிபாரிசு செய்தார்.
ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் யாரும் வெறும் தண்ணீரைக் குடிப்பதில்லை. சுவையும் மருத்துவக் குணமும் கொண்ட மொரிங்கா டீயைக் குடிக்கின்றனர். இளமையாக, ஆரோக்கியமாக வாழ்கின்றனர் என்று சொன்னதோடு எனக்கு அத்தனை உதவிகளையும் செய்தார். மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பிறகு முருங்கை டீ உருவானது. முருங்கையைப் பறித்து, நிழலில் காயவைத்து, பக்குவமாகத் தூளாக்கி, நெல்லிக்காய் பொடியைச் சேர்த்து, டீ-பைகளில் அடைத்து சந்தைப் படுத்தினோம். அறிமுகப்படுத்திய சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முருங்கை டீ கசக்குமா?
நோ சான்ஸ்! இலேசான மூலிகை வாசனையுடன் நல்ல சுவையாக இருக்கும். உப்பு, மிளகு போட்டு சூப் ஆகவும் குடிக்கலாம். தேன், சர்க்கரை, எலுமிச்சை கலந்து பானகமாகவும் பருகலாம். எப்படிக் குடித்தாலும் புத்துணர்வு தரும், முழுமையான மருத்துவக் குணம் கொண்டது.
தினமும் நான்கிலிருந்து ஐந்து கோப்பைகள் வரை குடித்தால், முழுமையான இரும்புச் சத்து கிடைத்துவிடும் என்பதால் பள்ளி குழந்தைகள் முதல் பாட்டி-தாத்தா வரை அனைவருக்கும் சிபாரிசு செய்கிறோம். குழந்தைகளில் மால்-நியூட்ரிஷனுக்கு ஒரே எளிய மாற்று மருந்து முருங்கை டீதான்! கர்ப்பிணிகள், இளம் தாய்மார்களுக்கு வரப்பிரசாதம். இது தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்வதோடு, தாய்ப்பாலின் தரத்தையும் உயர்த்தும். மூட்டுவலி, நீரிழிவு, ஏஜிங் னெ நாற்பதுகளில் தாக்கும் நோய்களுக்கும் முருங்கை டீ நல்ல நிவாரணம் தருகிறது.
முருங்கை டீயின் பிஸினெஸ் எப்படி உள்ளது?
விலை மலிவு, பயன் அதிகம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது. சாதாரண தேநீரே ஐந்திலிருந்து பத்து ரூபாய் வரை விற்கிறது. முருங்கை டீயின் விலையோ நான்கே ரூபாய்தான். நகர்புறங்களில் முருஙககைக் கீரை கிடைப்பதே அரிது; அப்படியே கிடைத்தாலும் அதை ஆய்ந்து சமைக்க பெண்களுக்கு நேரமிருப்பதில்லை. எனவே, நான் நினைத்ததை விட, விற்பனை கூடுதலாகவே உள்ளது.
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே, டீ, காபி, பாட்டில் பானங்களைப் பழக்கப்படுத்தாமல், முருங்கை டீ போன்ற மூலிகைப் பானங்களைக் கொடுத்து வந்தால், நம் பிள்ளைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வார்கள் என்று சொல்கிறார்.