உங்கள் வருகைக்கு நன்றி

உங்கள் முயற்சிகள் தொடங்கட்டும்

வியாழன், 12 ஜனவரி, 2012

நமக்கான வேலை எது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டிய கால கட்டம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஆசைகள் மட்டுமே நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்காது என்பதை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும். சிறிய வயதில் பஸ் டிரைவராக நாம் வேலைக்குப் போக வேண்டும் என்று தான் பலர் நினைக்கின்றனர்.
சிலர் பைலட் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். சிலரோ நாம் நடிகராக வேண்டும் என்று விரும்புகின்றனர். இது போன்ற ஆசைகள் வெறும் ஈர்ப்பால் வந்தவை தான் அல்லவா? குறிப்பிட்ட பணிகளில் உள்ள ஏதோ ஒரு அம்சம் நம்மை கவர்வதால் அந்த பணிக்குச் செல்ல விரும்புகிறோம். ஆனால் நமது பெற்றோரின் விருப்பமும் நோக்கமும் வேறு மாதிரி இருக்கிறது.
"
கேரியர் பிளானிங்' என்ற சொல்லே கடந்த சில ஆண்டுகளாகத் தான் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பேசப்படுகிறது. அதற்கு முன்னால் குறிப்பிட்ட நகரங்களில் உள்ளவர்களில் சிலருக்கும் குறிப்பிட்ட துறைகளில் வேலை பார்க்கும் பெற்றோருக்கும் தான் இருந்தது.
90
களில் தொடங்கிய உலகமயமாக்கலின் பின்பு மீடியாவின் வளர்ச்சி அசுர வேகத்தில் கிளம்பிய பின் தற்போது பரவலாக எதைப் பற்றியும் ஓரளவு விழிப்புணர்வு பெற்றோருக்கு மட்டுமல்ல மாணவருக்கும் இருக்கிறது.
இன்றைய மாணவர்கள் தான் இன்ஜினியராக வேண்டுமா டாக்டராக வேண்டுமா பயோடெக்னாலஜிஸ்டாக வேண்டுமா என்பது பற்றி மட்டுமல்லாமல் தனது பலம் பலவீனம் இவற்றையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இது இன்னமும் ஊடுருவி அத்தனை பேருக்கும் பரவும் போது இது தான் அறிவுப் புரட்சியின் ஒரு அடையாளமாக நாம் கொள்ள முடியும்.
உங்களது எதிர்காலப் பாதையை தீர்மானிப்பதாக உங்கள் பெற்றோரால் அடைய முடியாததை அடைவது மட்டுமே இருக்கக் கூடாது. உங்கள் பெற்றோர் படிக்கும் போது இருந்ததை விட தற்போது எண்ணற்ற புதிய துறைகளும் அதில் எக்கச்சக்கமான வாய்ப்புகளும் உங்களுக்குத் தான் உள்ளன. ஹாஸ்பிடல் மேனேஜ்மென்டும், ஈவன்ட் மேனேஜ்மென்டும், மல்டிமீடியாவும் உங்கள் பெற்றோர் காலத்தில் இருந்ததா
நாம் வளரும் சமூகச் சூழலைப் பொறுத்து நமது ஆர்வமும் குறிக்கோளும் தீர்மானிக்கப் படுகிறது. நமது சூழலுக்கு ஏதுவாக இல்லாத எந்த ஒரு துறையையும் நாம் நினைக்கும் போதே நமது சமூகப் பின்னணி நமக்கு அலாரம் அடித்து இது முடியும் இது முடியாது என்பதை தெரிவிக்கிறது.
இதன் அடிப்படையிலேயே நாம் நமது இலக்கை வடிவமைக்க முயற்சிக்கிறோம். இந்த குறிக்கோள் நிர்ணயித்தல் ஒவ்வொரு மாணவருக்கும் அவசியமான அடிப்படைத் தகுதியாகும். இது இல்லாத போது இலக்கில்லாத பயணமாக நமது படிப்பு அமைந்து விடுகிறது. பிளஸ் 2 அளவிலேயே இதை தீர்மானித்தால் தான் அடுத்த ஜங்ஷனில் இறங்கி சரியான பயணத்திற்கு சரியான ரயிலை பிடிக்க முடியும். இது மட்டுமல்லாது நமது குடும்பத்தின் பொருளாதார நிலை, சம்பந்தப்பட்ட துறையில் நாம் சந்திக்கக்கூடிய சவால்கள், இதை நாம் தேர்வு செய்தால் நம்மால் இதில் சிறந்து உருவாக நம்மிடம் உள்ள பலங்கள் ஆகியவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்து மனதில் கொள்ள வேண்டும்.
முன்பு போல பொருளாதாரம் மட்டுமே உங்களது இலக்கை தீர்மானிப்பத்தில்லை. தற்போது எண்ணற்ற வங்கிகள் கல்விக் கடன்களை தர தயாராக இருப்பதால் நம்மால் முடியுமா போன்ற குழப்பங்களை புறம் தள்ளுங்கள். வெறும் படிப்பு மட்டுமல்லாது ஆப்டிடியூட் திறன், தன்னம்பிக்கை மிளிரும் உங்களது ஆளுமை ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதும் மிக முக்கியம். பாடத்துடன் இவற்றையும் இணை கோடாகவே நீங்கள் வளர்க்க வேண்டும். 
பிளஸ் 2க்குப் பிறகு என்ன படிக்கலாம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகங்களை ஒரு பார்வை பாருங்கள். உங்கள் பெற்றோருடன் கலந்து பேசி, நண்பருடன் உரையாடி ஆசிரியருடன் கலந்துரையாடி உங்கள் வாழ்வின் திசையை தீர்மானியுங்கள். அதற்கேற்ப உடனே உங்கள் முயற்சிகள் தொடங்கட்டும். இலக்கும் முயற்சியும் உங்களுக்கு வழி காட்டும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets