பக்கவாதம் ஏற்பட காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும்
புதன், 18 ஜனவரி, 2012
பக்கவாதம் கொடிய நோய். மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன.
இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்கவாதத்திற்கு "ஐசெமிக் ஸ்ட்ரோக்'' என்று பெயர். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் வெடித்து ரத்தப்போக்கு அதிகமாகும் சமயங்களில் பக்கவாதம் உண்டாகும். இதற்கு "ஹெமராஜிக் ஸ்ட்ரோக்'' என்று பெயர்.
எனவே, பக்கவாதம் என்னும் இந்நோய் முழுக்க முழுக்க மூளையின் பாதிப்பால் ஏற்படும் நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதத்தினர் "ஐசெமிக் ஸ்ட்ரோக்''கினால் தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வகை ஸ்ட்ரோக் கிலும் "திரம்போடிக்'' மற்றும் "எம்போலிக்'' என இரு வகைகள் உள்ளது. இந்த இருவகை பக்கவாதமும் ரத்த ஓட்டத் தடை, ரத்தம் உறைதல் போன்ற காரணங்களினால் ஏற்படுவதாகும்.
காரணங்கள்........
கீழ்க்கண்டவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகம். ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்கவாதம் வரும் வாய்ப்பு 2 மடங்காக உயரும். ஆண்களுக்கு 33 வயது வரை பெண்களை விட 30 சதவீதம் வர வாய்ப்பு அதிகம். அதற்குப் பின் இரு பாலருக்கும் சமமாக வரும். குடும்பத்தில் பெற்றோர்களுக்கோ அல்லது அவர்களின் சந்ததியின ருக்கோ பக்கவாதம் வந்தால், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வர வாய்ப்புண்டு.
லேசான பக்கவாதம் வந்தவர்களுக்கு மீண்டும் பெரிய அளவில் வர வாய்ப்புண்டு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு நோய் உள்ளவர்களுக்கு மேலும், புகைப்பிடித்தல், மற்றவரின் புகையை சுவாசித்தல், அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, உடற்பருமன், உடல் உழைப்பின்றி சும்மா இருப்பவர்களுக்கும் பக்க வாதம் வரவாய்ப்பு உண்டு.
உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பு படி இந்தியாவில் ஒரு லட்ச மக்களில் 73 பேர் பக்கவாத நோயினால் இறக்கின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் 40-50% இறப்பு இருதய அடைப்பு மற்றும் மூளை அடைப்பு (பக்கவாத) நோயினால் வருகிறது. உலகில் 40 நொடியில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது. 4 நிமிடத்திற்கு ஒருவர் பக்கவாதத்தினால் இறக்கின்றார் என்கிறார் பிரபல நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ்.
யாருக்கு அதிக பாதிப்பு.......
பொதுவாக எல்லா வயதினருக்குமே பக்கவாதம் ஏற்படலாம் .என்றாலும், 40 வயதை தாண்டியவர்களுக்கு, வாய்ப்பு அதிகம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஏற்கனவே மாரடைப்பு வந்தவர்கள், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதில் பக்கவாதம் தாக்குகிறது.
உணவுமுறை......
30 சதவீதத்திற்கும் குறைவான கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அன்றாட உணவில் தினமும் 20 சதவீதம் அளவுக்கு பழங்கள்- காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நல்லது, வாரத்தில் 2 தடவை மீன் உணவு சாப்பிடலாம்.
தொடக்க அறிகுறிகள்.....
ஒரு சிலருக்கு முழு பக்கவாதம் (மூளை அடைப்பு) ஏற்படுவதற்கு முன் சில அறிகுறிகள் தெரியலாம். அவற்றை புரிந்து கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டால் பெரிய அட்டாக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இதில் ஒருவகை அடைப்பு ஏற்பட்டு ஒரே நாளில் சரியாகி விடும்.
முகம், கை, கால் மறத்துப் போதல் அல்லது வாய் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு போதல், பேச்சு வராமல் போதல், கண் தெரியாமல் போதல் மற்றும் தலைவலி வாந்தி மயக்கம் வருதல் போன்ற அறிகுறிகளை சிறிது நேரத்திற்கு ஏற்பட்டு விட்டு போய் விடும். இது மிகவும் முக்கியமாக கவனிப்பட வேண்டியது. இது ஒரு பெரிய அட்டாக்கிற்கு முன் எச்சரிக்கை என்று சொல்லலாம். தகுந்த சிகிச்சை எடுத்தால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்.
மூளை அடைப்பு:........
மூளையில் மிகவும் மோசமான அடைப்பு ஏற்பட்டால் மயக்க நிலை மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலை வரலாம். திடீர் தலைவலி, வாந்தி மயக்கம் ஏற்படும். முழு மூளை அடைப்பினால் ஒரு பக்க கை,கால் வராமல் போதல், பேச்சு வராமல் போதல், நடக்க முடியாமை, கண் பார்வை போதல், ஞாபகமறதி, கண் இரண்டாக தெரிதல், மறத்துப் போதல், அதிக வலி போன்றவை மூளை அடைப்புக்கு முக்கிய அறிகுறிகள் ஆகும்.
மூளை அடைப்பு முக்கியமாக வயதானவர்களுக்கு வரக் கூடிய நோய். ஆனால் சிறு வயதினருக்கும் வரலாம். தலை அடிபடுதல், ரத்த சம்பந்த நோய்-இருதய நோய் உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை உபயோகப்படுத்துதல் போன்றவற்றால் இந்த நோய் இளமையிலேயே வந்து விடுகிறது.
சிகிச்சைமுறை.....
பக்கவாத நோயாளியை ஒரு நாட்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்க வேண்டும். சிலருக்கு மூளை வீக்கம் அதிகமாகி அது நன்றாக உள்ள நரம்பு மண்டலத்தையும் அழுத்த ஆரம்பித்து விடும். இது தீவிர மயக்க நிலை மற்றும் உயிருக்கு ஆபத்து நிலையிலும் கொண்டு விடும். அப்படிப்பட்ட நிலையில் உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்.
கபால எலும்பின் ஒரு பகுதியை அகற்றி விட்டு மூளை வெளிப்பக்கமாக வீங்க வழி வகுத்துக் கொடுக்கப்படும். மூளையில் ரத்தக் கசிவு பெரிதாக இருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். சில நேரங்களில் மூளையில் உள்ள மூளை நீர் ஓட்டம் தடைபட்டு அதனால் நீர் தேக்கம் ஏற்பட்டு விடும். இதற்கு ஹைட்ரோ செப்பல்ஸ் என்று பெயர். இதற்கு விபி சண்ட் எனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.
மூளை அட்டாக் வந்து சில நாட்கள் மிகவும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மூளையில் சில நரம்பு மண்டலங்கள் செயல்பாடு இன்றி போவதால் பல்வேறு விளைவுகள் வரும். நுரையீரலில் நீர் சேர்ந்து மூச்சு விட திணறல், இருதய துடிப்பில் மாற்றம், வலிப்பு, நிமோனியா, விழுங்க முடியாத நிலை ஒரே நிலையில் படுத்திருப்பதால் இடுப்பில் புண், சிறுநீர், மலம் கட்டுப்படுத்த முடியாத நிலை போன்ற விளைவுகள் வரலாம்.
மூளை அட்டாக் எனும் பக்கவாதத்திற்கு நரம்பியல் நிபுணர்கள், பிசியோ தெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு தெரபி, மனநிலை மருத்துவர், நர்சுகள் சேர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.அப்பொழுது தான் நோயாளிகள் பூரண குணம் அடைவார்கள். பக்கவாத அறிகுறிகள் தெரிந்ததும் டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் 80 சதவீதம் அளவுக்கு பக்கவாதம் குணமாகி விடும் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளுக்கு ரிகேபிலிட்டேசன் தெரபி அளிப்பது நல்லது .
ரத்த ஓட்டத்தை சீராக்க யோசனை!
இரவிலோ அல்லது அதிகாலையிலோ ஏற்படும் பக்கவாதப்பிரச்சினை, சிலருக்கு மரணத்தையும் ஏற்படுத்தலாம். பார்வைக் கோளாறுகள், பேச்சு தடுமாறுதல், நினைவாற்றல் குறைதல், உணர்வு மற்றும் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் போன்றவையும் ஏற்படும். பக்கவாத நோய்க்கு உடனடி சிகிச்சை அவசியம். முதலில் பக்கவாதம் என்று அறியப்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு செல்ல வேண்டும்.
அங்கு உடனடியாக ரத்தம் உறைந்திருப்பதை நீக்கி, சீரான ரத்த ஓட்டத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அண்மைக்கால ஆய்வின்படி ரத்தக்குழாய் பாதிப்பு காரணமாக பக்கவாதத்தை எதிர்கொள்ள, பாதிப்பு ஏற்பட்ட 4 மணி நேரத்துக்குள் ஆல்டிபிளேஸ் மருந்தைச் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. எனவே பக்கவாத நோய்க்கான அறிகுறிகள் தெரிய வந்து, 3 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்தல் மிகவும் அவசியம்.
என்றாலும் இயந்திர கதியாகிப் போன இவ்வுலகில் அன்றாடம் சில எளிய உடற்பயிற்சிகளை முதியவர்கள் அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்வதை வழக்கமாகிக் கொள்ளலாம். இதனால் ரத்த ஓட்டம் தடைபடுவது தடுக்கப்படும். மூளை மீதான தாக்குதல் மிக விரைவாக ஏற்படக் கூடியது என்பதால், உடனடி சிகிச்சை அவசியம்.
பக்க வாதம் வராமல் தடுக்க வேண்டுமானால், தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். உணவுப் பழக்கங்களில் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே விட வேண்டும் என்கிறார் சென்னை கீழ்ப்பாக்கம் நியூஹோப் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சைமன் ஹெர்க்குலிஸ்