பயணம் செய்யுங்கள், படியுங்கள், கேளுங்கள், பேசுங்கள் !
செவ்வாய், 11 டிசம்பர், 2012
அறிவைக்
கற்றுத்தருகிறோம். ஆனால், அறிவை வாங்கிக் கொண்டு செயல்படுவதுதான் வெற்றிக்கு வழி.
கற்ற கல்வியை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம். பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகளுக்கு, சூழலை எதிர்கொள்வதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பொது
விழிப்புணர்வு அவர்களுக்கு அவசியம். வெறும் மதிப்பெண் வெற்றியைத்
தீர்மானிப்பதில்லை. துறை சார்ந்த விஷயங்களை தொடர்ந்து கிரகித்துக் கொள். நிறைய
பயணம் செய்யுங்கள், படியுங்கள்,
கேளுங்கள், பேசுங்கள்,
அப்போதுதான் உலக அறிவு
விருத்தி அடையும்.
மொழிச்சிக்கல்
நிறைய குழந்தைகளுக்கு இருக்கிறது. என்ன தோன்றுகிறதோ அதைப் பேச்சில் வெளிப்படுத்தத்
தெரிவதில்லை. எண்ணங்களை சொல்லத் தெரியாவிட்டால், எப்படி
வெற்றி பெறுவது. ஒரு வெளிநாட்டு மொழியேனும் கற்றுக் கொள்ளுங்கள். அது ஆங்கிலமாக
மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது என
முடிவு செய்துவிட்டால், எல்லா விஷயங்களையும் அந்தக் கோணத்திலேயே சிந்தியுங்கள்.
உன்
துறையில் நீ விற்பன்னராக இருக்க வேண்டும். நேர்மறையாக சிந்தி. யார் என்ன
சொன்னாலும் நம்பாதே; முதலில் கிரகித்துக் கொள், கேட்ட
விஷயங்களை வடிகட்டு, உனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள். பேச்சுத்திறன்
இல்லாத குழந்தைகளை நிறைய சந்திக்கிறேன். அளவளாவும் திறன் இல்லாவிட்டால், போட்டி உலகத்தில் எப்படி வெல்ல முடியும். மனோநிலையை
வார்த்தைகளுடன் இணைத்துக் கொள்ளாதே. என்ன மனநிலையில் இருந்தாலும், நிதானமாகவே வார்த்தைகள் வெளி வர வேண்டும். வார்த்தைகள் உனது
கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
ஒரு
விஷயத்தை மறுக்க வேண்டும் எனத் தோன்றினால்,
தைரியமாக மறு. பெரியவர்கள்
சொல்கிறார்கள் என்பதற்காக உனக்கு வேண்டாத விஷயத்தைத் திணித்துக் கொள்ளாதே.
வேண்டாம் என நினைத்தால், அதை தைரியமாக வேண்டாம் எனச் சொல்வதற்குக் கற்றுக் கொள்.
நிதானமாக, தீவிரத்தன்மையுடன் செயல்படு.
கல்லூரியில்
நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்து. தவறான நண்பர்கள் தேர்வை விட, மோசமான விஷயம் வேறெதுவும் இல்லை. தகுந்தது வாழும்; தகாதது வீழும். அதாவது நீ என்னவாகப் போகிறாய் என முடிவு
செய். அதற்காக தீவிரமாக முயற்சி செய். வாழ்க்கையை வாழலாம்; பிழைக்கத் தேவையில்லை.