உங்கள் வருகைக்கு நன்றி

திருமண வாழ்க்கைக்கு பரஸ்பர அன்பு அவசியம்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012


மணமகன் கருப்பாக இருக்கிறார், வயதானவராக இருக்கிறார், அழகில்லாமல் இருக்கிறார், காதலன் இருக்கும்போது இன்னொருவரை எப்படி திருமணம் செய்வது... இப்படி பல காரணங்களைக் கூறி தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்று போவது அதிகரித்து வருகிறது. இதெல்லாம் முதலிலேயே தெரியாதா? திருமணத்துக்கு முதல் நாள்தான் தெரியுமா? கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனால் எவ்வளவு அவமானம்? எத்தனை பேருக்கு மனக் கஷ்டம்? திருமணம் வேண்டாம் என முடிவு செய்யும் அந்த நேரத்தில் வரும் தைரியம் ஆரம்பத்திலேயே வந்தால் யாருக்குமே பிரச்னை கிடையாதே. மணக்கோலம் பூண்டபிறகு, திருமணம் வேண்டாம் என முடிவு செய்து மண்டபத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார் மணமகள்.

பட்டுப் புடவை, கழுத்து நிறைய நகை, முழு மேக்கப்புடன் மணக்கோலத்தில் ஒரு பெண் கும்பகோணம் புது பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார்.  ரோந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண் திருமணம் பிடிக்காமல் தாலி கட்டும் நேரத்தில் ஓடி வந்திருப்பது தெரியவந்தது. அவருக்கு வயது 18. பிளஸ் 2 படித்திருக்கிறார். கும்பகோணம் அருகே ஆவூர் ஊத்துக்காடு சொந்த ஊர். மருங்கூரை சேர்ந்த ராஜாவுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். பட்டீஸ்வரத்தில் திருமணம். மணமகன் 13 வயது மூத்தவர். அதிகம் படிக்கவில்லை. அவரை திருமணம் செய்வதில் பெண்ணுக்கு இஷ்டமில்லை. 

அதனால், கல்யாண மண்டபத்துக்கு போவதாக அப்பா, அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு, ஓடிவந்துவிட்டார். இதையடுத்து அவரது பெற்றோரை போலீசார் வரவழைத்தனர். அவமானம் தேடி தந்த மகள் எங்களுக்கு வேண்டாம்என்று கூறிவிட்டு அவர்கள் சென்று விட்டனர். இதையடுத்து, பெரியப்பாவுடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மணமகன் குடும்பத்தினர் உடனே ஊருக்கு புறப்பட்டு சென்று உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். பெண் வீட்டாரும் மண்டபம் தயார், சாப்பாடு தயார், உறவினர்களும் இருந்ததால் ஓடிப்போன பெண்ணின் தங்கைக்கு அதே முகூர்த்தத்தில் உறவுக்கார பையனுக்கு பேசி உடனடியாக திருமணம் செய்து வைத்தனர்.

திருமண வாழ்க்கைக்கு பரஸ்பர அன்பு அவசியம். ஒருவரையொருவர் பிடித்திருந்தால்தான் அன்பு வரும். நிச்சயம் செய்வதற்கு முன்பு மணமகன், மணமகள் இருவரிடமும் திருமணத்துக்கு ஒப்புதல் வாங்க வேண்டும். அப்படி இல்லாமல் பெற்றோரே முடிவு செய்தால், திருமண நாளில் இப்படித்தான் அவமானத்தை சந்திக்க நேரிடும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets