லாபம் தரும்நெல்லி வளர்ப்பு!
திங்கள், 31 டிசம்பர், 2012
நெல்லி மகசூல் பற்றி கூறும், திருநெல்வேலி தோட்டக்
கலைத் துறை இணை இயக்குனர் தமிழ் வேந்தன்: உலகம் முழுவதும் நெல்லியின்
தேவையிருந்தாலும், தமிழகத்தில் மட்டும் தான், நெல்லி விளைச்சல், ஆண்டு முழுதும் பலன் தரக் கூடியது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடவு
செய்து விட்டால், மழை ஆரம்பித்தவுடன், சீராக வளர்ந்து விடும். உவர் நிலம் உள்ள, ராமநாதபுரம் போன்ற கடற்கரை
மாவட்டங்கள் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் வளரக் கூடியது, நெல்லி. செம்மண் பூமியாக
இருந்தால், மகசூல் நன்றாக இருக்கும்.நட்டவுடன், காற்று புகாத வகையில், கன்றுகளைச் சுற்றி, மண்ணை இறுக்க
வேண்டும். ஒரே ரகத்தை நடாமல், பல ரகங்களை கலந்து நட்டால், மகரந்தச் சேர்க்கை நடந்து, மகசூல் நன்றாக இருக்கும். நட்ட முதல் இரண்டு ஆண்டுகளில், மழைக்காலம் தவிர, மற்ற நேரங்களில்
வாரத்திற்கு ஒரு முறை, நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாவது ஆண்டிலிருந்து, நெல்லி பலன் தரும்; அப்போது, 20 நாட்களுக்கு ஒரு முறை, நீர் பாய்ச்சினால் போதுமானது.நெல்லி மரங்கள், நன்கு படர்ந்து
அடர்த்தியாவதற்கு, ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், இந்தக் காலத்தில் ஊடு
பயிராக, காய்கறி, பருப்பு வகைகளைப்
பயிரிடலாம். மரங்கள் பூக்கும் தறுவாயில், நீர் பாய்ச்சத் தேவையில்லை.
கோடை காலத்திற்குப் பின், காய்கள் பிடிக்கத் துவங்கும் போது, பருவ மழை துவங்கி விடும்.
உரமிட்ட உடனே, நீர் பாய்ச்சுவது முக்கியம். இம்முறையைப் பின்பற்றினால், பிஞ்சுகள் உதிர்வதை
தடுக்க முடியும்.நெல்லியில், 100 ஆண்டுகள் வரை காய்க்கும் மரங்களும் உள்ளன. ஒரு மரம், 10 ஆண்டுகள் காய்க்கும் என, வைத்துக் கொண்டாலும், ஒரு பருவத்தில் மரத்திற்கு குறைந்தது, 80 முதல், 100 கிலோ நெல்லி கிடைக்கும். ஏக்கருக்கு, 110 மரம் வைக்கலாம். கிலோ, 10 ரூபாய் விற்றாலே, ஏக்கருக்கு, 80 ஆயிரம் லாபம் கிடைக்கும். அருகில் உள்ள சந்தை வாய்ப்புகளை தெரிந்து கொண்டால், நெல்லி போல் லாபத்தை
அள்ளித் தரக் கூடியது வேறு இல்லை.