உங்கள் வருகைக்கு நன்றி

நபிகள் (ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா ?

செவ்வாய், 11 டிசம்பர், 2012


ஒரு மனிதர் இறை நேசராக ஆகுவதற்குரிய அடையாளங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண்பதாகும் என்று முஸ்லிம்களில் பலர் நம்பிக் கொண்டிக்கிறார்கள். சில புத்தங்களில் கூட இந்தக் கருத்தை எழுதியும் வைத்துள்ளார்கள்.
ஒரு மனிதர் நான் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன்என்று கூறினால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு மத்தியில் அவர்மீது மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் கூட கூடுகிறது. அவர் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று கூட முஸ்லிம்களில் பலர் எண்ணிக் கொள்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மீது தங்கள் உயிரை விட அதிக மதிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள், நபி(ஸல்) அவர்களை காண முடியாததை பெரும் இழப்பாகவே கருதி வருகிறார்கள். இந் நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கண்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது அவர்களைப் பொருத்தவரை பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இதனால் கூட நபியை கனவில் கண்டதாக கூறும் நபரின் அந்தஸ்து கூடுகிறது.
நபியை நேரில் காண்பதாலோ அல்லது கனவில் காண்பதாலோ ஒருவருக்கு மார்க்க ரீதியாக எத்தகைய பலனும் ஏற்படப் போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த போது நேரில் பார்த்த எத்துனையோ பேர் ஈமான் கொள்ளவில்லை. நேரில் பார்த்து ஈமான் கொண்டவர்களில் சிலர் கூட அவ்வப்போது சந்தர்ப்பவாதிகளாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுவெல்லாம் வரலாற்று உண்மை. எனவே ஒருவர் நபியைக் காண்பதால் அவரிடம் இறைநம்பிக்கை மற்றும் கொள்கை ரீதியாக எத்தகைய முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரத்யேகமாக முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் காண்பது பற்றி முஸ்லிம்களிடம் ஒரு உணர்ச்சிப் பூர்மான மனநிலை நீடிப்பதற்கு காரணம் கீழே இடம் பெறும் ஹதீஸ்களேயாகும்.
என்னை யார் கனவில் கண்டாரோ அவர் என்னையேக் கண்டார் என் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்பது நபிமொழி (அபூஹூரைரா(ரலி) புகாரி (முஸ்லிம் திர்மிதி)

இந்தக் கருத்தை வலியுறுத்தி வார்த்தை மாறாமல் புகாரியில் ஏராளமான இடங்களில் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸில் என்னைக் கனவில் கண்டவர் என்னையேக் கண்டார்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ஒருவர் ஒரு கனவுக் காண்கிறார். அதில் ஒரு மனிதர் வருகிறார் நான் தான் முஹம்மத் இறைவனின் தூதர்என்றுக் கூறுகிறார். சில கட்டளைகளை இடுகிறார் (மதினாவில் கனவுக் கண்டு வினியோகிக்கப்பட்ட நோட்டீஸ்கள் இதற்கு உதாரணம்) கனவில் வந்தவர் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்து விட்டதால் கனவுக் காண்பவர் ஏகத்துக்கும் அக மகிழ்ந்து கனவின் கட்டளையை சிரம்மேல் கொண்டு செயல்படுத்த முனைவதோடு இறைத்தூதரைக் காணும் பாக்கியம் கிடைத்து விட்டதால் தன்னை மதிப்பிற்குரியவராகவும் கருதத் துவங்கி விடுகிறார். தனக்கு வந்த ஒரு கனவை ஆதாரமாக் கொண்டு அதன் பின்னர் மார்க்கக் காரியங்களில் மனதில் தோன்றியதையெல்லாம் செய்ய துணிந்து விடுகிறார்.
இதற்காக அவர் எடுத்து வைக்கும் வாதம் நான் இறைத்தூதரைக் கனவில் கண்டேன். வந்தது இறைத்தூதர் தான் ஏனெனில் என் வடிவில் ஷெய்த்தான் வர மாட்டான்என்று அவர்களே கூறியுள்ளதால் கனவில் வந்தது நபி(ஸல்) அவர்கள் தான்.என்ற வாதமே அவரிடமிருந்து வெளிப்படும்.
கனவில் மார்க்கக் காரியங்களோ, கட்டளைகளோ வர முடியாது   இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபி(ஸல்) கனவில் வந்து மார்க்க விஷயங்களை அறிவிப்பதாக நம்புவது அவர்களின் தூதுத்துவப் பணிக்கே இழுக்கு என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும்.
அப்படியானால் கனவில் நபி(ஸல்) அவர்கள் வருகிறார்கள். சில காரியங்களைச் சொல்கிறார்கள் என்பதன் நிலவரம் தான் என்ன?
முதலில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் என்ன சொல்கிறது என்பதை விளங்குவோம்.
குறிப்பிட்ட ஹதீஸில் என் வடிவில் ஷெய்த்தான் வராமட்டான்என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். என் வடிவில்என்பதில் தனது வடிவத்தை நபி(ஸல்) பிரதானப்படுத்தியுள்ளதால் அவர்களின் வடிவில் ஷெய்த்தான் வர முடியாது என்பது தான் உண்மையே தவிர வேறு வடிவத்தில் வந்து நபி(ஸல்)அவர்களின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடையில்லை. தடுக்கப்பட்டுள்ளது முஹம்மத்(ஸல்) அவர்களின் வடிவம் தானே தவிர அவர்களின் பெயரல்ல.
கனவில் வரக் கூடிய ஷெய்த்தான், மக்கள் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கற்பனை செய்து வைத்துள்ள வடிவில் வந்து நான் தான் முஹம்மத்என்று சொல்லுவதற்கு தங்கு தடையின்றி வாய்ப்பு உண்டு. முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் கண்டதாகக் கூறுபவர்களிடம் அவர்கள் எப்படி இருந்தார்கள்என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அவர்கள் வர்ணிக்கும் வர்ணனைக்கும் நபி(ஸல்) அவர்களின் உருவ அமைப்புப் பற்றி வரும் அறிவிப்புகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமிருக்காது.
நபி(ஸல்) கனவில் வந்தார்கள் என்பது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமான வாதம் என்றாலும் தன் உருவில் ஷெய்த்தான் வரமாட்டான்என்று சொன்ன நபி(ஸல்) இது பற்றி கூடுதலாக விளக்கியுள்ளதையும் இங்கு எடுத்துக் காட்டுவோம்.
யார் என்னைக் கனவில் கண்டாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என் வடிவில் ஷெய்த்தான் வரமாட்டான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா (ரலி) புகாரி,முஸ்லிம்.

கனவில் என்னைக் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என்பது ஒரு முன்னறிவிப்பாகும்.
நபி(ஸல்) அவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும் போது காணக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள் அல்லது காணும் வாய்ப்பைப் பெறுபவர்கள் இவர்களுக்கான முன்னறிவிப்புதான் அது.
பொதுவாக எல்லா காலக்கட்டத்திலும் நபி(ஸல்) அவர்களைக் கணவில் காண முடியும் என்று யாராவது வாதிட்டால் அவர் என்னை நேரிலும் கண்பார்என்று நபி(ஸல்) சொன்னதை அவர் பொய் படுத்தி விடுகிறார் என்ற நிலைதான் உருவாகும்.
அவர் விழிப்பிலும் (நேரிலும்) என்னைக் காண்பார்என்ற அறிவிப்பிலிருந்து நேரில் காணும் வாய்ப்பில்லாத எவரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது என்பதை தெளிவாக விளங்கலாம்.
எனவே இன்றைக்கு யாரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது. யாராவது கனவில் கண்டதாகக் கூறினால் நபி(ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி ஷெய்த்தான் அவரிடம் விளையாடியுள்ளான் என்பதை சட்டென்று புரிந்துக் கொள்ள வேண்டும். அதை அவருக்கு விளக்கவும் வேண்டும்.
நபி(ஸல்) கனவில் வந்து நீ இஸ்லாத்தைத் தழுவுஎன்று சொல்வதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானதாகும். இஸ்லாம் என்பது உலக மக்களுக்கென்று ஒரு கொள்கையை முன் வைத்துள்ளது. அந்தக் கொள்கைப் பற்றி விவாதிக்கச் சொல்கிறது விளக்கம் பெறச் சொல்கிறது. அது சரி என்று விளங்கும் பட்சத்தில் அதை ஏற்று முஸ்லிமாக சொல்கிறது. ஒருவரின் தோற்றமோ அவர் இடும் கட்டளையோ இஸ்லாத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலல்ல.
(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். (அல் குர்ஆன் 4:113)

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும் (அல் குர்ஆன் 4:115)

இந்த இரண்டு வசனங்களையும் படித்து சிந்தியுங்கள். இறை நம்பிக்கை என்பது இறை அருளால் அவன் கற்றுக் கொடுக்கும் கல்வியால் ஏற்படுவதாகும் என்பதை இந்த வசனங்கள் சுட்டிக் காட்டுகிறது. முதலாவது வசனத்தில் நபியே.. நீர் அறியாமலிருந்தவற்றை அவன் கற்றுக் கொடுத்தான்என்கிறான். இரண்டாவது வசனத்தில் நேர்வழி இன்னதென்று தெளிவாக தெரிந்தப் பின்னர்..என்கிறான். நேர்வழிப் பெற வேண்டுமானால் அதன் கொள்கையைக் கற்க வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
கனவில் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்என்று கூறுவதெல்லாம் ஒரு கொள்கையை விளக்கும் முறையோ அழகோ கிடையாது. இஸ்லாம் அதை விரும்பவும் இல்லை.
நபி(ஸல்) கனவில் வந்து கட்டளையிட்டார்கள், இஸ்லாத்தை ஏற்கும் படி கூறினார்கள் என்று எடுத்து வைக்கும் இதே வாதங்கள் கிறிஸ்த்தவர்களிடமும் இருக்கிறது. கிறிஸ்த்துவத்தை தழுவுபவர்களில் கனிசமானவர்கள் ஏசுவை நான் கனவில் கண்டேன். அவர் தான் என்னை கிறிஸ்த்துவத்திற்கு வரும்படி கூறினார்என்றே கூறுகிறார்கள். இஸ்லாத்தை போதிக்க வந்த ஈஸா(அலை) (இயேசு) இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையின் பக்கம் யாரையும் அழைப்பார்களா.. ஆனால் அந்த மக்கள் கனவில் வந்தது இயேசு தான்என்று நம்புகிறார்கள். இது போன்ற கொள்கையற்ற நம்பிக்கைகள் இஸ்லாத்தில் தனது பெயரால் வந்து விடக் கூடாது என்பதால் தான் என்னைக் கனவில் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார்என்று முன்னறிவிப்பு செய்து வெறும் கனவை ஆதாரமாகக் கொள்ள வேண்டாம் என்பதை அறிவுறுத்திச் சென்றுள்ளார்கள். எனவே நபி(ஸல்) கனவில் வருவார்கள் என்று நம்புவது ஆதாரமற்ற வெறும் யூகமேயாகும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets