ஒரு பெண்ணின் உள்ளக்குமுறல் 1
சனி, 29 செப்டம்பர், 2012
நான் பல வேலைகளில் யோசித்தது உண்டு, என்ன தான் செய்யவேண்டும் நான், மனம் புழுங்கி, வருந்தி
சொல்லவரும் விஷயங்கள் உங்கள் காதில் விழ, அங்கீகரிக்கப்பட, மாற்றம்
வரும்படியான மனநிலை உருவாக என்று. இதுவரை பிடிப்படவில்லை, இனியாவது
பிடிபடுமா எனவும் தெரியாது எனக்கு.
என்னையோ, இல்லை என்னை போலவே தொலைந்த முகங்கள் கொண்ட பெண்களையோ
நீங்கள் கட்டாயம் பார்த்திருக்கலாம், பார்த்திருப்பீர்கள், பார்க்க நேரலாம். கடக்கும் நிமிடங்களை இறுகப்பற்றி, நேற்றைகளையும் நாளைகளையும் மறந்த
எங்களுக்கு இன்னும் பேர் வைக்கப்படவில்லை. எங்களை
கண்டுப்பிடிப்பது அத்தனை கஷ்டமில்லை. நாங்கள் அசின்களோ, தமன்னாக்களோ, ஐஷ்வர்யா ராய்களோ நிச்சயம்
இல்லை. Matrimonial column தாங்கி வரும் Tall, Fair and Pretty பெண்கள், ஒரு 85% நாங்களாக இருக்க
வாய்ப்பில்லை. சுமார் அழகாய், சுமார் புத்தியோடு, சுமார் பணத்தோடு, சுமார் படிப்போடு, சுமார் வேலையோடு எங்கள் வாழ்க்கையை கடந்து, வந்த வழி திரும்பிப் பார்த்து வெதும்பி குமுற மட்டுமே
தெரிந்த இந்த முதுகெலும்பில்லா கூட்டத்தில் நானும் ஒருத்தி. பேச்சு வழக்கிற்கு
நாங்களை நான் என்றே வைத்துக்கொள்ளலாமா... புரிந்து கொள்வீர்கள் என்று நம்புவோமாக!
மூலக்கடையில் நீங்கள் விட்ட சிகரெட் புகையின் ஊடே, நான் உங்களை
கடந்திருப்பேன். வெண்டைக்காய், தக்காளி பார்த்து வாங்குவதில் முனைப்பாய்
இருந்தப்போது தெரிந்த என் இடுப்பை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பஸ்ஸில்
இடிபட்டு இடமின்றி நிற்க, என் பின்பகுதியை தேய்த்துக்கொண்டு உங்கள்
உறுப்புகளின் வேட்கையை சிலநிமிடம் தீர்த்துக்கொள்ள, அறுவெறுப்பாக உணர்ந்தாலும், வீட்டில்
நேற்று என்னை அடித்ததில் வலித்த கன்னத்தையும் உடைந்த தன்மானத்தையும் யோசித்து
கொண்டு ஒன்றும் சொல்லாது வந்ததில், பஸ் விட்டு இறங்கி, உங்கள்
நண்பர்களிடம், ``மாம்ஸ்! இன்னைக்கு பஸ்ல ஒரு Aunty செமயா company குடுத்தாடா!`` என்று பீற்றிக்கொள்ள வைத்தது நானாக
இருக்கலாம். பல சமயங்களில் வெறும் மார்பகமாகவோ, பிட்டமாகவோ, இடுப்பாகவோ கூட நான் உங்களுக்கு
தெரிந்திருப்பேன். ``காலைலயே என்னமோ புருஷன் செத்தாப்புல எப்புடி
இருக்குது பாரு, விடியாமூஞ்சி!`` என்று வாய் விட்டோ, மனத்திற்குள்ளேயோ
திட்டினாலும், ஒன்றுமே உறைக்காது காப்பி போட்டு, காலை சமையல் செய்து நீங்கள் இருக்கும்
இடத்திற்கு கொண்டு வந்து கொடுப்பவள் நானாக இருக்கலாம். அலுவலகத்தில் நேரத்திற்கு
வந்து வேலையை மட்டுமே கவனித்து, பாராட்டப்பட்டால், ``இதையும் அதையும் காட்டியே வேலை முடிச்சிக்கிறாளுங்க`` என்று சொன்னதும் என்னை பற்றி இருக்கும். ஆக மொத்தம் இப்படி நீங்கள் காணும்
திசை, ஊர், நாடு முழுக்க
இருப்பினும், அரூபமான என்னை நீங்கள் உற்றுத்தேடித்தான் கண்டுப்பிடிக்க முடியும்.
திமிர் பிடிச்ச பேச்சு, தெனாவட்டு
பார்வை, எவன்
கூடவேணும்னா போகலாம், குறைந்த பட்ச ஆடைகள் போடுவது, பிறப்புறுப்பை
பற்றி பேசுவது ஆகியவைதான் பெண்ணியம் என்று நீங்கள் நினைத்திருப்பீரெனில் மேற்கொண்டு
படிக்கவும். ``எதற்கு இத்தனை பேர் பெண்ணியம் பற்றி பேசுதுங்க, அவர்களுக்கு தான் எத்தனை சலுகைகள், இன்னும்
என்னதான் வேணும் இந்த எழவெடுத்ததுங்களுக்கு!`` என்று சொல்வீரேயானாலும் மேலே படிக்கவும்.
யமுனா ராகவன்