"ரிட்டர்ன்-டிக்கட்'டோடுதான் வந்திருக்கிறோம்.
வெள்ளி, 28 செப்டம்பர், 2012
சொன்னால் நம்பமாட்டீர்கள். பத்தொன்பது, இருபது வயதுள்ளவர்களுக்கு இன்றைக்கு சர்க்கரை
வியாதி இருக்கிறது. உடல் பருமன், அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளுதல், தன்னம்பிக்கையின்றி இருத்தல், தூக்கமின்மை, சில வகை ஆடைகளை உடுத்துவதற்காக வேண்டியும், சில போட்டிகளில் பங்கெடுப்பதற்காகவும், வீட்டில் நடக்க இருக்கும் விசேஷங்களுக்காகவும்
தங்களின் உடலை வருத்திக் கொண்டு, மெலிந்த தோற்றத்தை வலுக்கட்டாயமாகப் பெறுகிறார்கள். வளர் இளம் பெண்களுக்கு
ஏற்படும் இந்த "சைஸ்-ஜீரோ' மேனியா ஆரோக்கியமானதில்லை!
இதற்கெல்லாம் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பள்ளிகளில், குடும்பத்தில், சமூகத்தில் என இன்றைய தலைமுறைகள் பல்வேறு
பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இந்தத் தேர்வு, அந்தத் தேர்வு என்று பள்ளிகளில்
நெருக்குகிறார்கள் என்றால், வீட்டில்,
"உனக்கு சின்ன
வேலையைக் கூட செய்வதற்கு பொறுப்பு இல்லை...' என்பது போன்ற நெருக்குதல்கள். இதேநேரத்தில்
சமூகத்திலும் தன் வயது நிலைகளில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் விஷயங்கள் தனக்கு
கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வேறு அவர்களை அலைக்கழிக்கும்.
ஐம்பது சதவிகித வளர் இளம் பருவத்தினர் மதிய உணவை பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் கேன்டீன்களிலேயே
சாப்பிடுகின்றனர். இது அவர்களின் உடல், மன வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கின்றது. துரித
உணவு வகைகள், பாட்டில்களில் அடைத்து விற்கப்படும்
குளிப்பானங்கள், பொரிக்கப்பட்ட உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற நமது உணவுப் பழக்கத்தில் இல்லாத
உணவுகளைச் சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு செரிமானம் ஆவதில் நிறையப்
பிரச்னைகள் ஏற்படுகின்றன. வளர் இளம் பருவத்தின் இந்தப் பிரச்னைகளைச் சமூகப்
பிரச்னையாகப் பார்க்கவேண்டும். பள்ளியிலிருக்கும் ஆசிரியர்கள், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், சமூகத்தில் ஆரோக்கியமான உணவைக் குறித்து
பிரசாரம் செய்பவர்கள் ஆகியோர் இணைந்து செயலாற்றுவதில்தான், வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியம் அடங்கியிருக்கின்றது.
ஒரு குழந்தைக்கு தேவையில்லை என்று ஒதுக்கப்படும் நமது பாரம்பரியத்தில் இல்லாத உணவை, பள்ளி வளாகத்தில் எந்தக் குழுந்தைகளும்
சாப்பிடக் கூடாது என்னும் நிலைமையை உருவாக்கவேண்டும்.
சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, திடீரென்று தேவைக்கு அதிகமான உணவை, பொறித்த சிப்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவதால்
உடல் பருமன் பிரச்னைக்கு வளர் இளம் பருவத்தினர் ஆளாகின்றனர். இதனால் அவர்களுக்கு
குறட்டைப் பிரச்னையும் ஏற்படுகின்றது. பள்ளிகள் தோறும் ஆரோக்கியமான உணவுப்
பழக்கத்தையும், சுற்றுப்புறச் சுகாதாரம், புவி வெப்பமடைதல் போன்றவற்றை வலியுறுத்தும்
"ஈகோ கிளப்'களை உருவாக்க
வேண்டும்.
வீடுகளில் நிறையப் பேர் குளிர்சாதனப் பெட்டியை நேற்று மீந்துபோன சாம்பார், நேற்றைக்கு முந்தைய நாள் மீந்து போன ரசம்
போன்றவற்றைப் பாதுகாக்கும் பெட்டியாக நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்
கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளையும், பழங்களைக் கொண்டு தயாரிக்கும் விதவிதமான
சாலட்களையும் ஸ்டோர் செய்யும் பெட்டியாகக் குளிர்சாதனப் பெட்டியை குடும்பத்
தலைவிகள் மாற்றவேண்டும்.
மத்திய வயதினர்
முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பத்து ஐந்து வயதுள்ளவர்களை மத்திய வயதினர்
எனலாம். இந்த வயதில் இருப்பவர்கள் பிள்ளைகளின் படிப்புக்காக, வசதியான வாழ்க்கைக்காக, வீடு கட்டும் கனவுக்காக பணம் சம்பாதிக்க நேரம், காலம், தேசம் கடந்து ஓடிக்கொண்டிருப்பார்கள். இந்தப்
பரபரப்பான சூழல் ஆண்களுக்கு மட்டும் கிடையாது. பணிபுரியும் பெண்களுக்கும் இத்தகைய
சுமைகள் உண்டு. இப்படி தொடர்ந்து பணிபுரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும்
நாளடைவில் ஒருவிதமான சலிப்பு ஏற்படும். உணவில் நாட்டம் குறையும். இயந்திரத்தனமான
இந்தப் பணிச் சுமையால் கணவன், மனைவிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள், குழந்தைகளின் நலனில் அக்கறையின்மை, உணவில் நாட்டமின்மை போன்றவை ஏற்படும். இதனால்
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை தாக்கக் கூடும்.
முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் பருமன் பிரச்னையும் அதைத் தொடர்ந்து இதய
நோய் பிரச்னைகளும் ஏற்படும்.
இதைத் தவிர்ப்பதற்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் வாரத்தில்
இரண்டு மூன்று நாள்களுக்கு கிரிக்கெட், டென்னிஸ் போன்று ஏதாவது விளையாட்டுகளை
விளையாடலாம். அல்லது நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
வாரத்தில் ஒருநாள் குடும்பத்தினருடன் பொழுதைப் போக்கவேண்டும். வருடத்திற்கு இரண்டு
முறையாவது நான்கு நாள்களுக்கு குடும்பத்தோடு, ஏதாவது புதிய இடங்களுக்கு சுற்றுலா சென்று
வரவேண்டும். குடும்பத்தினரோடு நெருக்கத்தை வளர்க்கும். வருடம் முழுவதும்
குடும்பத்தினரோடு அதிகம் நேரம் செலவிடாத இழப்பை, இந்தக் குறுகிய நாள்கள் ஈடுகட்டும்!
குடும்பத் தலைவியாக இருப்பவர்களுக்கு இந்த வயதில் குழந்தைகளின் மீது அதிகமான
கவனம் இருக்கும். சிலநாட்கள், பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் போக மீதி இருந்தால், இரவில் ஓர் உருண்டை சோற்றை உண்டுவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு தூங்கிவிடுவார்கள்.
அதிகம் மீந்து போய் விட்டால், வீணாகப் போய்விடக் கூடாதே என்பதற்காக இருப்பதை எல்லாம் உண்டுவிட்டு
படுப்பார்கள். இது பெரும்பாலான இந்தியப் பெண்களின் குணமாகவே ஆகிவிட்டது. இந்த
இரண்டு முறைகளுமே தவறு. இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். வருடத்திற்கு
புதிதாக ஏதாவது ஒரு கலையை, புதிய சமையல் வகையை, கேக் தயாரிப்பது... இப்படி ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு தங்களின் எண்ணங்களை
புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
முதியவர்கள்
ரிடையர்ட் ஆனவர்களுக்கு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பது போன்ற எண்ணம்
ஏற்படும். இது தேவையில்லாதது. இன்னொரு அற்புதமான வாழ்க்கை உங்களுக்கு இருப்பதை
உணருங்கள். இளம் தலைமுறைக்கு வாழ்க்கைக்கு தேவையான நன்னெறிகளை உங்களால்தான்
பூரணமாக அளிக்கமுடியும். செடிக்கு நீர் ஊற்றுவது, அருகிலிருக்கும் சேவை மையத்திற்குச் சென்று
உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். வீட்டிலிருக்கும் பேரப் பிள்ளைகளுடன்
கார்ட்ஸ்,செஸ், பிரிட்ஜ் போன்ற விளையாட்டுகளை விளையாடுங்கள்.
இந்த விளையாட்டுகள் மூளையின் செல்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
உங்களுக்குள் அன்றாட வேலைகளில் ஒரு திட்டமிடுதலை வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டுக்கு
ஒருமுறை மருத்துவப் பரிசோதனை அவசியம் செய்துகொள்ளுங்கள். "இறந்து விடுவோமோ' என்ற பயத்தோடு பல முதியவர்கள் இருக்கிறார்கள்.
எல்லோருமே "ரிட்டர்ன்-டிக்கட்'டோடுதான் வந்திருக்கிறோம். நாள்தான் தெரியாது. மாற்றத்திற்கு எப்போதும் தயாராக
இருங்கள். இந்த வயசுக்கு அப்புறம் இதை நான் தெரிஞ்சு என்னாகப் போகுது? என்று நினைக்காதீர்கள். இதனால்தான் தலைமுறை இடைவெளி ஏற்படுகிறது. இருக்கும் வரை
சந்தோஷமாக இருங்கள்.