உங்கள் வருகைக்கு நன்றி

சொந்தமாக சம்பாதிக்க இலவசத் தொழிற் பயிற்சி

வியாழன், 27 செப்டம்பர், 2012

படிப்பை இடையிலேயே விட்டுவிட்ட பெண்களுக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்களுக்கும் இலவசமாகதொழிற்பயிற்சிகளை வழங்குகிறது சென்னையிலுள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக்

எனக்கு ஊசி நூல் பிடித்து சாதாரணமாக தைக்கக்கூடத் தெரியாது. ஆனால்  இன்று எல்லா வகையான ஆடைகளையும் தையல் இயந்திரத்தில் தைக்கிறேன். மூன்றே மாதத்தில் இந்த நிலையை நான் அடைந்திருக்கிறேன்...என்கிறார் ரமணி.

நான் பிளஸ் டூ வரை படித்திருக்கிறேன். தையல் மீதுள்ள ஆர்வத்தில் இங்கு வந்து சேர்ந்தேன். இப்போது நன்றாகத் தைக்கிறேன். சொந்தமாக தையல் கடை வைக்க விரும்புகிறேன்...” - இது காஞ்சனா.

நான் ஏழாவது வரைதான் படிச்சிருக்கேன். வீட்டு வேலை செய்துட்டு, கிடைக்கிற நேரத்துல தையல் கத்துட்டு இருக்கேன். பழைய துணிகள்ல கைப்பை செய்து விற்கிறேன். இங்க வந்ததுல இருந்து தையல்ல நிறைய கத்துக்கிட்டிருக்கிறேன்...என்கிறார் மாலினி.

இவர்களைப்போலவே பிரியங்கா, உஷா, பத்மாவதி, ராஜலட்சுமி, மகாலட்சுமி, சசிரேகா, மனோரஞ்சிதம் போன்ற பலரும் சென்னை தி.நகரில் உள்ள சாரதா மடத்தில் நடைபெறும் தையல் பயிற்சியை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்.

சென்னை தரமணியிலுள்ள டாக்டர். தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தர்மாம்பாள் பாலிடெக்னிக் மட்டுமல்லாமல், மடிப்பாக்கம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம், தி.நகரிலுள்ள சாரதா மடம், சந்தோஷ்புரத்திலுள்ள சிறுவர் பூங்கா உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன . இந்தப் பயிற்சிகளில் சேர்ந்து பயனடைந்து வருபவர்களில் பெரும்பாலானோர், பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களில் பலர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள். படிப்பைத் தொடர முடியாத ஏழை எளியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள்.

இப்பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பல்வேறு வகையான இலவச சுயதொழில் பயிற்சிகளை அளித்து வருகிறது டாக்டர். தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்திற்காக இக் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 1,800 பேர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளதுஎன்கிறார், கல்லூரி முதல்வரும் திட்டத்துக்கான தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.சொர்ணகுமார்.

சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தையல் வகுப்பு, எம்பிராய்டரி வகுப்பு, அழகுக்கலை பயிற்சி, பஞ்சு பொம்மை தயாரித்தல், பழரசம், ஊறுகாய் தயாரித்தல், கேக், பிஸ்கெட் தயாரித்தல், ஸ்கிரீன் பிரிண்டிங், மெழுகுவர்த்தி, அகர்பத்தி தயாரித்தல், வீட்டு ஒயரிங், கம்ப்யூட்டர் வகுப்புகள், பூங்கொத்துகள் தயாரித்தல், காளான் வளர்ப்பு, சணல் பொருட்கள் தயாரித்தல், புக் பைண்டிங் போன்றவற்றில் பயிற்சி அளிக்கிறோம்என்கிறார், ஒருங்கிணைப்பார் செல்வமணி.

எந்தப் பயிற்சிக்கு அதிகத் தேவை இருக்கிறதோ, அதற்கேற்ப பயிற்சி வகுப்புகள்  நடத்தப்படுகின்றன. இதற்கென ஒவ்வொரு பயிற்சி நிலையத்திலும் ஒரு பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பெற விரும்பும் பயிற்சி குறித்து இந்தப் பதிவேடுகளில் பதிவு செய்துவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு பயிற்சிக்கும் தேவையான எண்ணிக்கையில் ஆட்கள் சேரும்போது, அந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கப்படுகிறது.       

தையல், அழகுக்கலை, பஞ்சு பொம்மை தயாரித்தல், எம்பிராய்டரி, கேக், பிஸ்கெட், ஊறுகாய் தயாரித்தல் போன்ற பயிற்சிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்புள்ளது. ஒரு பயிற்சி வகுப்பில் 20 முதல் 25 பேர் வரை சேர்த்துக் கொள்கிறோம். இந்தப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, ஏழ்மை நிலையிலுள்ளவர்களும், படிப்பைத் தொடர முடியாதவர்களும் பெரிதும் பயனடைகிறார்கள்என்கிறார், சமுதாய மேம்பாட்டுத் திட்ட ஆலோசகர் குமார சாமிராஜா. இந்தப் பயிற்சிகளில் சேர்ந்து பயனடைந்த பெண்களில் பலர் இன்று சுய தொழில் தொடங்கியும், சொந்தமாக கடைகள் வைத்தும் வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.

இவர்களிடம் அழகுக்கலை பயின்ற மடிப்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.சாந்தி, தற்போது சுயமுயற்சியோடு ஹேர் ஆயில் தயாரித்து விற்று, பணம் சம்பாதித்து வருகிறார்.

தர்மாம்பாள் பாலிடெக்னிக்கில் நான் பெற்ற பயிற்சியே இதற்கு அடிப்படைக் காரணம். அங்கு அழகுக்கலை பயின்றபிறகு, என் சொந்த முயற்சியால் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு இன்று ஸ்ரீ தர்ஸினி ஹேர்ஆயில்என்ற மூலிகை எண்ணெயைத் தயாரித்து விற்று வருகிறேன். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்கூட இந்த எண்ணெயைப் பயன்படுத்தி நல்ல பலனடைந்து வருகிறார்கள்என்கிறார், சாந்தி பெருமையுடன்.

இவரைப்போலவே தமிழ்ச்செல்வி, மஞ்சுளா போன்றோரும் தங்கள் இல்லங்களிலேயே அழகு நிலையம் வைத்து நடத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர். அலங்கார நகை தயாரித்தலில் பயிற்சி பெற்ற லோச்சனி, தற்போது அலப்பாக்கத்தில் சொந்தமாக அலங்கார நகை கடை துவங்கி சம்பாதித்து வருகிறார்.

எங்களிடம் தையல் பயிற்சி பெற விரும்பி வருபவர்களுக்கு 25க்கும் மேற்பட்ட ஆடைகளை உரிய அளவுகளில் தைக்கப் பயிற்சியளிக்கிறோம். அவர்கள் சரிவரக் கற்றுக்கொண்டார்களா என்பதை அறிய, எழுத்துத் தேர்வும் நடத்துகிறோம். மூன்று மாதங்களுக்கான இப்பயிற்சியை முடித்துச் செல்லும்போது அவர்களிடையே சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்தும் அளவுக்கு தன்னம்பிக்கை வந்து விடுகிறது. பயிற்சியின்போது தையல் இயந்திரங்களின் செயல்பாடு, திடீரென அவற்றில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் முறை போன்றவை குறித்தெல்லாம் பயிற்சி கொடுக்கிறோம்என்கிறார், தையல் பயிற்சி ஆசிரியை ஜமுனா ராணி.

இங்கு வந்து பயிற்சி பெறுபவர்களுக்கு, பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. எங்களின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இலவசப் பயிற்சி பெற்ற பெண்கள் அனைவருக்கும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான விழிப்புணர்வு முகாமையும் நடத்தியிருக்கிறோம். இதில் தொழில் தொடங்குவதற்குரிய வழிமுறைகள், மானியங்கள், வட்டி விகிதங்கள் போன்றவற்றை தொழில்துறை மூலமாகவும், பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் மூலம் கடன் பெறுவதற்கான ஆலோசனைகளையும், வங்கிக் கடன் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் நிபுணர்களைக் கொண்டு எடுத்துரைத்தோம். நாங்கள் வழங்கும் பயிற்சிகளைப் பெற எந்தவிதமான கல்வித் தகுதியும் தேவையில்லை. கணினிப் பயிற்சி பெறுவதற்கு மட்டும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்என்கிறார் குமாரசாமிராஜா.

விவரங்களுக்கு:
முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்,
சமுதாய மேம்பாட்டுத் திட்டம்,
டாக்டர். தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி, சென்னை - 600 113.
தொலைபேசி : 044-22542013
நன்றி
ஜி.மீனாட்சி
புதிய தலைமுறை



கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets