உங்கள் வருகைக்கு நன்றி

சிறு அலட்சியமும் உயிரை பறிக்கும்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012


கேஸ் லீக்கை சரிசெய்துவிட்டு பற்றவைத்தபோது சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. அம்மா, மகன், கேஸ் ஏஜென்சி ஊழியர் பரிதாபமாக பலியாகிவிட்டார்கள். இந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர். இவரது மனைவி ஜோதிலட்சுமி (38). ஜோதிலட்சுமியின் அண்ணன் ரவி (45) நேற்று முன்தினம் மாலை தங்கை வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் ஜோதிலட்சுமியின் மகன் சுதேஷ் (17), எதிர் வீட்டை சேர்ந்த பாலாஜி (6) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சமையல் கேஸ் கசிவதை உணர்ந்து, கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்தனர். துரைராஜ் (35) என்ற ஊழியர் வந்தார். இவர் ஷெனாய் நகர் பாரதிபுரத்தை சேர்ந்தவர்.
கேஸ் லீக்கை துரைராஜ் சரிசெய்தார். லீக்கேஜ் சரியாகிவிட்டது. ஸ்டவ்வை பற்ற வையுங்கள்என்று கூறினார். ஜோதிலட்சுமி பற்றவைத்தார். அப்போது குபீரென தீப்பிடித்து அறை முழுவதும் பற்றியெரிந்தது. பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை கருகியது. உள்ளே சிக்கி பயங்கர தீக்காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி கீழ்பாக்கம் ஜி.ஹெச்.சுக்கு அனுப்பினர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோதிலட்சுமி, மகன் சுதேஷ், ஊழியர் துரைராஜ் நேற்று அதிகாலை இறந்தனர். ரவி, சிறுவன் பாலாஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துரைராஜுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
கார், பஸ்சைவிட மாட்டு வண்டி பாதுகாப்பானதுதான். சென்னையில் இருந்து நெல்லைக்கு போக முடியுமா? அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைத்த கார், பஸ், ஏ.சி., ஹீட்டர், சிலிண்டர்.. என எல்லா சாதனங்களும் இப்படித்தான். கழுத்து மேல் தொங்கும் கத்தியாகவே கருதி பயன்படுத்த வேண்டும். சிறிய அலட்சியம், கவனக்குறைவு என்றாலும்கூட பாதிப்பு பயங்கரமாக இருக்கும்.
கேஸ் கசிவதாக உணர்ந்தால் கதவு, ஜன்னல்களை உடனே திறந்து வையுங்கள். விபத்தை ஏற்படுத்த சிறு ஸ்பார்க் போதும் என்பதால் சுவிட்ச்களை போடுவது, அணைப்பது கூடாது. விளக்குகளை உடனடியாக அணைத்துவிடுங்கள் என்று பல எச்சரிக்கை அம்சங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம். கசிந்த வாயு வெளியேறிவிட்டதா என்பதை உறுதிசெய்யாமலேயே ஊழியர் பற்ற வைக்க சொன்னது 3 உயிர்களை பலிவாங்கிவிட்டது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets