உங்கள் வருகைக்கு நன்றி

அத்தனை நல்லவர்களும் கோழைகளாக மாறும்போது

வியாழன், 20 செப்டம்பர், 2012


கொலை, கொள்ளை சம்பவங்கள் சமீபகாலமாக தமிழகத்தில் அதிகரித்து வருவதை ஊடகங்கள் வெளிச்சமிட்டு காட்டினாலும், சமூக சேவகர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பாதையில் இந்த கோரம் நிகழ்ந்துள்ளது. 

ராஜ்மோகன் சந்திரா என்ற 53 வயது பொறியியல் பட்டதாரி ஏராளமான பொதுநல வழக்குகள் தொடர்ந்து சமூக விரோதிகள் மட்டுமின்றி தவறு செய்யும் அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோரை சட்டத்தின் பார்வையில் நிற்கவைத்திருக்கிறார். பூனைகளுக்கு ஊற்றுவதற்காக அதிகாலையில் பால் வாங்கி வந்தவரை வழிமறித்து மிளகாய் தூளை வீசியடித்து நிலைகுலைய செய்து சரமாரியாக வெட்டி சாய்த்திருக்கிறது ஒரு கும்பல். 

அவர் பையில் ஒரு கத்தியை கண்டெடுத்துள்ளது போலீஸ். மனோபாலா போன்ற தோற்றம் கொண்ட ராஜ்மோகனுக்கு கத்தியை கையாள தெரியுமா என்பதே கேள்விக்குறி. ஆனால்,போலீஸ் மீதும் வழக்குகள் தொடர்ந்தவர் போலீஸ் பாதுகாப்பை எதிர்பாராமல் கையில் தற்காப்பு ஆயுதம் வைத்திருந்தது புரிந்துகொள்ள கூடியது. மணல் கொள்ளை, மரம் வெட்டி கடத்துவது, பொது சொத்து சுருட்டுவது, கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு என பல வகையான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் சேகரிப்பில் ஈடுபட்டதால் அவருக்கு நிறையவே எதிரிகள் இருக்கக்கூடும். 

பணம்அதிகாரம்அடியாள் இந்த மூன்றில் ஒன்று இருந்தால் எதையும் சாதிக்கலாம்எந்த சட்டமும் தடுக்க முடியாது’ என்ற கருத்து வலுத்து வருகிறது. நமக்கேன் வம்பு என ஒதுங்கி நிற்பதே உத்தமம் என்ற எண்ணமும் பரவியிருக்கிறது. இந்த தேசிய நீரோட்டத்தை மீறி எதிர்நீச்சல் போடும் துணிச்சல்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களுக்கு பொதுமக்கள் வெளியில் தெரியாமலாவது ஆதரவு அளித்தால்தான் தீமைகளை ஒடுக்க முடியும். தீயவர்களை தண்டிக்க இயலும். ராஜ்மோகன் போன்றவர்கள் தங்களுக்காக வாழவில்லை. தங்களை சுற்றியிருக்கும் சமுதாயத்தின் நலனுக்காக போராடுகிறார்கள். குற்றம் செய்பவர்களின் குடும்பங்களும் அதில் அடங்கும். தப்பு நடப்பதை தடுக்க மாட்டேன்;தடுப்பவருக்கு உதவவும் மாட்டேன் என்று அத்தனை நல்லவர்களும் கோழைகளாக மாறும்போது இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets