நீங்கள் சாப்பிட்ட உணவு !
வியாழன், 18 அக்டோபர், 2012
ஆரோக்கியமான ஒரு மனிதன், சாப்பிடும் உணவு, மலமாகவும், சிறுநீராகவும் சுத்தமாக உடலில் இருந்து வெளியேற, 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரம் வரை எடுத்துக்
கொள்கிறது'' என்று அமெரிக்காவிலுள்ள மேயோ கிளினிக் ஒரு
அறிக்கையில் கூறுகிறது. நாம் சாப்பிடும் உணவு, சுமார் ஆறு மணி நேரம்
இரைப்பையிலும், சிறுகுடலிலும், இதை விட சற்று அதிகமான நேரம் பெருங்குடலிலும், ஜீரணமாக எடுத்துக் கொள்கிறது.
பச்சைக் காய்கறிகள், கீரை உணவு வகைகள் சாப்பிட்டால், அவை மிக சீக்கிரம் ஜீரணம் ஆகி விடும். ஆனால் கொழுப்பு
அதிகமாக உள்ள உணவு மற்றும் இறைச்சி சாப்பிட்டால், அவை ஜீரணம் ஆக அதிக நேரம்
எடுத்துக் கொள்ளும். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, உணவிலுள்ள சர்க்கரைச் சத்து, ரத்தத்தில் சேர்ந்து விடும்.
ஆனால் கார்போஹைட்ரேட் உணவிலுள்ள சர்க்கரைச்
சத்து, ரத்தத்தில் சேர, அதிக நேரம் ஆகும். கொஞ்சம்
கொஞ்சமாகத்தான் ரத்தத்தில் சேரும்.கார்போஹைட்ரேட் உணவுப் பொருள்களில், சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கிறது. சர்க்கரை, வெல்லம், உலர்ந்த பழங்கள், பெரிய தானியங்கள் மற்றும் சிறிய தானியங்களில்
கார்போஹைட்ரேட் சத்து அதிகமாக உள்ளது.
பேக்கரியில் விற்கப்படும் ஒரு இனிப்பு வடையை
(டோனட்) நாம் சாப்பிடும் போது அது உடனே கரைந்து, அதிலுள்ள கார்போஹைட்ரேட்
சத்து ரசாயன மாற்றம் செய்யப்பட்டு, இனிப்பு வடையிலுள்ள குளுகோஸ், உடனே ரத்தத்தில் கலக்கப்பட்டு, உடலுக்கு உடனடியாக உபயோகப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு கப்
ஓட்ஸ் கஞ்சி நாம் குடித்தால், அதிலுள்ள கார்போஹைட்ரேட்
சத்து, மெதுவாக ரசாயன மாற்றம் செய்யப்பட்டு, மெதுவாகத்தான் ரத்தத்தில் கலக்கப்படும்.
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஓட்ஸ் கஞ்சி, உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு மனிதனுடைய உடல்வாகும் ஒவ்வொரு மாதிரி அமைந்திருக்கிறது. எல்லோருக்கும் ஒரே
அளவு சாப்பாடு எடுக்காது. ஒரே உணவு எல்லோருக்கும் பிடிக்கவும் செய்யாது. உணவு
சாப்பிடும் விஷயமும், உணவின் அளவு விஷயமும்
ஒருவருக்கொருவர் மாறுபடும்.
ஒரே மாதிரியான, ஒரே அளவான உணவை, இரண்டு பேர் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
சாப்பிட்ட உணவு, இருவருக்கும் ஒரே நேரத்தில்
ஜீரணமாகும் என்று சொல்ல முடியாது. ஒருவருக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட, இன்னொருவருக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாகக் கூட
இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம்.
இரைப்பைக்கு வந்து சேர்ந்து உணவு, ஜீரணமாகி இரைப்பையை விட்டு காலியாக, சுமார் நான்கு மணி நேரம் ஆகும். உதாரணத்திற்கு சொல்ல
வேண்டுமென்றால், நாம் சாப்பிட்ட இரண்டு லட்டு, ஜீரணமாகி விட்டதா, ஜீரணம் ஆக
தோராயமாக எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? சாப்பிடுவதற்கு முன்பு ரொம்ப களைப்பாகத் தோன்றிய நமக்கு, சாப்பிட்ட பின் கொஞ்ச நேரத்தில் உடம்பு சுறுசுறுப்பாக
ஆகிறது என்றால், நாம் சாப்பிட்ட லட்டிலுள்ள
குளுகோஸ் ரத்தத்தில் கலந்து, நமக்கு சக்தியை
கொடுத்திருக்கிறது என்று அர்த்தம்.
உணவு மண்டலத்தில் ஏற்படும் செயல் மாற்றமும், ரசாயன மாற்றமும் தான் உணவிலுள்ள சத்துக்களைப்
பிரித்தெடுத்து, உடலின் பல பாகங்களுக்கும்
ரத்தம் மூலமாக அனுப்புகிறது. ரொட்டி, அரிசி சாதம், வேக வைத்த காய்கறிகள், காய்கறி சூப், வாழைப்பழம், வேகவைத்த நசித்த
உருளைக்கிழங்கு, தர்பூசணி பழம், கேரட், ஓட்ஸ் கஞ்சி, முட்டை ஆம்லெட் முதலியவை சுலபமாக ஜீரணம் ஆகக்கூடிய
உணவுகளாகும் சிலர் சாப்பிட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திலேயே `வயிற்றைக்
கிள்ளுது, வயிற்றைப் பிசையுது, வயது காலியாடுச்சு' என்பார்கள்.
சாப்பிட்ட உணவு, இரைப்பையில் ஜீரணம் ஆகும்
வேலை முடிந்து, இரைப்பையை விட்டு
சிறுகுடலுக்கு இறங்கி விட்டது என்று இதற்கு அர்த்தம். இரைப்பை காலியாகி விட்டதால், அவருக்கு பசி எடுக்க ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.
உதாரணத்திற்கு சொல்கிறேன். நாம் ஒன்பது மணிக்கு டிபன் சாப்பிட்டிருக்கிறோம் என்று
வைத்துக் கொள்வோம். சாப்பிட்டு நான்கு மணி நேரம் கழித்து, அதாவது ஒரு மணிக்கு பசி எடுக்க ஆரம்பிக்கும்.
ஒரு மணிக்கு பசி எடுக்க ஆரம்பித்தது என்றால், நாம் ஒன்பது மணிக்கு சாப்பிட்ட உணவு, ஒரு மணிக்கு இரைப்பையிலிருந்து காலியாகி விட்டது என்று
அர்த்தம் தானே தவிர, உணவுப் பாதையை விட்டு
சுத்தமாக வெளியேறி விட்டது. அதுவும் மலமாக வெளியேறிவிட்டது என்று அர்த்தம்
கிடையாது. நாம் சாப்பிடும் நேரத்துக்கும், மலம் கழிக்கும்
நேரத்துக்கும் சம்பந்தம் கிடையாது.
இன்று காலை சாப்பிடும் உணவு, நாளை காலை, அதாவது இருபத்தி நாலு மணி
நேரத்துக்கு அப்புறம்தான் சுத்தமாக மலமாக வெளியேறுமே தவிர, அதற்குள்ளாக ஆகாது. காலையில், வெறும் வயிற்றில், இரைப்பை காலியாக இருக்கும் போது, நாம் தண்ணீர் குடித்தால், அந்தத் தண்ணீர் தொண்டை
வழியாக ஒரு நொடியில் உள்ளே இறங்குவதை நம்மால் உணர முடியும். அதே மாதிரி சில
நொடியில் இரைப்பையில் வந்து தண்ணீர் விழுவதையும் நம்மால் உணர முடியும்.
அதிலும் மிகக் குளிர்ந்த நீரோ, ரோஸ் மில்க்கோ நாம் குடிக்கிறோம் என்றால், வயிற்றின் மேல் பகுதி (அதாவது இரைப்பை இருக்கும் இடம்)
ஜில்லென்று ஆவதையே நம்மால் நன்கு உணர முடியும். அதே மாதிரி சூடான தண்ணீரையோ, சூப்பையோ குடித்தால், வயிறு சுள்ளென்று சில
நொடிகளில் எரிவதையும் நம்மால் நன்கு உணர முடியும்.
எதற்கு இதைச் சொல்கிறேனென்றால், திரவ உணவுகள், குடிக்கின்ற அந்த
நேரத்திலேயே இரைப்பைக்கு வந்து சேர்ந்து விடும். திட உணவுகள் தான் கொஞ்ச நேரம்
எடுத்துக் கொள்ளும். அதே மாதிரி, திரவ உணவுகள், மிக சீக்கிரமாகவே இரைப்பையிலிருந்து, சிறுகுடலுக்கு இறங்கி விடும். நன்றாக வடிகட்டி, தண்ணீர் போல இருக்கும் பழச்சாறு, சுமார் பதினைந்திலிருந்து இருபது நிமிடத்திற்குள்
இரைப்பையில் ஜீரணமாகி, குடலுக்குள் போக ஆரம்பித்து
விடும்.
கெட்டியான பழச்சாறு, காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை எல்லாம் சுமார் 20 லிருந்து 30 நிமிடம் எடுத்துக் கொள்ளும்.
ஆப்பிள், செர்ரி போன்ற பழங்கள் சுமார் 40 நிமிடம் எடுத்துக் கொள்ளும். தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் சுமார் 40 நிமிடம் எடுத்துக் கொள்ளும். காலிபிளவர், சோளம் முதலியவை சுமார் 45 நிமிடம் எடுத்துக் கொள்ளும்.
கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் சுமார் 50 நிமிடம் எடுத்துக் கொள்ளும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு ஆகியவை சுமார் 1 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். அரிசி, ஓட்ஸ் ஆகியவை சுமார் 11/2 மணி நேரமும், சோயாபீன்ஸ் சுமார் 2 மணி நேரமும், பால், பாலாடைக்கட்டி சுமார் 2 மணி நேரமும், முட்டை 45 நிமிடமும், மீன் அரை மணி நேரமும், கோழி 2 மணி நேரமும், வான் கோழி 2 1/4 மணி நேரமும், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சுமார் 3 லிருந்து 4 மணி நேரமும் எடுத்துக்
கொள்ளும்.
ஒவ்வொரு உணவும் ஜீரணமாகும் நேரம் தெரிந்தால், நாம் அதற்கேற்றவாறு அடுத்த வேளை உணவை சாப்பிடுவோமல்லவா!
அதற்காகத்தான் இத்தனை விளக்கம். வயிறு மந்தமாக இருக்கிறது என்றால், நீங்கள் சாப்பிட்ட உணவு இன்னும் இரைப்பையிலிருந்து கீழே
இறங்கவில்லை என்று அர்த்தம். சாப்பிடும் உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றால், நம்மால் அடுத்த வேளை சாப்பிட முடியாது.