விழிப்புடன் இருந்து பார்த்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.
செவ்வாய், 30 அக்டோபர், 2012
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 80 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பகப்
புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது மிக எளிதாக தவிர்க்கக் கூடிய பிரச்னை.
ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் மார்பகப் புற்று நோயால்
பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. நாற்பது வயதிற்கு மேல், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை முழுமையாக மார்பகப் பரிசோதனை
செய்து கொள்ள வேண்டியது முக்கியம். மார்பகப் புற்றுநோயை கண்டறிய, "மேமோகிராம்' கருவி பயன்படுகிறது. இந்த பரிசோதனை, நவீன வசதியுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வந்துவிட்டது. இதில் எந்தச்
சிரமமும் வலியும் இல்லாமல், பரிசோதனை செய்யலாம். மொத்தமே எட்டு நிமிடங்கள் தான் ஆகும்; மிகவும் துல்லியமாக முடிவைத் தெரிந்து
கொள்ளலாம்; செலவும் அதிகம் இல்லை;
3,500 ரூபாய் வரை செலவாகும்.பரிசோதனையின் போது
தரப்படும் கதிரியக்க அளவைவிட இதில் குறைவு. நோய் வந்த பின், தாமதமாகக் கண்டுபிடித்து சிகிச்சை செய்வதை விட, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து
கொள்ளும் போது, அவஸ்தைகளும், செலவுகளும் வெகு குறைவே. தொடர்ந்து கவனமாக இருந்தால், ஒரு வேளை புற்று நோய் பாதிப்பு வந்தாலும், மார்பகங்களை இழக்காமல் சிகிச்சை செய்து கொள்ள
முடியும். மார்பகப் புற்றுநோய் ஏன் வருகிறது என்பதற்கு, இதுவரை எந்த சரியான காரணமும்
கண்டுபிடிக்கப்படவில்லை. நம் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க மாற்றத்தால், பெண்கள் சீக்கிரமே வயதிற்கு வருவது, மாதவிடாய் சுழற்சி, 50 வயதிற்கு மேலும் தொடர்வது, "ஒபிசிட்டி' எனும், உடல் எடை அதிகரிப்பு, தாய்ப்பால் தராமல் இருப்பது என்று எதுவாக வேண்டுமானாலும்
இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமலும், என்ன காரணம் என்று தெரியாமலும், சிலருக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம். எனவே, விழிப்புடன் இருந்து நம் உடலை பார்த்துக்
கொள்வது தான் புத்திசாலித்தனம்.