சுகாதாரத்துக்கு சவால் விடும் கையேந்தி பவன்கள்
ஞாயிறு, 7 அக்டோபர், 2012
சாலையோர
தள்ளுவண்டிகளில் விற்கப்படும் சிற்றுண்டிகள் தரமற்றும், பெரும்பாலான கடைகள்
பிளாட்பாரங்களில் கழிவுநீர் ஓடும் இடங்களிலும் இருப்பதால், அங்கு சிற்றுண்டி
உண்பவர்கள் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் சிற்றுண்டி விற்பனை கடைகள் புற்றீசல்
போல பெருகி வருகின்றன. காலையில் சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவு நேரங்களில் அசைவ
சாப்பாடு, பிரியாணி, பரோட்டா, இட்லி, தோசை போன்ற உணவுகள் தள்ளுவண்டியில் விற்கப்படுகின்றன. இந்த உணவுகள் மலிவான
விலையில் கிடைப்பதால் பலரும் வாங்கி சாப்பிடுகிறார்கள். கூலித் தொழிலாளிகள் முதல்
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் வரை தள்ளுவண்டி கடைகளில் கூட்டம், கூட்டமாக நின்று
சாப்பிடுகின்றனர்.
சாலையோரத்தில் விற்கப்படும் உணவுகளில் காற்றில் அடித்து வரும் தூசி படிகிறது.
ஈ மொய்க்கிறது. குடிப்பதற்காக கொடுக்கப்படும் தண்ணீரும் சுத்தமாக இல்லை.
பாத்திரங்களும் இல்லை. பெரும்பாலான தள்ளுவண்டி கடைகள் பாதாள சாக்கடை மீது
போடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப்பில் வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்துக்கு அருகிலேயே
பலர் சிறுநீர் கழித்து துர்நாற்றம் வீசுகிறது. கடையை சுற்றி கண்ட இடத்தில் கை
அலம்புகின்றனர். இதனால் பெரும்பாலான தள்ளுவண்டி கடை இருக்கும் இடத்தில் கழிவுநீர்
தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்த சூழ்நிலையில் விற்கப்படும் உணவை
சாப்பிடுபவர்கள், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு
நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர். இதுகுறித்து, டாக்டர் ஒருவர்
கூறுகையில், ‘சாலையோர கடைகளில் விற்கப்படும் உணவில் அதிக காரம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு
நாள் பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவை
சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும். தினமும் 5 பேராவது வயிற்று
வலியுடன் சிகிச்சைக்கு வருகின்றனர் என்ன சாப்பிட்டீர்கள்
என்று கேட்டால், தள்ளுவண்டி கடையில் பரோட்டா சாப்பிட்டதாக
கூறுகின்றனர். அதனால், சுகாதாரமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்
என்றார். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வேலைக்கு போகும் வழியில் சாப்பிட ஏதாவது
கிடைத்தால் போதும் என்ற நிலையில், சாலையோர உணவகங்களை பெரும்பாலும் இளைஞர்கள்
நாடுகிறார்கள் என்கின்றனர். தள்ளுவண்டி உணவகங்களில்
வெளியேற்றப்படும் கழிவுநீரும் மழைநீர் வடிகால்வாயில் விடப்படுகிறது. இது, ஒரு பக்கம் கொசுவை
வளர்க்கிறது. சென்னையில் மட்டும் தள்ளுவண்டி உணவகங்கள் 3,000 இருப்பதாக மாநகராட்சி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே, பொது சுகாதாரத்தை உறுதிபடுத்தும் வகையில்
இதுபோன்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்த வேண்டும் பலரும்
வலியுறுத்தி வருகின்றனர்.
சர்வர்களுக்கு லைசன்ஸ்
ஓட்டல்களில் சர்வர் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். சிறிய ஓட்டல் முதல்
பெரிய ஓட்டல்கள் வரை, வேலை செய்யும் சர்வர்களுக்கு லைசன்ஸ்
வழங்கப்படுகிறது. லைசன்ஸ் வழங்குவதற்கு முன் அவர்களுக்கு நோய் தாக்குதல் ஏதாவது
இருக்கிறதா என்று உடல் பரிசோதனை செய்யபடுகிறது. ஆரோக்கியமாகவும் தூய்மை பற்றி
நன்கு அறிந்தவர்களுக்குமே சர்வர் லைசன்ஸ் வழங்கப்படுகிறது. சுமார் 20 ஆயிரம் பேருக்கு
இதுபோன்ற லைசன்சை மாநகராட்சி வழங்கியுள்ளது. லைசன்ஸ் இல்லாதவர்களை கண்டுபிடித்து
நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரோக்கியமானவர்களை ஓட்டல் சர்வராக நியமிக்க வேண்டும்
என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.