சோதனையில் வெற்றி
ஞாயிறு, 28 அக்டோபர், 2012
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக்கொண்டதன்
காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். உங்களுடைய இந்த இறுதி வீடு மிக்க
நல்லதாயிற்று என்று கூறுவார்கள்'' (அல்குர்ஆன் 13:24).
அகிலமனைத்தையும் படைத்த ரப்புல் ஹிஸ்ஸத் தன் படைப்பினத்தின் மீது மிகுந்த
அன்பும்,அருளும் கொண்டவன். அவற்றின் உணவிற்கும்
வாழ்விற்கும் பொறுப்பேற்றுக்கொண்டவன். இருந்தும் சிலர் வறுமையிலும், துன்பத்திலும், துயரத்திலும் உழல்வதும், துவள்வதும் பலர் செல்வத்திலும், செல்வாக்கிலும் இன்பமாய் மேம்பட வாழ்வதும்
இயற்கையின் பால்பட்ட நியதி என்றும், விதி வந்த வினைகள் என்றும் கொண்டு இதுவரை உலகம்
இயங்கிக்கொண்டிருக்கிறது.
அல்லாஹ்விற்கு தன் அடியானை தண்டிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை.
ஆனால் மனிதன் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக சிறுசிறு தண்டனைகளை, அதுவும் அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளும் வகையில்
மட்டும் அனுபவிக்கச் செய்து விட்டோமேயானால் நாளை மகஸரில் பாவமற்ற மனிதனாக கேள்விக்
கணக்குகள் இலேசாக்கப்ட்ட நிலையில் சுவர்க்கம் என்ற அற்புதப் பரிசை கொடுக்கலாமே
என்றுதான் அல்லாஹ் ஆசை கொள்கிறான்.
பொன், நெருப்பில் புடம் போட்டால்தான் பொலிவு பெறும்.
மனிதனும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டால்தான் புனிதம் பெற முடியும். அந்த சோதனையில்
இறைவன் மீது கொண்ட நம்பிக்கையின் வேர் எவ்வளவு ஆழமாக உள்ளது, அதன் அஸ்திவாரம் எவ்வளவு உறுதியாக உள்ளது
என்பதைத்தான் அல்லாஹ் கூர்ந்து நோக்குகிறான். அந்த சோதனையில் வெற்றி பெற்று
விட்டோமேயானால் நாம் ஈடேற்றம் பெற்றவர்களாகி விடுவோம். நமக்குக் கிடைக்கும் இறுதி
வீடும் மிக்க நல்லதாகிவிடும்.
எந்த சோதனையிலும் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையில் தளர்வுகொள்ளக் கூடாது.
""உங்களை பயத்தைக் கொண்டும், பசியைக் கொண்டும், உயிர் பொருள் இழப்பைக் கொண்டும் உங்கள்
வளத்தைக் கொண்டும் சோதிப்போம். அந்த சோதனையை யார் தன் பொறுமையின் மூலம் வெற்றி
கொள்கிறார்களோ அவர்கள் எண்ணியறியாதஅளவிற்கு வெகுமதியையும் வழங்குவோம்'' என்றும் சூரா அல் பகராவிலே மிக அழகாக
எடுத்துரைக்கிறான் அல்லாஹ். நாளைக்கு மறுமையில் நமக்கு நல்ல கூலியை வழங்கவும், இவ்வுலகில் தன் படைப்பு தன் மீது எந்த அளவுக்கு
உறுதியான நம்பிக்கை வைத்திருந்தது என்பதை அளந்து பார்ப்பதற்காகவும்தான் சின்ன
சின்ன துன்பங்களைத் தந்து சோதிக்கிறான்.
""பொறுமையுடன் காத்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை
வீணாக்கிவிட மாட்டான்'' (அல்குர் ஆன் 11:115).