சில்லரை வர்த்தகத்தில், வெளிநாட்டு நிறுவனங்களால் பயன் ?
ஞாயிறு, 13 மே, 2012
சில்லரை வர்த்தகத்தில், வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்யலாம் என்ற ஆபத்தான முடிவை, மத்திய அரசு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செய்துவிட்டது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், இந்த நிறுவனங்களால் மக்களுக்கும், அரசுக்கும் பெரிய லாபம் ஒன்றும் இல்லை; இவை செய்த தீமை ஏராளம்! இந்நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட பொருளை விற்பதில்லை. மளிகை, காய்கறி, பழங்கள், துணி வகைகள், இன்னும் லாபம் வரும் இடங்களில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், ஏன் சில இடங்களில், டூவீலர் மற்றும் கார்களுக்கான உதிரி பாகங்களும் விற்கின்றன. அதேபோல, அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக உணவகமும் உண்டு. சென்னை, ரங்கநாதன் தெரு கடைகள் எல்லாம், இவற்றைப் பார்த்து தான் கடந்த, 10 வருடங்களாக தங்கள் வியாபார வடிவமைப்பை செய்து கொண்டன. ஆனால், இவற்றை சிறு கடைகளால் நிறைவேற்ற முடியாது. இந்நிறுவனங்கள், முக்கால்வாசி தங்கள் சொந்த, "பிராண்டை' தான் விற்கின்றன. உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டு விடும் தன்மை கொண்டவை. உணவுப் பொருட்களைத் தவிர, மற்ற அனைத்தும் சீனா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன், காலாவதியான, குழந்தைகளுக்கான உணவை, இவர்கள் விற்றதாக, பெரிய புயல் கிளம்பியது. இறுதி விசாரணையில், இவர்கள் அதை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததாக தெரிய வர, அனைத்தும் அழிக்கப்பட்டு, இறக்குமதியும் தடை செய்யப்பட்டது. அதேபோல் துணிகளை வங்கதேசம், ஏழை மத்திய அமெரிக்க நாடுகளான குவாதமாலா, நிகராகுவா போன்ற நாடுகளில், குழந்தை தொழிலாளர்களை வைத்தும், கொத்தடிமைகளை வைத்தும் தைப்பதாக புகார் உண்டு. விவசாயிகளுக்கு நன்மை என்று, அரசு கூறுவது மிகப்பெரிய பொய். இவர்களுடைய லாபத்திற்காக ஜி.எம்., விதைகள் மற்றும் அதிகமான இறைச்சிக்காக கோழிகளுக்கும், ஆடுகளுக்கும், இறைச்சி கழிவினால் செய்யப்பட்ட தீவனத்தை தருவதாகவும் புகார் உண்டு. இதனால், மண்ணின் வளம் கெடுவதுடன், இறைச்சியினால், "இ-கோலி' நோய் தொற்றும் ஏற்படும். அமெரிக்காவில், இந்நிறுவனங்களால் அழிந்த சில்லரை வியாபாரிகள் பல லட்சம் பேர். அவர்கள் ஒரு கடை திறந்தால், அந்த பகுதியிலுள்ள, 90 சதவீத கடைகள் மூடப்பட்டு விடுவதாக புகார் எழுந்துள்ளது. அதே நிலைமை இங்கேயும் வரலாம். இக்கடைகளில், தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமையும் இல்லை. "ஷிப்ட்' முறை சரியாக வகுக்கப்படவில்லை. "ஓவர்டைம்' போன்ற அம்சங்கள் மிகக் குறைவு. அனைத்து பொருட்களும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டால், உள்ளூர் தயாரிப்புகள் காணாமல் போகும். அரசின் இந்த திடீர் முடிவால், மக்கள் எந்த பயனும் அடைய மாட்டார்கள். உடனடியாக, அரசு இதை திரும்பப் பெற வேண்டும்.