உங்கள் வருகைக்கு நன்றி

மீலாது விழா ஒரு பார்வை

சனி, 26 மே, 2012



மீலாது நபி , நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளது.ரபீஅல் அவ்வல் மாதம் 12 ஆம் தேதி அன்று தான் நபிகள் நாயகம் பிறந்தார்கள் எனவும் , ரசூலுல்லா பிறந்த நாளை கொண்டாடுவது சிறப்பிற்குரிய காரியம் என்ற வகையில் இந்த மீலாது விழா கொண்டாடப் படுகிறது. மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும்,மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும், என்று இந்த பிறந்த நாள் விழா கொண்டாடும் மக்கள் கூறுகின்றனர்.இந்த மீலாது விழா இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு நாம் நடுநிலையோடு அணுகுவதே சிறந்ததாகும்.மீலாது விழா கொண்டாட்டத்தில் உள்ள காரியங்கள் அனைத்தும் குர்ஆன் ஹதீஸுக்கு முரன்படுகிறதா இல்லையா என்று பார்த்தோமேயானால் இதற்க்கு ஒரு தெளிவான ஒரு விடை கிடைக்கும்.

நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாள் எப்பொழுது?

மீலாது விழா கொண்டாடக் கூடியவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரபீஅல் அவ்வல் மாதம் 12 தேதி பிறந்தார்கள் என்ற அடிப்படையில் தான் இந்த விழா கொண்டாடப் படுகிறது.ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த தேதியில் தான் பிறந்தார்கள் என்று எந்த ஹதீஸ் நூலிலும் , வரலாற்று புத்தகத்திலும் பதிவு செய்யப் படவில்லை.நபிகள் நாயகம் தன்னை நபி என்று உலகுக்கு அறிமுகப் படுதியப் பிறகுதான் அவர்களை மக்கள் கவனிக்கத் தொடங்கினார்களே தவிர அவர்களுடைய முந்தய காலத்தை எவரும் பதிவு செய்யவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) என்று பிறந்தார்கள் என்றே தெரியவில்லை என்று சொன்னால் எப்படி பிறந்தநாள் கொண்டாடுவது?

இஸ்லாத்தின் அடிப்படை

ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தை மார்க்கம் என்று செய்தானேயானால் அது அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதரோ அந்த காரியத்தை கூறியிருக்க வேண்டும் அல்லது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செய்து காட்டி இருக்க வேண்டும் அல்லது அனுமதியாவது அளித்திருக்க வேண்டும்.இதை கீழ் காணும் நபிமொழிகள் நிருபிக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த(மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)


செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)


இஸ்லாத்தின் அடிப்படை இப்படி அமைந்திருக்க , இந்த மீலாது நபி என்ற ஒரு விழாவை பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் எங்காவது கூறி இருக்கிறானா என்று தேடி பார்த்தல் அப்படி ஒரு வார்த்தை கூட தென்படவில்லை.அல்லாஹ் சொல்லவில்லை என்றாலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களாவது இந்த விழாவை பற்றி கூறியிருப்பார்கள் என்று பார்த்தல் , நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தனக்கு பிறந்த நாள் கொண்டாட சொன்னதும் இல்லை அவர் யாருடைய பிறந்தநாளையும் கொண்டாடவும் இல்லை.மேற்கூறிய ஆதாரங்களை வைத்து பார்கும் போது இந்த விழா நபிகள் நாயகத்திற்கு பிறகு ஏற்படுத்தப் பட்டது என்பதை நீங்கள் உணரலாம். "பாத்திமத்" என்ற யூத வழிதோன்ரலில் வந்த ஒரு வழிகெட்ட பிரிவினர் தான் இந்த மீலாது விழாவை இஸ்லாத்தில் புகுத்தி இருக்கிறார்கள் என்பது வரலாறு.


இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)

மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என வாதிடும் போது மேலுள்ள அருள்மறை வசனத்தை மறுத்தவர்களாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப் படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களா கின்றோம்.

பிறந்தநாள் கொண்டாடலாமா?

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.

இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.


3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
''
உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456)

யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)

மேல்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் ஒருவருடைய பிறந்த நாளை கொண்டாடுவது நபிகள் நாயகம் அவர்களின் சொல்லுக்கு முரணாக அமைகின்றது.

நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?

இந்த மீலாது விழாவை ஆதரிக்கக் கூடியவர்கள் , இந்த ஒரு செயல் ரசூளுல்லாவிர்க்கு பின்னால் ஏற்படுத்தப் பட்டது தான் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.ஆனால் அவர்கள் எடுத்து வைக்கக் கூடிய வாதம் , ரசூளுல்லாவை புகழ்வது தவறா ?

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் ஷபாஅத்' எனும் பரிந்துரை செய்பவர்களாகவும், மகாமுன் மஹ்மூத்' என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.

அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சிறப்புகள் தமக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவது மிகப் பெரும் குற்றமாகும்.

இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

"ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாவின் மகன் முஹம்மத் ஆவேன்; மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.(நூல்: அஹ்மத் 12093, 13041)

கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்!(நூல்: புகாரி 3445)

நபிகள் நாயகத்தின் உத்தரவுக்கு மாற்றமாக, வரம்பு மீறுவது உண்மையில் புகழ்வதாகாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகி விடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்ட பின், பிரச்சனைக்குள் இப்போது நேரடியாகவே நுழைவோம்.

இவர்கள் மவ்லிது எனும் பாடல் வரிகளை வைத்தே அல்லாஹ்வின் தூதரை புகழ்வதாக கூறுகிறார்கள்.அந்த மவ்லிது வரிகள் நிச்சயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்வதாகவே அமைந்திருக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மையான தனிச் சிறப்புகளைச் சொல்லவே நேரம் போதவில்லை,அவர்களின் ஒழுக்கம்,தூய்மையான அரசியல்,சிறந்த இல்லறம்,வணக்க வழிபாடு,அவர்களின் அருங்குணங்கள்,அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமை,அவர்களின் வீரம், தியாகம் போன்ற எண்ணற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள் மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம் (ரலி) இறந்த போது ஏற்பட்ட கிரஹணத்திற்கு, ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தைக் காரணமாகக் காட்டினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக் கண்டித்துள்ளனர்.நூல்: புகாரி 1040, 1041, 1042, 1043, 1044, 1046, 1047, 1048, 1053, 1057, 1058, 1059, 1060, 1061, 1063, 3201, 3202, 3203,

பொய்களைக் கூறி நரகத்திற்கும் ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்!

மிலாது விழாவில் உள்ள மேலும் சில அனாச்சாரங்கள்

மீலாது நபி அன்று மட்டும் தான் உலமாக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் பொது பயான் நடத்துவதை காண முடியும்.மார்க்க பயான் என்று தான் பெயரே தவிர கூறுவது அனைத்தும் உண்மைக்கு புரம்பானதாகவே இருக்கும். மார்க்கத்திற்கு எதிரான இந்த விழாவைதான் பட்டாசு கொளுத்தியும் ,இனிப்பு வழங்கியும்,இஸ்லாம் தடுத்துள்ள இசை கருவிகளை பயன்படுத்தி பாட்டு கச்சேரி நடத்துவதும், புது ஆடை அணிந்தும் இன்னொரு பெருநாளாக கொண்டாடுகிறார்கள்.கொண்டாடுவதர்கென்று நமக்கு அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட நாட்கள் நோன்புப் பெருநாளும் ஹஜ் பெருநாளும் தவிர வேறில்லை.

عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْأَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ (أبو داود /1134)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) வந்த போது அங்குள்ள மக்கள் இரு நாட்களை ஓதுக்கி விளையாடுவதைக் கண்டார்கள். இந்த இரு நாட்களும் என்ன (எதற்காக விiளாடுகின்றீர்கள்) என கேட்ட போது அதில் "ஜாஹிலிய்யா" அறியாமைக்காலத்தில் விளையாடும் வழக்கமுடையோரக இருந்தோம் எனக் கூறினர். அவ்விரு நாட்களைவிட சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு பகரமாக தந்துள்ளான். (அவைதாம்) ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்பு பெருநாளும் எனக் கூறினார்கள். (அபூதாவூத். ஹதீஸ் இல: 1134).

எனவே அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையையும் பின்பற்றி நேரான பாதையில் செல்லுங்கள். இவ்வாறு, இந்த பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொண்டாட்டத்தை புறக்கணியுங்கள்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets