மாவு பவுடரில் தூள் கிளப்புங்க!
செவ்வாய், 22 மே, 2012
முதுமையில்
எட்டிப் பார்க்கிற பல அழகுப் பிரச்னைகளும் இன்று டீன் ஏஜிலேயே வருகின்றன. முடி
கொட்டுவது, நரைத்துப் போவது எனக் கூந்தலிலும், பருக்கள், கருமை, சுருக்கங்கள்
என சருமத்திலும் ஆளாளுக்கு ஆயிரம் பிரச்னைகள்.
டீன் ஏஜில் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் நம்பமுடியாத தோற்றம் ஜெயலட்சுமிக்கு. தனது இளமையான தோற்றத்துக்குக் காரணம், தான் உபயோகிக்கிற இயற்கை அழகுசாதனங்கள் என்கிற ஜெயலட்சுமி, உடம்பு தேய்த்துக் குளிக்க நலங்கு மாவு, தலைக்குத் தேய்த்துக் குளிக்க சீயக்காய், கூந்தலை இயற்கையான முறையில் கருப்பாக்கும் ஹென்னா பவுடர், இன்னும் பருக்களை விரட்டும் பேக், சரும நிறத்தைக் கூட்டும் பேக் என இயற்கை அழகுசாதனத் தயாரிப்புகளில் எக்ஸ்பர்ட்!
‘‘எனக்கு கேரளா பக்கம். கேரளத்துப் பெண்களோட சரும, கூந்தல் அழகைப் பத்தி சொல்லித் தெரிய வேண்டாம். தினம் தலைக்குத் தடவற எண்ணெய் ஆகட்டும், தேய்ச்சுக் குளிக்கிற பொடி ஆகட்டும்... ஏதாவது மூலிகை கலந்ததாத்தான் இருக்கும். சென்னைல செட்டிலான பிறகும் நான் எங்க ஊர் வழக்கப்படி அதையே உபயோகிச்சிட்டிருந்தேன். அக்கம்பக்கத்துல உள்ளவங்க, தெரிஞ்சவங்க கேட்டாங்கனு கொடுக்க ஆரம்பிச்சு இன்னிக்கு அதுவே எனக்கு முழுநேரத் தொழிலாயிடுச்சு’’ என்கிற ஜெயலட்சுமி, விருப்பமுள்ளோருக்கு இத்தொழிலில் ஈடுபட வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘மூலிகைகள், நலங்கு மாவுக்கான பொருள்கள் எல்லாம் பாரிமுனைல மொத்த விலைக்குக் கிடைக்கும். அது தவிர பேக்கிங் கவர், சீலிங் மிஷின், வெயிட் மிஷின்... எல்லாம் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு போதும்.’’
என்னென்ன வெரைட்டி? என்ன ஸ்பெஷல்?
‘‘மூலிகை சீயக்காய் பொடி தலைமுடி உதிர்வு, பேன் தொல்லை, பொடுகுக்கெல்லாம் நிவாரணம் தரும். முகத்துக்கான பேக்ல 18 மூலிகை சேர்த்துப் பண்றேன். நிறம் கூடும். பருக்களுக்கான பேக், பருக்களையும் தழும்புகளையும் விரட்டும். ஹென்னா பேக் நரையை மறைச்சு, பொடுகு, புழுவெட்டுக்குத் தீர்வு தரும். நலங்கு மாவு, வியர்வை நாற்றத்தைப் போக்கி, சருமநோய் வராம தடுக்கும். கெமிக்கல் கலக்காததால, எல்லாருக்கும் ஏத்துக்கும்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘நாட்டு மருந்துக் கடைகள்ல விற்பனைக்குத் தரலாம். பியூட்டி பார்லர்களுக்கு சப்ளை பண்ணலாம். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சில அத்தனையும் கத்துக்க 400 ரூபாய் கட்டணம்.’’